உற்சாகம், உத்வேகம், உன்னதம் என்று பல்வேறு உணர்வுநிலைகளில் இருக்கும் சாத்தியத்தை ஏதேனும் ஒன்றில் இருந்து பெறுவது ஆச்சர்யமான விஷயம்.
அப்படியொரு சிறப்புக்குரியது செஸ் எனப்படும் சதுரங்க ஆட்டம். அது பற்றித் தெரியாதவர்களுக்கு, அதனை விரும்பாதவர்களுக்கு ஒரு வேப்பங்காய் போலத் தெரியலாம்.
ஆனால், அதைவிட இந்த உலகில் ஆகச்சிறந்தது எதுவுமில்லை என்று நினைப்பவர்களுக்கு அது ஒரு அமிர்தம். அதனை விளையாடும் தருணங்கள் பொக்கிஷமாக மனதில் பூட்டி வைக்கலாம் எனும் அளவுக்குப் புத்துணர்வைத் தரக்கூடியது.
அன்று முதல் இன்று வரை..!
செஸ் விளையாடும் பழக்கம் தொடங்கியது ஆறாம் நூற்றாண்டிலா, எட்டாம் நூற்றாண்டிலா அல்லது அதற்கு முன்னிருந்தே அது இருந்து வருகிறதா? இந்தக் கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை.
உலகின் வெவ்வேறு பகுதிகளில் கிடைத்த தொல்லியல் ஆய்வு முடிவுகள், செஸ் விளையாடும் வழக்கம் நம் முன்னோர்களிடையே இருந்து வந்ததை மட்டும் உரக்கச் சொல்கின்றன.
அந்தந்த பகுதிகளுக்குத் தகுந்தவாறு, அவற்றை ஆடும் முறைகளும் வேறுபட்டதாக உள்ளன.
அந்த வகையில், இன்று நாம் காணும் செஸ் பலகையும் ஆடும் முறையும் வேரூன்றி சுமார் நூறாண்டு காலம் இருக்குமென்று சொல்லப்படுகிறது.
போரில் ஒருவரையொருவர் எதிர்த்து வெற்றி காண்பதற்கு முன்னதாக, எதிரியை வீழ்த்தும் வியூகங்களைத் திட்டமிடுவதற்கான ஒரு முன்னோட்டமாக இவ்விளையாட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது, போர் என்றால் வீரமும் மூர்க்கமும் முரட்டுத்தனமும் மட்டுமே தேவை என்று கொள்ளக்கூடாது; அவற்றோடு புத்தியைத் தீட்டித் திட்டமிடுவதும் அதனைச் செயல்படுத்துவதும் முக்கியம் என்பதை உணர்த்த, ஒரு கல்வி முறையாகவும் செஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதனாலேயே சிப்பாய், குதிரை, யானை போன்றவை செஸ் விளையாட்டில் பயன்படுத்தப்படுவது, இந்தியாவில் தான் அது தோன்றியிருக்க வேண்டும் என்ற வாதத்திற்கு வலு சேர்க்கிறது.
அன்று முதல் இன்று வரை, செஸ் விளையாடுவதென்பது ராஜதந்திரங்களை கைக்கொள்ளும் ஒரு கருவியாகவே இருந்து வருகிறது. அதற்காக, அரசாட்சி புரிபவர்களுக்குத்தான் அது தேவை என்றில்லை.
சாதாரண மனிதர்களும் கூட, லௌகீக வாழ்க்கையில் சுமூகமான பயணத்தை மேற்கொள்ள செஸ் விளையாட்டு உதவிகரமாக இருக்கும். அந்த லாவகத்தைச் சொல்லித் தருவதுதான் இவ்விளையாட்டின் மகத்துவம்.
திறக்கும் கதவுகள்!
செஸ் விளையாடும்போது நாம் பயன்படுத்தும் உத்திகளால் மனதின் பூட்டப்பட்ட அறைகள் திறக்கின்றன; அவற்றில் இருந்து புதிது புதிதாக சிந்தனைகள் வெளிவருகின்றன. அதுவே பல திறன்களை நாம் பெறக் காரணமாகின்றன.
இயல்பாகவே குழந்தைப் பருவம் என்பது பல்வேறு கற்றல்களை உள்ளடக்கியது.
செஸ் விளையாட்டு அதிலொன்றாகும்போது, நாம் பெறும் பலன்கள் ஏராளம். செஸ் விளையாடுவதைத் தொடர்ந்து மேற்கொள்ளும்போது, குழந்தைகளின் ‘ஐக்யூ’ எனப்படும் நுண்ணறிவுத்திறன் அதிகமாகிறது.
எந்தவொன்றையும் ஆராய்ந்து நோக்கும், அதிலிருக்கும் சிடுக்குகளைக் கண்டறியும், அவற்றுக்குத் தீர்வு காணும் திறனை உருவாக்குகின்றன.
புத்திசாலித்தனதோடு, புதிதாகப் பெறும் அறிவைச் சேர்த்துவைக்கும் திறனையும் வலுப்படுத்துகிறது இவ்விளையாட்டு.
தொடர்ச்சியாக செஸ் விளையாடும் ஒருவரால், எந்தவொன்றிலும் கூர்மையான கவனத்தைச் செலுத்த முடியும்.
மிகமுக்கியமாக, ஒருவரது கற்பனைத்திறனை அதிகரிக்க செஸ் மிகவும் அவசியம்.
ஏனென்றால், நம் மூளையில் வலது, இடது பக்கங்கள் இரண்டையும் ஒரே நேரத்தில் செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தை உண்டாக்குகிறது இவ்விளையாட்டு.
அது நிகழும்போது, கற்பனைத்திறன் மிகுதியாகத் தூண்டப்படும். அது மட்டுமல்லாமல் திட்டமிடல், வேகமாகச் செயலாற்றுதல், முடிவுகளை எடுப்பதில் தெளிவுடன் இருத்தல் போன்றவற்றைப் போதித்தருளும் போதி மரமாகவும் இதனைக் கைக்கொள்ளலாம்.
ஆடுவோம்.. கூத்தாடுவோம்..!
செஸ் விளையாடும்போது, நமக்கு மாபெரும் சொத்தொன்று கிடைக்கிறது. அதன் பெயர் பொறுமை. என்னதான் வேகமாக ஆடும் செஸ் விளையாட்டுப் பிரிவுகள் வந்தாலும், பாரம்பரியமாக ஆடும் சதுரங்கத்திற்கு இணை கிடையாது.
எதிராளியின் ஒரு ‘மூவ்’ என்னவெல்லாம் நிகழ்த்தும் என்பதை மனக்கண்ணில் ஓட்டிப் பார்த்து, அடுத்தடுத்த அசைவுகளை நாமாக இரு பக்கமும் மாறி மாறி யோசித்து, இறுதியில் தீர்மானமாக ஒரு நகர்த்துதலை நிகழ்த்துவோம்.
அந்த கால இடைவெளி கற்றுத் தருவதை வாழ்வில் வேறெங்கும் பெற முடியாது.
செஸ் விளையாட்டில் நிறைந்திருக்கும் அந்த அம்சமே, பலரை பலமுள்ளவர்களாக மாற்றுகிறது. வெகு சிலரை இந்த விளையாட்டில் இருந்து வெகுதூரம் விலகியிருக்கச் செய்கிறது.
இன்றைய காலகட்டத்தில் பொறுமையைத் தேடித் தேடிச் சோர்ந்து போக வேண்டியிருக்கிறது.
சரி, ’இருப்பதையாவது காப்பாற்றிக் கொள்வோம்’ என்றெண்ணும் அளவுக்கு நம்மிடம் மீந்திருக்கும் பொறுமையைக் காக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. ஆனால், இந்த நிலை மேலும் வளர்ந்துவிடக் கூடாது.
அதற்காகவாவது, அடுத்த தலைமுறைக்கு செஸ் ஆடக் கற்றுத் தர வேண்டும்.
குறைந்தபட்சமாக, அந்த ஆட்டம் இப்படித்தான் இருக்குமென்றாவது புரிய வைக்க வேண்டும்.
அது நிகழும்போது, தானாகவே அவர்களுக்கு ஆர்வம் பிறக்கும்; அதற்கான சூழலை உருவாக்கும்போது, அதனை நோக்கித் திரும்புபவர்களிண் எண்ணிக்கை அதிகரிக்கும்.
ஒருமுறை செஸ் ஆடி உத்வேகத்தைப் பெற்றால், அதனைத் தொடரவே மனம் விரும்பும்.
அதன்பிறகு, உற்சாகத்தின் ஊற்றாக செஸ் ஆட்டம் மாறிவிடும்.
’ஆடு புலி ஆட்டம்’ முதல் பல்வேறு ஆட்ட முறைகள், நமக்கு இதே போன்றதொரு அனுபவத்தைத் தந்திருக்கின்றன.
ஆனாலும், அவற்றின் மிகத்தூய்மையான அம்சங்களைக் கொண்டிருப்பதுதான் செஸ் ஆட்டத்தின் தனித்துவம்.
வாருங்கள்! செஸ் ஆடுவோம்.. உற்சாகத்தைப் பெற்ற மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடுவோம்!
– உதய் பாடகலிங்கம்