பெரியார் மீதான அவதூறுகளுக்கு எதிர் விமர்சனம்!

– ஊடகவியலாளனின் பார்வையில்!

“மக்களுக்குள் சுயமரியாதையும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர வேண்டும்’’

– 1925 ஆம் ஆண்டு ஈரோட்டில் ‘குடியரசு’ பத்திரிகையை துவக்கியபோது இப்படித் தனது நோக்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் பெரியார்.

அடித்தட்டு மக்களுக்கும் புரியும்படியான – எளிய மக்களின் மொழியில்-  பேசியது மாதிரியே அதே பேச்சின் எளிமையை தன்னுடைய எழுத்திலும் தொடர்ந்து முன் வைத்தவர் பெரியார்.

குடியரசு, விடுதலை உள்ளிட்ட அவர் சார்ந்த எல்லா அச்சு ஊடகங்களிலும் தன்னைச் சுற்றியிருந்த பெருவாரியான பொது விருப்பத்திற்கு மாறான கருத்துக்களைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தார் பெரியார்.

அவரது கருத்துகள் தொடர்ச்சியாக விவாதப் பொருளாகவே இருந்து வந்தன என்றாலும், அவருடைய இறுதிக்காலம் வரையிலும் தான் பேசவும், எழுதவும், செயல்படவும் விரும்பியவற்றை வெளிப்படையாகச் செய்து கொண்டுதானிருந்தார்.

“ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல், மானமும், அறிவும் உள்ள மற்ற சமுதாயமாக ஆக்கும்  தொண்டை மேற்கொண்டு அதே பாணியாய் இருப்பவன்.

அந்தத் தொண்டு செய்ய எனக்கு யோக்கிதை இருக்கிறதோ, இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராத‍தால் நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன்’’- என்று தன்னைப் பற்றிய விமர்சனத்தையே வெளிப்படையாக முன்வைத்தவர் பெரியார்.

அவருடைய கருத்தியலை முன்வைத்த உரையாடல் சுற்றியிருந்த சமூகத்திலும், அரசியல் களத்திலும் பல்வேறு அதிர்வுகளை எழுப்பியும், தான் பேசியதையோ, எழுதியதையோ மறுத்து மன்னிப்புக் கேட்கிற செயலை அவர் வாழ்நாள் முழுக்கச் செய்யவில்லை.

இத்தனைக்கும் அவர் வாழ்ந்த காலத்திலேயே கடுமையான எதிர்வினைகளை அவர் எதிர்கொண்டார்.

செருப்பு வீச்சு முதல் சிறைவாசம் வரை அவருக்கான எதிர்வினைகள் நீண்டன.

இப்போதும்  சமூக ஊடகங்களிலும், அரசியல் மேடைகளிலும் அவரைக் கொச்சைப்படுத்துவது நடக்கிறது. அவரது சிலையை அவமதிக்கிறார்கள் அல்லது சேதப்படுத்துகிறார்கள்.

தேசிய அளவில் காந்தியும், அம்பேத்கரும் எதிர்கொண்ட அதே சலசலப்பான எதிர்வினைகளைக் காலத்தின் இன்னொரு அடுக்கில் இன்னும் எதிர்கொள்கிறவராக இருந்து கொண்டிருக்கிறார் பெரியார்.

ஒன்று அவருடைய வாழ்வைக் கொச்சைப்படுத்துகிறார்கள். இரண்டு- அவருடைய கருத்தியலை மலினப்படுத்தி புது வியாக்கியானம் செய்கிறார்கள்.

முன்பு இந்துத்துவாவை முன்னிறுத்திய இயக்கத்தவர்கள் தான் பெரியாரை அவர் வாழும் காலத்திலேயே அவதூறுகளுகளுக்கு உள்ளாக்கினார்கள்.

தற்போது தமிழ்த்தேசியம் பேசுகிறவர்கள், இந்துத் தேசியம் பேசுகிறவர்கள் என்று பல தரப்பினரும் அவருடைய கருத்தியலுக்கு எதிரான வெறுப்பு அரசியலைப் பொது வெளியில் தொடர்ந்து பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த அவதூறுகளுக்கு எதிரான பெரியாரின் கருத்தியலை உள்வாங்கிய தர்க்கத்தை, அவருக்காக‍ வாதாடும் வழக்கறிராகவும், தேர்ந்த ஊடக‍க் கார‍ராகவும் செம்மையாகச் செயல்பட்டிருக்கிறார் ப, திருமாவேலன்.

“ஆதிக்கச் சக்திகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?’’ என்ற பெரியாரியலை முன்வைக்கும் நூலின் நீட்சியாகவே இரு பாகங்களாக ‘இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?’ என்ற நூலை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் திருமாவேலன்.

திராவிடர் கழகமும், ஆசிரியர் கி.வீரமணியும் மட்டுமல்ல, பெரியார் திராவிடர் கழகம், வே.ஆனைமுத்து, நன்னன், எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா, அ.மார்க்ஸ் என்று பலர் பெரியாரியக் கருத்துக்களைப் பொதுவெளிக்குக் கொண்டு சென்றதைப் போல, ஊடகவியலாளரான ப.திருமாவேலனும் பெரியாரியக் கருத்துக்களைத் தொடர் நூல்கள் வழியாக‍க் கொண்டு செல்கிறார் என்றாலும், அவரைப் பற்றி நிகழ்காலத்தில் வீசப்படும் அவதூறுகளுக்கு உரிய ஆவணங்கள் மூலம் பதில் அளித்திருக்கிறார்.

நீண்ட கால உழைப்பை உள்ளடக்கிய இந்த நூல் – வெறும் மேற்கோள்களின் தொகுப்பு அல்ல. அப்படிச் சொல்கிறவர்களுக்கு அந்த மேற்கொள்களைப் பொருத்தமாகத் தேர்வு செய்வதற்கு எடுத்துக் கொள்வதற்கான கால அளவு புரிபடாது.

காலப் பொருத்தத்துடன் எடுத்துக் கையாளப்படும் மேற்கொள் அதுவரை ஒருவர் மீது வைத்திருந்த பார்வையையே மாற்றிவிடும் அளவுக்கு வீர்யம் கொண்டது என்பதையும் உணர வேண்டும்.

திலகரையும் காந்தியையும் பாரதி போற்றிய வெவ்வேறு காலங்களைக் கணக்கிலெடுக்காமல் பாரதியின் கருத்தியல் மாற்றத்தை மதிப்பிட்டுவிட முடியாது.

அதேபோல்தான் தொடக்கத்தில் ‘சுப்பிரமணியர் துதியமுது’ எழுதிய பாரதிதாசனையும், பின் தீவிரக் கடவுள் மறுப்பாளராக வெளிப்பட்ட புரட்சிக் கவிஞரையும் வேறுபடுத்திப் பார்த்தாக வேண்டும்.

காலப் பொருத்தமின்றி உதிரிகளாக உள்நோக்கத்துடன் காட்டப்படும் மேற்கோள்களை நம்பிப் பேராளுமைகளை விமர்சிப்பது என்பது வரலாற்றில் மிகப்பெரும் விபத்தாகவே முடியும்.

இதைச் சுட்டிக்காட்டிப் பெரியாரின் கருத்தியல் சார்ந்த பார்வையுடன், அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட அவதூறுகளுக்குப் பெரியாரின் எழுத்துகள் மற்றும் பேச்சுக்களிலிருந்தே மிகப் பொருத்தமான மேற்கோள்களை எடுத்துக்காட்டி எழுதப்பட்டிருக்கிற ப.திருமாவேலனின் இந்நூல், வரலாற்றுக்கும் விமர்சனத்திற்கும் நம்பகமான மேற்கோள்கள் எவ்வளவு இன்றியமையாதவை என்ற கருத்திற்கு வலுச்சேர்க்கும் ஆவணமாகத் திகழ்கிறது எனலாம்.

தற்போது தமிழ்த்தேசியம் பேசுகிற அமைப்புகளின் தலைவர்கள் பெரியார் பற்றி முன்வைக்கிற விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கிற வித‍த்தில் ஏராளமான செய்திகள் ஆதாரங்களுடன் தொகுக்கப்பட்டிருக்கின்றன இந்நூலில்,

இப்போது ஒலிக்கிற இந்தி மொழித் திணிப்புக்கு எதிரான குரலை 1926 ஆண்டிலேயே எதிர்த்த பெரியார் 1930-ல் நன்னிலத்தில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் இந்திக்கு எதிராகத் தீர்மானமே இயற்றியிருக்கிறார்.

“வட நாட்டாரின் ஆதிக்கப் படையெடுப்பு’’ என்று அன்றே முழங்கியிருக்கிறார்.

“தமிழ்நாடு தனியாகப் பிரிந்தால் தான் தமிழர் உரிமை பாதுகாக்கப்படும். பிரிவினை தவிர இதற்கு வேறு வழியில்லை’’ என்ற முழக்கத்தை அப்போதே பெண்களை மாநாட்டில் பேசியதற்காக‍க் கைது செய்யப்பட்டுச் சிறைக்குச் சென்றவருக்கு  “பெரியார்’’ என்ற பட்டம் தரப்பட்டதே பெண்களால் தான்.

பெரியார் சிறையில் இருந்தபோது தான், மொழிப்போர் தியாகிகளான நடராசனும், தாளமுத்துவும் உயிர்நீத்த பிறகு இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரம் அடைகிறது.

1972 ல் அவருடைய இறுதிக்காலம் வரை இந்தி ஆதிக்கம் செலுத்துவதற்கு எதிரான அவருடைய குரல் ஒலித்திருக்கிறது.

“தமிழ்நாடு தமிழருக்கே’’ என்று 11.9.1938 ல் சென்னையில் நடந்த கூட்டத்தில் பெரியார் முழங்கியதில் (பக்கம் 480) துவங்கி, 08.02.1968 ல் தஞ்சையில் பேசும் போது “தமிழ்நாடு பிரிந்தே ஆக வேண்டும்’’ என்று பெரியார் வலியுறுத்தியிருப்பது வரையிலான (பக்கம் 495) ஆவணப் பதிவுகளுக்கு இன்றைக்குத் தமிழ்த் தேசியம் பேசுகிறவர்களின் பதில் என்னவாக இருக்கும்?

தமிழ் மொழியை பெரியார் இழிவுபடுத்தியதாக இன்று வரை அவருடைய பேச்சின் ஒரு வரியை உதாரணம் காட்டுபவர்கள், தமிழ் சார்ந்த பெரியாரின் தொடர் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டிருக்கிறார்களா என்பது இந்நூலின் பல பக்கங்களில் விரிவாகச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

திருக்குறளுக்காகப் பல மாநாடுகளை நடத்தியிருக்கிற பெரியார், அதையும் விமர்னத்திற்கு உட்படுத்தவே செய்தார்.

“குறளைப் போற்றுங்கள்; குறனைப் படியுங்கள்’’ என்ற பெரியார் தான் அதே திருக்குறளில் மூடநம்பிக்கை இருக்கிறது. பெண் அடிமை இருக்கிறது.’’ என்றவர் தனக்குத் தேவையானதை மட்டும் வள்ளுவரிடம் இருந்து எடுத்துக் கொள்வதாகச் சொன்னார். ( பக்கம் : 469)

1935-லிருந்தே தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் தேவை என்பதை வலியுறுத்திய பெரியார் தன்னோடு தொடர்புடைய இதழ்களில் அதை நடைமுறைப்படுத்தினார்.

ஏற்கனவே வீரமா முனிவரால் மெருகேற்றப்பட்ட தமிழை நவீன கால மாற்றத்திற்கேற்ப சீர்திருத்தினார். அது தான்  1978 ல்-பெரியாரின் நூற்றாண்டுத் தருணத்தில் எழுத்துச் சீர்திருத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தது எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசு.

தமிழர்கள் அதிகமுள்ள மற்ற நாடுகளிலும் அது அமல்படுத்தப்பட்டு, அந்த மாற்றம்  கணினி யுகத்தில் அத்தியாவசியத் தேவையாக மாறியது. ஊடகங்களும் அந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டன.

அத்துடன் பெரியார் தமிழ் அறிஞர்களுக்கு உரிய மதிப்புக் கொடுத்தார். மொழிப் போராட்டம் நடத்தியபோது பாகுபாடு பார்க்காமல் அவர்களுடனும், குறிப்பிட்ட மடாதிபதிகளுடனும் கை கோர்த்தார். தன்னை ‘’திரு.வி.க.வின் மாணவன் ‘’ என்று சொன்னார்.

திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகளுடம் நெருக்கம் பாராட்டினார். 1965 ல் விடுதலைப் பணிமனையை குன்றக்குடி ஆதீனகர்த்தரைக் கொண்டு திறந்திருக்கிறார்.

“பெரியார் தொண்டின் பலன் நான்’’ என்று குறிப்பிடும் அளவுக்கு அடிகளாருக்கும், பெரியாருக்குமான நட்பு நெருக்கமானது.

இருவரையும் இணைத்தது மொழியுணர்வு தான். குன்றக்குடியில் தான் துவங்கிய முந்திரித் தொழிற்சாலைக்கு பெரியாரின் பெயரை குன்றக்குடி அடிகளார் வைக்கிற அளவுக்கு அவர்களுக்கிடையே தோழமையுணர்வு இருந்தது.

பெரியாருக்கும், தனக்கும் இருக்கும் அளப்பரிய மதிப்பை நினைவூட்டும் அரிய அனுபவங்களைப் பரவசமான சொற்களோடு குன்றக்குடி அடிகளார் நேசத்துடன் பகிர்ந்து கொண்டதெல்லாம் இதை எழுதும் கட்டுரையாளரின் நேரடி அனுபவம்.

குன்றக்குடி மடத்திற்குள் பெரியார் வந்தபோது மடத்தின் வழக்கப்படி அவருக்குத் திருநீறு பூசி வரவேற்பு தரப்பட்டபோது பெரியார் காட்டிய முதிர்ச்சி தன்னை நெகிழ வைத்துவிட்டதாகத் தெரிவித்தபோது அடிகளார் முகத்தில் அவ்வளவு பூரிப்பு.

பக்தர்களுக்குத் தாங்கள் தருகிற பிரசாத‍த்தைக் கூடக் கை தொடாமல் தூக்கி எறிந்து மரபைக் காப்பாற்றுகிற உணர்வு கொண்ட மடாதிபதிகளுக்கிடையே நட்பு பேணும் மடாதிபதிகளும், நாத்திகராக இருந்தாலும் மனிதம் பேணும் பெரியாரும் அபூர்வங்கள் தான்.

எத்தனையோ கருத்து முரண்கள் இருந்தாலும், தன்னைச் சந்திக்க வருகிறவர்களிடம் வயது வித்தியாசம் பாராமல் பெரியார் மதிப்புக் கொடுத்துப் பழகுகிற பண்பு சாமி.சிதம்பரனாரில் இருந்து எழுத்தாளர் ஜெயகாந்தன் வரை பலரை வியக்க வைத்திருக்கிறது.

“மனிதனை நினை’’ என்பதையும், “பிறப்பொக்கும் எல்லா உயிரக்கும்’’ என்பதையும் தன்னுடன் பழகுகிற ஒவ்வொருவரையும் உணர வைத்திருக்கிறார்.

தன்னுடன் கருத்துரீதியாக மாறுபட்ட இராஜாஜியுடன் இறுதிவரை தனித்து மனம் விட்டுப் பேசும் அளவுக்கு பெரியாரால் பழக முடிந்திருக்கிறது.

வ.உ.சி.யை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்ட பெரியாருக்கு 1928 ல் எழுதப்பட்டு, ஈரோட்டில் உள்ள பெரியாரின் வீட்டில் பாதுகாக்கப்பட்டு வைக்கட்டிருக்கிற வ.உ.சி.யின் கடிதம் பெரியார் மீது அவர் வைத்திருந்த உரிமையுடன் கூடிய நட்புணர்வுக்கு எடுத்துக் காட்டு. தன்னுடைய மகன் போலீஸ் வேலையில் சேர சிபாரிசு செய்வது குறித்து வ.உ.சி எழுதிய கடிதமே அது.

அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அண்ணா சிகிச்சையில் இருந்தபோது பெரியாருக்கு எழுதிய கடிதம் அவர் மீது எத்தகைய அன்பை அண்ணா வைத்திருந்தார் என்பதை உணர்த்தும்.

ம.பொ.சி, குணா, பெ. மணியரசன் போன்றவர்கள் பெரியாரைப் பற்றிப் பரப்பி வரும் அவதூறுகளுக்குப் பதில் அளிக்கும் வித‍மாக நூலின் இரண்டாம் தொகுதியில் திருமாவேலன் விரிவாக விளக்கியிருந்தாலும்,

இன்றைக்கு நாம் தமிழர் கட்சியினரும், சில தலித் அமைப்பினரும் முன்வைத்து வரும் பெரியாரைப் பற்றிய தொடர் குற்றச்சாட்டுகளுக்கான பதிலும் இத்தொகுப்பில் அடங்கியிருப்பது சிறப்பு.

திராவிடம் குறித்து பெரியாரின் பேச்சைக் காலப்போக்கில் திரித்துக் கூறுகிறவர்கள் 1938 ஆம் ஆண்டு துவங்கி பெரியார் “தமிழ்நாடு’’ என்ற சொல்லாடலைக் கையில் எடுத்திருக்கிறார்.

“தமிழ்நாடு தமிழருக்கே’’ என்பதை ஒவ்வொரு தமிழனும் தனது வீட்டில் அச்சிட்டு ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும்’’ என்று சொல்கிற அளவுக்குச் சென்றார் பெரியார். கையில் பச்சை குத்திக் கொள்ளவும் சொன்னார்.

பிறகு  “திராவிட நாடு’’ என்ற முழக்கத்தை முன்வைத்தபோதும், 1953 ஆம் ஆண்டுக்குப் பிறகு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு “மதராஸ் தமிழ்நாடு ஆக வேண்டும்’’ என்றார்.

1956 லிலேயே “தமிழ்நாடு’’ என்று பெயர் சூட்ட அனைவரையும் அழைக்கிறார்.

1960க்குப் பின் ‘திராவிட நாடு’ என்பதை விடுத்து “தமிழ்நாடு’’ என்றே எழுதுகிறார். “தமிழ்நாடு என்ன கதவில்லாத வீடா?’’ என்கிற கேள்வியே அன்றே எழுப்புகிறார்.

மும்பையில் சிவசேனை அமைப்பினர் தமிழர்களைத் தாக்கியபோது, வடவர்களைக் கடுமையாக‍க் கண்டித்தார். அவர்களது கடைகளைப் புறக்கணிக்கச் சொன்னார்.

தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் வடமொழியில் வழிபாடு நடப்பதைக் கண்டித்திருக்கிறார். தமிழசையை ஆதரித்திருக்கிறார். 1940 ஆம் ஆண்டிலேயே இந்தியாவின் ஆதிமொழி தமிழ் என்று எழுதியிருக்கிறார்.

நீச பாஷை என்பது உனது மொழியே இழிவானது என்பது; காட்டுமிராண்டிக் காலத்தைக் குறித்தே நான் சொன்னேனே தவிர, பண்பின் அடிப்படையில் அல்ல என்றும் பெரியார் விளக்கம் அளித்துள்ளார் (பக்கம்: 1477).

பெரியார் சொல்ல வந்தது, தமிழை அறிவு மொழியாக, அறிவியல் மொழியாக, பயன்பாட்டு மொழியாக மாற்று என்பது தான். சங்கராச்சாரியார் சொல்வதற்கும், பெரியார் சொல்வதற்கும், வேறுபாடு அறியாத குணாவுக்கும் குருமூர்த்திக்கும் வேறுபாடு எதுவும் இல்லை’’ என்கிறார் திருமாவேலன்.

இன்றைக்குத் தமிழ்நாட்டில் பெருகிக் கொண்டிருக்கிற வட நாட்டவர் ஆதிக்கம் பற்றி 1940 களிலேயே குரல் கொடுத்திருக்கிறார் பெரியார். ‘’ யார் தேசத்துரோகிகள்?’’ என்று கேள்வியையும் வலுவாக‍க் கேட்டிருக்கிறார்.

“காந்தியாரை ஒழித்தால் தான் தாங்கள் பதவிக்குப் பெற்றுக் கொள்ளை அடிக்கலாம் என்று கருதியவர்கள், அவரை ஒழிக்க, கொல்ல உடந்தையாக இருந்தவர்கள் யாரோ அவர்கள் பேச்சுக்குப் பேச்சு காந்தி பேரைச் சொல்லிக் கொண்டு அவர் பேரால் ஓட்டுக் கேட்கிறார்கள்.

பார்ப்பனர் தந்திரத்திற்கு ஈடாக உலகில் வேறு தந்திரத்தையும் கூற முடியாது’’ – என்று விடுதலை இதழில் (12.4.1951) பெரியார் எழுதியிருக்கிற படியே இன்றைக்கு ஒன்றிய ஆட்சியாளர்கள் கோட்சேயையும் கொண்டாடுகிறார்கள்.

இன்னொருபக்கம் காந்தியையும் கொண்டாடுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்குத் தடை விதித்த வல்லபாய் பட்டேலுக்குப் பிரமாண்டச் சிலை எழுப்புகிறார்கள். சாவர்க்கரின் பிறந்த நாளில் புதிய நாடாளுமன்றத்தை மதச்சடங்குகளுடன் திறக்கிறார்கள்.

பெரியாரின் காலக் கணிப்புகளை நிரூபித்துக் காட்டியிருக்கிறது நிகழ்காலம்.

பெரியார் அவர் வாழ்ந்த காலத்தில் தான் நம்பிய கருத்துக்களுக்காகச் சிறைவாசம், முதுமை போன்றவற்றிற்கு அஞ்சாமல் போராடியதைப் போல, தற்போது தமிழ்த்தேசியம் பேசும் யாராவது பொதுவெளியில் குரல் கொடுத்திருக்கிறார்களா? அல்லது போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்களா? என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது ஊடகவியலாளரான திருமாவேலனின் இரு தொகுப்புகள் அடங்கிய இந்நூல்.

“உங்களைச் சூத்திரனாகத் தான் விட்டுப் போகிறேன் என்றால் அப்பறம் என்ன தொண்டு செய்து விட்டேன் என்று கடைசிக்கூட்டத்தில் இவரைப் போல் எவர் கேட்டுள்ளார்? யாரைத் தான் இவர் எதிர்க்கவில்லை? எல்லாம் கொளுத்தினாரே? எல்லாவற்றையும் உடைத்தாரே? எல்லாம் எதற்காக? தனது சுயநலத்திற்கா?

“நான் பல குட்டிக்கரணம் போட்டாலும், அது என் சுயநலத்துக்காக அல்ல’’ என்று துணிச்சல் எவருக்கு இருந்தது?’’ என்று அடுத்தடுத்து பெரியாரின் கருத்தியல் சார்ந்து பல அடிப்படைக் கேள்விகளை முன்வைக்கும் திருமாவேலன் நிறைவாக நூலின் இறுதியில் இப்படிச் சொல்கிறார்.

அவர் ந்த் தலைவர் தானே! அவரையே தமிழர் இல்லை என்போர் தேசத் துரோகிகள் தானே! இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?’’

தமிழ்நாடு, தமிழர் நலன் என்று தனது வாழ்வையே அர்ப்பணித்த தலைவரான பெரியார் மீது பழி சுமத்துகிறவர்கள் பல வடிவங்களில் தற்போது குழப்பிக் கொண்டிருக்கையில், தனது “அபாயச்சங்கு’’ நூலில் பெரியாரின் எழுத்துக்களையும், பேச்சுகளையும் தொகுத்தவரான வே.ஆனைமுத்து “தமிழர் ஒவ்வொருவருக்கும் இது தவிர்க்க முடியாத, தவிர்க்கக் கூடாத இலட்சிய நிறைவேற்றப் பணி’’ என்று குறிப்பிட்டிருப்பார்.

“பெரியார் – சுய மரியாதை – சமதர்ம‍ம்’’ நூலின் முன்னுரையில் “பல்வேறு வகையான தாக்குதல்கள் – பெரியார் உயிரோடு இருந்தபோதும் சரி, அவரது மறைவுக்குப் பிறகும் சரி – தொடரந்து நீடிக்கின்றன.

கூடவே – இத்தகைய தாக்குதல்களுக்கு ஆக்கபூர்வமாகவும், ஆற்றல்மிக்க வகையிலும் முகங்கொடுத்து அவற்றுக்குப் பதில் அளிக்கக் கூடிய சக்திகளும் வளரத்தான் செய்கின்றன’’ என்று எஸ்.வி. ராஜதுரையும், வ.கீதாவும் இதே கருத்தைக் குறிப்பிட்டிருப்பார்கள்.

அவர்களைப் போலவே – காலத்தின் தேவையை உணர்ந்து நூலைக் கொண்டு வந்திருக்கிறார் திருமாவேலன்.

அண்ணா பாணியில் சொன்னால், பெரியார் மறைந்தாலும், அவர் வலியுறுத்திய காரணிகள் உயிரோடு இருக்கின்றன.

இன்னும் சொல்லப் போனால் ஒன்றிய அரசின் தீவிர ஆசியோடு கூடுலான உயிர்ப்போடு இருக்கின்றன.

மாநிலங்களின் உரிமைகள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. தமிழருக்கான நிரப்பரப்பில் வடவர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படித் தமிழர் நலன், ஒற்றுமைக்கு எதிராக மத, சாதிய ஆதிக்கச் சக்திகள் வலுவாக இருக்கும் வரை, இங்கு பெரியார் தேவைப்படுவார்.

தகுந்த ஆயுதமாக அவருடைய கருத்தியலும் தேவைப்படும்.

திருமாவேலனைப் போன்ற ஆய்வாளர்களும் தேவைப்படுவார்கள்.

  • மணா
Comments (0)
Add Comment