அரசியல் தலைவராக உருவாக வேண்டும் என்ற கனவெல்லாம் சீமானுக்கு ஆரம்பத்தில் கிடையாது. சினிமாவே அவரது இலக்காக இருந்தது.
சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகே உள்ள அரணையூர் சீமான் பிறந்த ஊர். அப்பா செந்தமிழன் காங்கிரஸ்காரர்.
பி.ஏ. முடித்துள்ள சீமான் கல்லூரிப் பருவத்தில் திராவிட இயக்கத்தின் மீது ஈர்ப்பாக இருந்தார். அப்போதே அவருக்கு திரைத்துறை மீது காதல் இருந்தது.
படிப்பை முடித்ததும், நிறைய கதைகளோடும், கனவுகளோடும் சென்னை வந்த சீமான், மணிவண்ணன், பாரதிராஜா ஆகியோரிடம் உதவியாளராக வேலை பார்த்தார்.
பிரபு – மதுபாலா நடித்த பாஞ்சாலங் குறிச்சி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பெயரும் புகழும் கிடைத்தது.
அடுத்து இயக்கிய இனியவளே படம் ஓடவில்லை.
மாதவனை வைத்து டைரக்டு செய்த தம்பி வெற்றி பெற்றது. சத்யராஜ் கதாநாயகனாக நடித்த ‘வீரநடை’ படம் ஓடவில்லை. அந்த படத்தில்தான் முத்துக்குமாரை கவிஞராக அறிமுகம் செய்தார்.
அவரது ‘வாழ்த்துகள்’ படமும் தோல்வி அடைந்தது. இதனால் நடிப்பில் ஆர்வம் காட்டினார்.
அமைதிப்படை, பள்ளிக்கூடம், மகிழ்ச்சி, மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
அரசியலுக்கு வந்தது எப்படி?
50 ஆண்டுகளுக்கு முன்னர், நாம் தமிழர் என்ற கட்சியை முதலில் தொடங்கி நடத்தியவர் தினத்தந்தியின் நிறுவனர் சி.பா.ஆதித்தனார்.
கொஞ்சநாளில் திமுக அரசில் அமைச்சராகி, தனது கட்சியை திமுகவோடு இணைத்து விட்டார் சி.பா.ஆதித்தனார்.
அந்தப் பெயரையே தனது கட்சிக்கு சூட்டினார் சீமான்.
இலங்கையின் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையைத் தொடர்ந்து, மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக பொதுக்கூட்டங்களில் பேச ஆரம்பித்தார் சீமான். அதுவே அவரை அரசியலுக்கு இழுத்து வந்தது.
தனி ஈழத்தை ஆதரிக்க ஒரு பேரியக்கம் தேவை என நினைத்த சீமான், மதுரையில் 2010 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதி நாம் தமிழர் எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்தார்.
சீமான் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இலங்கை இறுதிக்கட்டப் போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதற்கு அப்போதைய காங்கிரஸ் அரசே காரணம் என வெகுண்டார்.
பல தேர்தல்களில் காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.
2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும், 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் அதிமுகவை ஆதரித்தார்.
தனியாக சந்தித்த தேர்தல்கள்
2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார் சீமான்.
தன்னை, முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துக்கொண்டு கடலூர் தொகுதியில் களம் இறங்கினார்.
எந்தத் தொகுதியிலும் வெற்றி கிட்டவில்லை. ஆனால் தனித்து நின்ற நாம் தமிழர் கட்சி 11 சதவீத ஓட்டுகளை பெற்று வியக்க வைத்தது.
2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார் சீமான்.
பெண்களுக்கு சரிபாதி தொகுதிகளை ஒதுக்கினார்.
மயிலாப்பூர் மாங்கொல்லை திடலில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து வேட்பாளர்களையும் சீமான் அறிமுகம் செய்த கையோடு, தமிழகமெங்கும் பரப்புரை செய்தார்.
இத்தேர்தலில் 4 சதவீத வாக்குகளைப் பெற்று, அனைத்து தொகுதிகளிலும் வைப்புத் தொகையை இழந்தது.
2021 சட்டமன்றத் தேர்தல்
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. சென்னை திருவொற்றியூர் தொகுதியில் சீமான் போட்டியிட்டார்.
திருவொற்றியூரில் சீமான் தோல்வியடைந்தாலும் 48,597 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பிடித்தார்.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியடைந்தாலும், 7 சதவீத வாக்குகளை அந்த கட்சி பெற்றது.
பெரும்பாலான தொகுதிகளில் திமுக, அதிமுக கூட்டணிக்கு அடுத்த இடத்தை பிடித்து, ‘தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி நாம் தமிழர் கட்சிதான்’ என நிரூபித்தார்.
இலக்கு என்ன?
திமுக – அதிமுக ஆகிய பெரிய கட்சிகளே தோழமைகளை இணைத்துக் கொண்டு பயணிக்கும் சூழலில் சீமான், ‘அனைத்து தேர்தலிலும் தனித்தே நிற்போம்’ என முழங்குவது புத்திசாலித்தனமான முடிவாக தெரியவில்லை.
‘தனித்து நிற்பது. ஒவ்வொரு தேர்தலிலும் தோற்பது’ என்பது தொண்டர்களை முடக்கி விடும்.
நாம் தமிழர் இயக்கத்துக்காக சொத்துக்களை விற்று, நேரம் காலம் பார்க்காமல் உழைக்கும் தனது கட்சியினரை, அமைச்சர்களாக்கி அழகு பார்க்காவிட்டாலும், குறைந்தபட்சம் சட்டமன்றத்துக்கு செல்லும் வகையிலான ஏற்பாட்டையாவது சீமான் செய்ய வேண்டும் – அந்த இலக்கை நோக்கி அவர் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்க வேண்டும் என்பதே நடுநிலையாளர்கள் விருப்பம்.
– பி.எம்.எம்.