மோடி அணி – ராகுல் அணி: எண்ணிக்கையிலும் போட்டி!

ஒரே நாளில் பாஜகவும், எதிர்க்கட்சிகளும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி தேர்தல் வியூகங்களை வகுத்துள்ளதால், இந்திய அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில், ஆளும் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளன.

பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார், கடந்த சில மாதங்களாகவே, இதற்கான முன் முயற்சிகளில் ஈடுபட்டார்.

ஒவ்வொரு மாநிலமாகச் சென்று எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து[ பேசினார்.

’’நமக்குள் இருக்கும் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மோடியை வீழ்த்த ஒன்று சேர வேண்டும் என அழைப்பு விடுத்தார். அதற்கு உடனடி பலன் கிட்டியது.

பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த மாதம் 23 ஆம் தேதி நிதிஷ்குமார் ஏற்பாடு செய்த ஆலோசனைக் கூட்டத்தில் 17 கட்சிகள் கலந்து கொண்டன.

“பாஜகவை தோற்கடிக்க குறைந்த பட்சம் 400 தொகுதிகளில் பொது வேட்பாளரை நிறுத்துவது” என அந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காங்கிரஸ் ஏற்பாடு செய்த 2 நாள் கூட்டம் திங்கட்கிழமை தொடங்கியது

இந்தக் கூட்டத்தில் 26 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொன்டனர்.
பாட்னா ஆலோசனையில் பங்கேற்காத சோனியா, இந்த கூட்டத்தில் கலந்து கண்டதோடு தலைவர்களுக்கு விருந்தளித்தார்.

இரண்டாம் நாள் கூட்டத்தில் கூட்டணிக்கு பெயர் வைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

சோனியா, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் உள்ளிட்ட தேசியத் தலைவர்களோடு, தமிழகத் தலைவர்களான ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டார்கள்.

எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா (INDIA – INDIAN NATIONAL DEMOCRATIC INCLUSIVE ALLIANCE) என்ற பெயரைச் சூட்டுவது என முடிவு செய்யப்பட்டது. அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

பாஜக கூட்டணிக் கூட்டம்:

எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.

அதே நேரத்தில் டெல்லி அசோகா ஓட்டலுக்கு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்துக்கு தலைவர்கள் வந்து கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் பிரதமர் மோடி தலைமையில் கூட்டம் ஆரம்பமானது. இந்தக் கூட்டத்தில் 38 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக, தமாகா, புதிய தமிழகம், ஐஜேகே, புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது, பாஜக கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது போன்ற விஷயங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

தமிழகத்தில் அதிமுகவுக்கும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் பனிப்போர் நடைபெறும் சூழலில், டெல்லி கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தனி முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடிக்கு அருகில் பழனிசாமிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. இதனை மற்ற கட்சி தலைவர்கள் வியப்புடன் பார்த்தனர்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள பாஜக கூட்டணி சார்பில் கிழக்கு, வடக்கு, தெற்கு ஆகிய 3 பிராந்தியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தெற்கு பிராந்தியத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கோவா, அந்தமான்-நிகோபார், லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.

தெற்கு பிராந்திய பிரதிநிதியாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டார்.

ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற அசோகா ஓட்டலுக்கு பிரதமர் மோடி, வந்தபோது, அவருக்கு பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுடன் சேர்ந்து பூங்கொத்து அளிக்கும் வாய்ப்பும் பழனிசாமிக்கு அளிக்கப்பட்டது.

“தமிழகத்தில் கூட்டணி விவகாரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கும் இடத்தில் அதிமுக உள்ளது என்பதையே டெல்லியில் ஈ.பி.எஸ்.க்கு கொடுக்கப்பட்ட மரியாதை உணர்த்துகிறது” என அதிமுக மூத்த தலைவர் ஒருவர் குறிப்பிட்டார்”

பி.எம்.எம்.

Comments (0)
Add Comment