தோல்விகள் வரும்போது தான் வெற்றியின் அருமை புரியும்;
தோல்விதான் வெற்றிக்கான முதல் படிக்கட்டு;
தோல்வியில் துவளாதவரையே வெற்றிகள் மொய்க்கும்;
– இப்படி எதிரெதிராக இருக்கும் வெற்றியையும் தோல்வியையும் முடிச்சுப் போடும் தன்னம்பிக்கை உரைகள் இன்றும் உலகெங்கும் வரவேற்பைப் பெறுகின்றன.
என்னதான் வார்த்தைகளில் வித்தியாசம் இருந்தாலும், அவற்றின் அர்த்தம் ஒரே திக்கில்தான் இருக்கும்.
அந்த வகையில், திரையுலகில் ஏற்கனவே தோல்வியடைந்த ஒரு கதைக்குப் புத்துருவம் தீட்டி வெற்றியை ஈட்டிய சாதனையாளர்களாக மிகச்சிலரே அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
‘தெய்வச் செயல்’ என்ற தோல்விப் படத்தைச் சில மாற்றங்களோடு ‘ஹாத்தி மேரா சாத்தி’ எனும் இந்திப் படமாக்கி, அதையே மீண்டும் தமிழில் ‘நல்ல நேரம்’ ஆகத் தந்தவர் சாண்டோ சின்னப்ப தேவர்.
அவர் வழியில் பயணித்த சாதனையாளர்களில் ஒருவர் தான் இயக்குனர் விசு. அவரது ‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படம் கூட ஒரு தோல்விப் படத்தில் இருந்து ஊற்றெடுத்தது தான்.
ஏவிஎம் தந்த வாய்ப்பு!
மேடை நாடகங்களை எழுதி இயக்கி நடித்த அனுபவம், அவரை இயக்குனர் கே.பாலச்சந்தரிடம் உதவியாளராகச் சேர்ந்து திரை மொழியைக் கற்கச் செய்தது.
அந்த காலகட்டத்தில், அவரது ‘உறவுக்கு கை கொடுப்போம்’ எனும் நாடகம், இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரிப்பில், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் இயக்கத்தில் திரைப்படமாக மாறியது.
ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி உள்ளிட்ட பலர் அதில் நடித்திருந்தனர்; அப்படம் வணிகரீதியாகத் தோல்வியடைந்து ரசிகர்களால் கவனிக்கப்படாமல் போனது. அது விசுவின் மனதில் ஒரு வடுவாகப் பதிந்திருந்தது.
எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தின் வழியே திரையில் நடிகராக அறிமுகமான விசு, ‘மணல் கயிறு’ மூலமாக இயக்குனர் ஆனார்.
அதன்பிறகு அடுத்தடுத்து வெற்றி தோல்விகளைப் பெற்று வந்தாலும், மக்களைத் தன்வசப்படுத்தும் ஒரு திரைப்படத்தை அவர் தரவே இல்லை. அந்த வாய்ப்புக்காகக் காத்திருந்தவருக்கு ஏவிஎம் நிறுவனம் ஒரு வழியைக் காட்டியது.
‘நல்லவனுக்கு நல்லவன்’ உட்படப் பல படங்களில் அந்நிறுவனத்தோடு இணைந்து பணியாற்றிய காரணத்தால், ஒரு படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது விசு சொன்ன பல கதைகளுள் ‘உறவுக்குக் கை கொடுப்போம்’ கதையும் ஒன்று.
அதைக் கேட்டு வியந்துபோன ஏவிஎம். சரவணன், அது திரைப்படமாக வெளியாகித் தோல்வியுற்றது தெரிந்தும் அதன் உரிமையை வாங்கிப் புதிதாகத் தயாரிக்க அனுமதி தந்திருக்கிறார். அப்படித்தான் ‘சம்சாரம் அது மின்சாரம்’ உருவானது.
வழக்கமான குடும்பக் கதை!
அம்மையப்பன் எனும் நடுத்தர வயது மனிதர் தனது மனைவி, மூன்று மகன்கள், ஒரு மகளோடு வாழ்ந்து வருகிறார். மூத்த மகனுக்குத் திருமணமாகிறது.
வீட்டில் அதிகமாகச் சம்பாதிக்கும் அவர், தனது சம்பளம் குடும்பத்திற்காக விரயமாவதாக எண்ணுகிறார். அதேநேரத்தில் காதல் திருமணம் செய்த மகள் மாப்பிள்ளையுடன் ஏற்பட்ட சண்டையில் வீடு திரும்புகிறார்.
இரண்டாவது மகனின் மனைவியோ, கணவருக்கும் தனக்குமான உறவு இயல்பாக இல்லை என்பதில் வருத்தம் கொள்கிறார்.
பல ஆண்டுகளாக உழைத்துக் களைத்த அலுப்பில் கட்டாய ஓய்வு பெறுகிறார் அம்மையப்பன். அப்போது, ஒவ்வொரு பிரச்சனையாகத் தலையெடுக்கிறது.
முதலில் மூத்த மகனுக்கும் அவருக்குமான உறவில் விரிசல் விழுகிறது. எல்லாப் பிரச்சனைகளையும் மூத்த மருமகள் எவ்வாறு சரிப்படுத்துகிறார் என்பதுவே ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தின் கதை.
உண்மையைச் சொன்னால், இது பல குடும்பங்களில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கிற பிரச்சனைகளின் பிரதிபலிப்பு என்று சொன்னால் அது மிகையல்ல.
இந்தப் படத்தில் மூத்த மகனாக ரகுவரனும் மருமகளாக லட்சுமியும் நடித்திருந்தனர். அம்மையப்பனாக விசுவும் அவரது மனைவியாக கமலா காமேஷும் தோன்றியிருந்தனர்.
இவர்கள் தவிர்த்து சந்திரசேகர், மாதுரி, இளவரசி, காஜா ஷெரீப், டெல்லி கணேஷ், திலீப், கிஷ்முவோடு மனோரமாவும் இந்தப் படத்தில் கலக்கியிருப்பார்.
’அழகிய அண்ணி’. ‘கட்டிக் கரும்பே கண்ணா’, ‘ஊரை தெரிஞ்சுகிட்டேன்’ ரீமிக்ஸ் ஆகியவற்றோடு ‘தீம் மியூசிக்’ இல்லாத குறையைத் தீர்க்கும்விதமாக ‘சம்சாரம் அது மின்சாரம்’ பாடலைத் தந்தது சங்கர் – கணேஷ் இணை.
பாத்திரங்களின் உணர்வுக் கொப்பளிப்புகளுக்கு இடம் தந்தது என்.பாலகிருஷ்ணனின் ஒளிப்பதிவு.
கிட்டத்தட்ட 41 நாட்களில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம், ஒட்டுமொத்தமாக 15 முதல் 20 லட்ச ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இப்படத்தின் வசூலோ பன்மடங்காக அமைந்தது. காரணம், திரையில் கதை சொல்லப்பட்ட விதம்.
தனிக்குடும்பத்திற்கான தூண்டுகோல்!
‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் கதை நேர்க்கோட்டில் அமைந்திருந்தது.
பாத்திரங்கள் ஒரு உலோகத்தை பழுக்கக் காய்ச்சி வார்ப்பில் இட்டது போல் ஒழுங்கான வடிவில் இருந்தன.
இந்தப் படத்தில் லட்சுமி, சந்திரசேகர், மாதுரி ஏற்ற பாத்திரங்கள், இப்படிப்பட்ட மனிதர்கள் நம் வாழ்வில் கிடைக்கமாட்டார்களா என்று ஏங்க வைத்தது.
முக்கியமாக, ரசிகர்களின் கைத்தட்டல்களை அள்ளும் விதமாக வசனங்களும் காட்சிகளும் எழுதப்பட்டிருந்தன. வீடு தேடி வந்த கிஷ்மூவிடம் மனோரமா பேசும் காட்சி அதிலொன்று.
கமலா காமேஷ், இளவரசி இருவரும் ‘கண்ணம்மா’ என்று கதற, பதிலுக்கு அவர் உதிர்க்கும் ‘கம்முன்னு கிட’ என்ற ’கவுண்டர்’ கேட்டு திரையரங்குகள் அதிர்ந்தன என்றே சொல்ல வேண்டும்.
அதேபோல, டெல்லி கணேஷிடம் சென்று ‘என் இரண்டாவது மகனுக்கு உங்க மகளைக் கட்டிக் கொடுக்கறீங்களா’ என்று விசு கேட்குமிடம், ஒரு காட்சியை எந்தளவுக்குச் செறிவாகச் செதுக்க வசனங்களின் துணை அவசியம் என்பதற்கான ஒரு உதாரணம்.
ஒரு நேர்த்தியான குடும்பச்சித்திரமாக உருப்பெற்ற ‘சம்சாரம் அது மின்சாரம்’ திரையரங்குகளில் மக்கள் கூட்டத்தை நிறைத்ததோடு, குடியரசுத்தலைவரிடம் இருந்து சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது.
அது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டு குடும்பங்களிடையே ஒரு கலாசாரத்தையும் விதைக்கத் தூண்டுகோலாக இருந்தது.
‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தின் முடிவு அன்றைய காலகட்டத்தில் புதிதாக இருந்தது.
உண்மையைச் சொன்னால், கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையைத் தொடர்வதா வேண்டாமா என்ற கலக்கத்தில் இருந்தவர்களைத் ’தனிக்குடும்பம்’ ஆக மாற்றியதில் இப்படத்திற்குக் கணிசமான பங்குண்டு.
அந்த அளவுக்கு, கிளைமேக்ஸில் லட்சுமி பாத்திரம் பேசும் வசனம் வெகு இயல்பாக அமைந்திருக்கும்.
குடும்பம் என்றால் ஆயிரம் சண்டை சச்சரவுகள் இருக்கும்; அதையும் மீறி அந்த அமைப்பு தொடர்ந்து உயிர்ப்போடு இயங்கும்; சமூக, பொருளாதார அந்தஸ்தை தாண்டி, எல்லா குடும்பங்களுக்கும் இது பொருந்தும் என்பதை உணர்த்தியது இப்படம்.
ஒரு முன்னோடி!
தொடக்கத்தில் குடும்பப்பாங்கான பிரச்சனைகளை மையப்படுத்திய நாடகங்களையும் திரைக்கதைகளையும் தந்த விசு, எண்பதுகளின் பிற்பாதியில் வழக்கமான கமர்ஷியல் சினிமா படங்கள் தந்து தோல்விகளைக் கண்டார்.
அதன்பிறகு, தனது பலம் எது என்பதை அவர் நன்கறிந்து கொண்டார். அப்போது, அவர் தந்த படங்களே இன்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கான கச்சாப்பொருளாக மாறியிருக்கின்றன.
‘சம்சாரம் அது மின்சாரம்’ வெற்றிக்குப் பிறகு, ஏற்கனவே ‘சதுரங்கம்’ என்ற பெயரில் வெளியான தனது ’பாரத மாதர்க்கு ஜே’ நாடகக் கதையை மீண்டும் ‘திருமதி ஒரு வெகுமதி’ எனும் பெயரில் வெற்றிப் படமாக்கிக் காட்டினார் விசு.
மாமியார் மருமகள் மோதல் முதல் வரதட்சணை பிரச்சனை, கைம்பெண் மறுவாழ்வு, மது உள்ளிட்ட போதைப்பொருட்களினால் ஏற்படும் சீரழிவு என்று பல விஷயங்களைத் தனது படங்களில் எடுத்தாண்டார்.
அந்த வரிசைப் படங்களில் ‘பெண்மணி அவள் கண்மணி’ கிளாசிக் அந்தஸ்தைப் பெற்ற ஒரு படைப்பு.
பின்னாளில், தான் இயக்கிய படங்களில் எப்படிப்பட்ட பாத்திரங்களில் தோன்றினாரோ அது போன்ற வேடங்களை பிற இயக்குனர்களின் படைப்புகளிலும் ஏற்று நடித்தார்.
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளையும் நடத்தினார். இவையனைத்துமே ‘சம்சாரம் அது மின்சாரம்’ தந்த ‘குடும்ப நாயகன்’ எனும் மரியாதையில் இருந்து உதித்தவை என்று கூடச் சொல்லலாம்.
‘சம்சாரம் அது மின்சாரம்’ வெளியாகி 37 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன; ஆனால், இன்றும் இப்படம் தரும் காட்சியனுபவத்திற்கு ஈடிணை இல்லை என்பதே இதன் சிறப்பு.
- உதய் பாடகலிங்கம்