நெஞ்சில் ஓர் ஆலயம் – காதலெனும் அமர தீபம்!

தமிழ்த் திரையின் வெற்றித் தடங்கள்:

முக்கோணக் காதல் எனும் பதத்தை திரைக்கதையின் அடிப்படை அம்சமாகக் கையாண்டு பெருவெற்றியை ஈட்டியவர் இயக்குனர் ஸ்ரீதர்.

‘கல்யாணபரிசு’ படத்தை அடுத்து இயக்கிய சில படங்கள் சுமார் வெற்றியைப் பெற்ற நிலையில், மீண்டும் ஸ்ரீதரின் படைப்பு என்ற முக்கியத்துவத்தைப் பெற்றது ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’.

எத்தனை முறை ருசித்தாலும் இன்னும் இன்னும் வேண்டும் என்று சுவைக்கச் சொல்லும் இனிப்பைப் போன்றவை ஸ்ரீதரின் திரைப்படங்கள். அதற்கு சிறந்த உதாரணம் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’.

இதன் கதை முழுக்க ஒரு மருத்துவமனைக்குள் நிகழ்வதாக அமைத்தது அந்த காலத்தில் மிகவும் புதுமையான விஷயம். ஏன், இன்றும் கூட இதைப் பிரதியெடுப்பது மிகக் கடினம்.

அந்த அளவுக்கு நேர்த்தியையும் கடின உழைப்பையும் இப்படத்தில் செலுத்தியிருக்கிறார் ஸ்ரீதர்.

மிக இலகுவான கதை, அதை வலுவாக வெளிப்படுத்தும் காட்சியமைப்புகள், அளவான வசனங்கள், புதுமுகங்களின் தேர்ந்த நடிப்பு, இசை மற்றும் ஒளிப்பதிவு உட்பட அனைத்து தொழில்நுட்ப அம்சங்களிலும் மேதைமை, இவை எல்லாவற்றுக்கும் மேலே மிகக்குறைவான பட்ஜெட்டில் ஒரு அற்புதமான திரைப்படம் உருவாக முடியும் என்று காட்டியது ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’.

1962ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி வெளியானபோது, புதுமுகங்கள் மற்றும் பிரபலமல்லாத சில கலைஞர்கள் நடித்த திரைப்படம் என்ற எண்ணமே திரையுலகில் இருந்தது. ஆனால், ஒரு சில நாட்களிலேயே இது காலத்தால் அழியாத காவியம் என்பது நிரூபணமானது.

முக்கோணக் காதல் கதை

‘கல்யாண பரிசு’ போலவே இதிலும் முக்கோணக் காதல் என்றபோதிலும், இரு நாயகர்கள் ஒரு நாயகி என்ற உள்ளடக்கம் இருந்தபோதிலும், ஸ்ரீதர் கதை சொன்னவிதம் மிகப்புதிதாக இருந்தது ரசிகர்களைச் சுண்டியிழுத்தது.

மருத்துவர் முரளி (கல்யாண்குமார்) தனது காதலி சீதாவைச் சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சந்திக்கிறார். அப்போது, அவர் வேறொருவரின் மனைவியாக இருக்கிறார்.

ஸ்ரீதர்

சீதாவின் (தேவிகா) கணவர் வேணுவுக்கு (முத்துராமன்) நுரையீரலில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

நோய் முற்றிய நிலையில் இருப்பதை அறிந்தாலும், அவருக்கு அறுவைச்சிகிச்சை செய்ய ஒப்புக்கொள்கிறார் முரளி.

காதலைக் கைவிட்ட காரணத்தால் முரளி வஞ்சம் தீர்ப்பாரோ என்று சந்தேகப்படுகிறார் சீதா. ஆனால், தன் உயிரைக் கொடுத்தாவது வேணுவைக் காப்பாற்றுவேன் என்கிறார் முரளி.

இதற்கிடையே, வேணுவுக்கு முரளியும் சீதாவும் காதலித்த விஷயம் தெரிகிறது. நோயை விட, இந்த விஷயம் அவரது மனதை வாட்டுகிறது.

இழந்த காதலை எண்ணி மருகும் முரளியிடம் தனது புகைப்படம் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறார் சீதா. அதைத் தந்துவிடுமாறும், மணமான பின்னர் ஒரு பெண்ணுக்கு கணவனே எல்லாம் என்றும் அவரிடம் கூறுகிறார்.

மனைவியைச் சந்தேகப்பட்ட வேணு, இந்த பேச்சைக் கேட்டதும் மனம் மாறுகிறார்.

ஒருவேளை அறுவை சிகிச்சையில் தான் இறக்க நேரிட்டால் தனது மனைவிக்கு நல்ல வாழ்க்கை அமைத்துத் தர வேண்டுமென்று முரளியிடம் கோரும் அளவுக்கு வேணு பக்குவத்தைப் பெறுகிறார்.

தாயுள்ளம் படைத்த சீதா, அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒரு இளம்பெண், சிறுமி, முதியவர் என்று சிலரிடம் பழகுகிறார். குறிப்பாக, சிறுமி உமாவிடம் (குட்டி பத்மினி) அபார அன்பைப் பொழிகிறார்.

எல்லாமே சீராகச் சென்று கொண்டிருக்கும் நிலையில், அறுவைச்சிகிச்சைக்குப் பின்னர் உமா இறந்து போகிறாள். இது முற்றிலுமாக சீதாவின் மனதைப் பாதிக்கிறது.

இதேபோல வேணுவும் இறந்துவிடுவாரோ என்ற எண்ணம் சீதாவை ஆட்டிப் படைக்கிறது. அப்படியொரு விஷயம் கனவிலும் நிகழக் கூடாது எனும் உறுதியோடு இரவு பகலாக பல தகவல்களைச் சேகரிக்கிறார் முரளி.

இறுதியில், முரளி குறித்த தேதியில் வேணுவுக்கு அறுவைச்சிகிச்சை செய்யப்படுகிறது. வேணு உயிர் பிழைத்தார் என்ற மகிழ்ச்சியான தகவலை சீதாவிடம் சொல்லும் வேளையில் அவரது உயிர் பிரிவதோடு படம் முடிவடைகிறது.

ஒருவரைக் காதலித்துவிட்டு இன்னொருவரை மணந்துகொண்ட பெண்ணின் கதை என்று இதனை எளிதாக ஒருவரியில் சொல்லிவிடலாம்.

ஆனால், யாரோ ஒருவரைக் கயவராகக் காட்டினால் மட்டுமே காதலோ, கல்யாண வாழ்க்கையோ, இரண்டில் ஒன்று புனிதமாக வாய்ப்புண்டு.

மிகத்துணிச்சலாக சீதாவின் காதல் மட்டுமல்ல கல்யாண வாழ்க்கையும் கூட எந்தவிதக் கேள்விகளுக்கும் அப்பாற்பட்ட புனிதத்தைக் கொண்டது என்று சொன்னவிதத்தில் நிமிர்ந்து நிற்கிறார் ஸ்ரீதர்.

அற்புதமான வரவேற்பு!

கன்னடத்தில் சில படங்கள் நடித்த கல்யாண்குமார், ஒரு சில திரைப்படங்களில் தலைகாட்டிய தேவிகா, திரைப்படத்தில் துணை நடிகராகவும் நாடக நடிகராகவும் அறியப்பட்ட முத்துராமன், இவர்கள் மூவரும் தனித்து அடையாளம் காணப்பட்டதில் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ திரைப்படத்துக்கு அதிகப் பங்குண்டு.

இந்த படத்தில் முத்துராமன், தேவிகா நடித்த வேடங்களில் ஜெமினி கணேசனும் சாவித்திரியும் நடிப்பதாக இருந்து கால்ஷீட் இல்லாத காரணத்தால் அந்த வாய்ப்பு நழுவியிருக்கிறது.

அதேபோல மனோரமாவின் உறவினராக நாகேஷ் நடிப்பதாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

படப்பிடிப்பு தினத்தன்று ராமராவ் வர தாமதம் ஆக, அவர் நடிக்க வேண்டிய பீட்டர் பாத்திரத்தை நாகேஷ் ஏற்க, ராமராவ் அந்த கிராமத்தான் பாத்திரத்தை ஏற்றிருக்கிறார்.

திரைக்கதையின் தனித்துண்டாகத் தெரியும் இந்த பகுதிக்கான உரையாடலை எழுதியவர் சித்ராலயா கோபு.

இப்படம் வெளியான நேரத்தில் குழந்தை நட்சத்திரமான குட்டி பத்மினி கொண்டாடப்பட்டார் என்றே சொல்ல வேண்டும். விளைவு, இதனை ’தில் ஏக் மந்திர்’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்தபோதும் அவரையே நடிக்க வைத்தார் ஸ்ரீதர்.

இந்திப் பதிப்பில் ராஜேந்திரகுமார், மீனாகுமாரி, ராஜ்குமார் நடித்தனர்.இதே கதையை தெலுங்கில் நாகேஸ்வரராவ், ஜக்கையா, சாவித்திரியைக் கொண்டு ரீமேக் செய்தார்.

இப்படத்தில் கல்யாண்குமாரின் தாயாக நடித்தவர் சாந்தகுமாரி. 1940களில் தமிழ், தெலுங்கு திரையுலகில் புகழ் பெற்ற நாயகியாகவும் பாடகியாகவும் திகழ்ந்தவர். இவர், இயக்குனர் புல்லையாவின் மனைவி.

ஜெமினி கணேசன், சிவாஜி, முத்துராமன், ஜக்கையா, நாகேஸ்வரராவ் போன்றோருக்கு தாயாக நடித்தவர். அதனால் படப்பிடிப்புத்தளத்திலும் கூட இவர்கள் அனைவரும் சாந்தகுமாரியை ‘மம்மி’ என்றழைப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். இதே காரணத்தால் புல்லையாவை ‘டாடி’ என்றும் அழைத்து வந்திருக்கின்றனர்.

கதையும் திரைக்கதையும்!

மருத்துவர் முரளி பணியாற்றும் மருத்துவமனையின் மினியேச்சரை காட்டுவதில் இருந்து திரைக்கதை தொடங்குகிறது.

அதன்பின் சில நொடிகளில், காதலியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்து ஏங்குவதிலும் முரளியைப் பார்க்க வரும் தாயார் புலம்வதிலும் இருந்து அவருடைய காதல் கைகூடாதது நமக்குத் தெரியவரும்.

அதன்பின் டைட்டில் கார்டு இடம்பிடித்தாலும், பின்னணியில் முரளி அந்த மருத்துவமனையில் ஒவ்வொரு நோயாளியையும் அணுகிப் பேசும் விதமும் சிகிச்சையளிக்கும் முறையும் காட்டப்படும்.

வழக்கமாக ‘ஒரு ஊர்ல’ என்றுதான் திரையில் கதை சொல்வார்கள். கிட்டத்தட்ட அரை மணி நேரம் கதாபாத்திரங்கள், கதை நிகழுமிடம், கதையின் மூலப் பிரச்சனை என்று சொல்லி அதன் பின்னரே அதன் போக்கு திரைக்கதையில் விவரிக்கப்படும்.

இந்த முதல் அரை மணி நேரத்தை ’ஜஸ்ட் லைக் தட்’ கடந்ததுதான் ஸ்ரீதரின் மேதைமையைக் கொண்டாடக் காரணம்.

வேணுவின் எக்ஸ்ரேயைப் பார்த்தவுடன் சீதாவுடன் காதல் மொழி பேசி கல்லூரிக் காலத்தில் பிரிந்து சென்றது முரளிக்கு நினைவு வரும். அக்காட்சியின் முடிவில் குளத்தில் தெரியும் சூரிய வெளிச்சமும் எக்ஸ்ரே மாட்டப்பட்ட சட்டகமும் ஒன்றிலிருந்து ஒன்று உருமாறுவது போன்று காட்டப்பட்டிருக்கும்.

அதே நேரத்தில், தந்தையின் மானத்தைக் காப்பாற்றவே வேணுவைத் திருமணம் செய்ய சம்மதித்தேன் என்று சீதா சொல்லும்போது ‘பிளாஷ்பேக்’ காட்சியின் அனாவசியம் என்று உணர்த்தியிருப்பார் ஸ்ரீதர்.

சீதாவின் உணர்வுகள் மூலமாக அந்த துயரத்தைக் காட்டியிருப்பார்.

இப்படத்தின் சிறப்பே வில்லன் என்று தனியாக எவரும் இல்லாததுதான்.

ஆனால், ஒரு வில்லன் செய்ய வேண்டிய வேலையைத் திரைக்கதையில் ஆங்காங்கே வரும் சிறு திருப்பங்கள் மூலமாக நிறைவேற்றியிருப்பார் ஸ்ரீதர்.

சீதாவுடன் முரளி சேர்ந்திருக்கும் புகைப்படம் வேணுவின் கையருகில் இருக்கும்போதும், முரளியும் சீதாவும் சந்தித்துப் பேசுவதை வேணு மறைந்திருந்து பார்க்கும்போதும் ரசிகர்கள் மனதில் ‘த்ரில்’ கூட்டியிருப்பார் இயக்குனர்.

அதேபோல, தான் இறந்துபோனால் சீதாவை நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று முரளியிடம் வேணு வற்புறுத்தும் காட்சியில் ஸ்ரீதர் பயன்படுத்திய கேமிரா கோணங்களே ஒரு வில்லனின் இடத்தை நிரப்பிவிடும்.

இறுதியில் சிகிச்சையளித்த மருத்துவரே மரணமடைவது போல காட்டப்படுவது ‘ஓவர் டிராமடிக்’ என்ற பதத்திற்கு ஆளாகாமல் இருக்க, ஓய்வே இல்லாமல் முரளி பணியாற்றுவதைக் காட்டி நியாயம் சேர்த்திருப்பார்.

முரளி போல தமது மனதின் ஓரத்தில் இருக்கும் துக்கத்தைத் தாங்க முடியாமல்தான் இந்த உலகில் எத்தனை பேர் ‘வொர்க்ககாலிக்’ ஆக வாழ்கின்றனர்.

செய்நேர்த்தியின் உச்சம்!

‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படம் ஸ்ரீதரின் முத்திரைப் படைப்பாக மாறியதற்கு அக்குழுவில் ஒவ்வொருவரும் காரணம் என்றாலும் கூட, அதில் பெரும்பான்மையான இடத்தைப் பிடிப்பது கங்காவின் கலையும் வின்சென்டின் ஒளிப்பதிவும்தான்.

மருத்துவமனையில் மருத்துவர் அறை, நோயாளிகள் அறை, ஆபரேஷன் தியேட்டர் என்று அரை டஜனுக்கும் குறைவான இடங்களையே காட்ட வேண்டிய கட்டாயத்தினால் ஒவ்வொரு காட்சியிலும் விதவிதமான கோணங்களில் படமாக்கி அசத்தியிருப்பார் வின்சென்ட்.

குறிப்பாக, ‘சொன்னது நீதானா’ பாடலில் வேணு உட்கார்ந்திருக்கும் கட்டிலின் அடியிலிருந்து தவழ்ந்து செல்லும் கேமிரா வீணை வாசிக்கும் சீதாவைச் சென்றடையும்.

இக்காட்சியின்போது தரைதளத்திற்கு கீழே கேமிரா நகர்வு திட்டமிடப்பட்டிருந்ததா அல்லது நகர்வின்போது கட்டில் அகற்றப்பட்டிருந்ததா என்று பல கேள்விகள் எழும் வண்ணம் இக்காட்சி படமாக்கப்பட்டிருக்கும்.

இப்பாடலில் வீணையில் தவழும் விரல்கள் தேவிகாவினுடையது அல்ல; அது வீணை இசைக்கலைஞர் அகமத் ஹுசைன் உடையது. ஆனாலும், அந்த வித்தியாசம் சிறிதும் தெரியாத வகையில் அது படமாக்கப்பட்டிருக்கும்.

‘டச்’ என்றழைக்கப்படும் சாய்வுக்கோணங்கள் இத்திரைப்படத்தில் அதிக இடங்களில் கையாளப்பட்டிருக்கும்.

வெறுமனே அழகுக்காகவோ அல்லது வழக்கத்திற்கு மாறானதாகவோ இல்லாமல், கதாபாத்திரங்களின் மனச்சாய்வைக் காட்டும் வகையில் பயன்படுத்தியிருப்பார் வின்சென்ட்.

முதல் காட்சியில் தாயுடன் பேசிக்கொண்டே முரளி தலை வாரும் காட்சியில் கண்ணாடியில் சீலிங் பேன் தெரியும்படி காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

முழுக்க செட் என்றபோதும் அரங்க விளக்குகள் தெரியாதபடி இப்படியொரு ஷாட்டை திட்டமிட்டதற்கு ஆயிரம் முத்தங்களைத்தான் அளிக்க வேண்டியதாயிருக்கிறது.

இது தவிர மேலும் சில காட்சிகளில் கண்ணாடியில் ஒரு கதாபாத்திரத்தின் பிம்பம் தெரிய படமாக்கப்பட்டிருக்கும். மாறி மாறி கதாபாத்திரங்களின் முகபாவனையில் க்ளோசப்பில் காட்டுவதற்குப் பதிலாக இந்த உத்தி பயன்படுத்தப்பட்டிருக்கும்.

முரளியின் அறைக்குச் செல்லும் படிக்கட்டுகள் மட்டுமல்லாமல் வாசல் வழி தெரியும் பின்னணி தரைதளத்தைக் காட்டுமாறு செட் அமைக்கப்பட்டிருக்கும்.

தன் அறையில் இருந்து தாய் காரில் ஏறிச் செல்வதை முரளி பார்ப்பதாகக் காட்டப்படும். மருத்துவமனையிலுள்ள கட்டில், ஸ்ட்ரெச்சர் முதல் அறுவைச்சிகிச்சை உபகரணங்கள் வரை யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் வகையில் காட்டப்பட்டிருக்கும்.

சின்னச் சின்ன உதாரணங்களைத் தவிர்த்து, ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் வின்செண்டின் கேமிரா பார்வைக்கு நிகராக கங்காவின் கலை நேர்த்தி படத்தில் இடம்பிடித்திருக்கும்.

எத்தனை நாள் படப்பிடிப்பு?

நெஞ்சில் ஓர் ஆலயம் 25 நாட்களில் படம்பிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 15, 18, 22, 28 நாட்கள் என்று திரை ஆய்வாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தகவலைக் கூறி வருகின்றனர்.

இந்த விஷயத்தில், ஸ்ரீதரை தவிர சித்ராலயா கோபு உள்ளிட்ட சிலரே இந்த உண்மையைத் தெரிந்தவர்கள். அவர்கள் மட்டுமே இத்தகவலை உறுதிப்படுத்த முடியும்.

அதேநேரத்தில், நான்கு வாரங்கள் மட்டுமே இதன் படப்பிடிப்பு நடந்ததாகச் சொல்வோரும் உண்டு. மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் ஒரு படத்தை உருவாக்கிய நாட்களில் இது கண்டிப்பாக பிரமிக்கத்தக்க சாதனைதான்.

வின்செண்ட்

அந்த கால மருத்துவர்கள் அணியும் காலர் இல்லாத சட்டையை கல்யாண்குமார் படம் முழுக்க அணிந்து வருவார்.

படப்பிடிப்பு முடிந்ததும் அதில் பங்கேற்ற கலைஞர்கள் அனைவருக்கும் அப்படியொரு சட்டையை ஸ்ரீதர் பரிசளித்ததாகவும், மக்கள் தொடர்பாளர் பிலிம்நியூஸ் ஆனந்தனுக்கு அந்த சட்டை கிடைக்காமல் போகவே அந்த வருத்தத்தில் அதே போன்ற சட்டையை அவர் தானே தைத்துக் கொண்டதாகவும், பின்னர் அதுவே அவரது வாழ்நாள் அடையாளமாக மாறியதாகவும் ஒரு தகவல் உண்டு.

சின்னச் சின்ன வித்தியாசம்!

படத்தின் தொடக்கத்திலேயே அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கும் செங்கல்பட்டு மாவட்ட மருத்துவமனைக்கும் ‘நன்றி’ என்ற வாசகங்கள் காட்டப்படும். இது, படத்தின் உள்ளடக்கத்தில் உண்மையான மருத்துவமனை குறித்த தோற்றத்திற்கான படக்குழுவின் மெனக்கெடுதலை உணர்த்தும்.

வழக்கமாக டைட்டில் கார்டில் ஆங்கிலத்தில் அல்லது தமிழில் முழுதாக பெயர்கள் இடம்பெறும். இப்படத்தில் சிலருக்கு மட்டும் இனிஷியல்கள் ஆங்கிலத்திலும் பெயர்கள் வழக்கம் தமிழிலும் இடம்பெற்றன. பிற்காலத்தில் இதுவே கையெழுத்திடும் ஸ்டைலாகவும் பரவலானது.

பொதுவாகவே மிகக்குறுகிய வசனங்கள் என்றால் நைன்டிஸ் தலைமுறைக்கு மணிரத்னம் நினைவுக்கு வருவார். அவருக்கு தான் முன்னோடி என்று இப்படத்தில் காட்டியிருப்பார் ஸ்ரீதர்.

தன்னைத் தேடி வந்த தேவிகாவைப் பார்த்ததும் ‘என்னைத் தேடி இவ்வளவு தூரம்’ என்று கேட்பார் கல்யாண்குமார். அதற்கு ‘காரணம் இருக்கிறது’ என்பார் தேவிகா.

உண்மையில், இவ்விரண்டு வரிகளையும் சேர்த்து எழுதும் வழக்கம்தான் இப்போதும் இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டால் ஸ்ரீதர் மேற்கொண்ட சின்னச் சின்ன வித்தியாசங்கள் பிடிபடும்.

‘கல்யாண பரிசு’ படத்தில் இடம்பெற்ற தங்கவேலு, சரோஜாவின் நகைச்சுவை போல, இப்படத்தில் மனோரமா, நாகேஷ், ராமாராவ் சம்பந்தப்பட்ட காட்சிகள் அமையவில்லை.

ஆனால், அதை ஈடுகட்டும் வகையில் பின்னாட்களில் காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு போன்ற நகைச்சுவைக்கு முக்கியத்துவமுள்ள படங்களை இயக்கினார் ஸ்ரீதர்.

பசையாக ஒட்டிக்கொள்ளும் இசை!

இப்படத்திற்கு ஸ்டார் அந்தஸ்து தந்ததில் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசைக்குப் பெரும் பங்குண்டு. இதில் உதவி இசையமைப்பாளராக ஜி.கே.வெங்கடேஷ் பணியாற்றியிருக்கிறார்.

சின்னச்சின்ன பாடல்கள் என்றபோதிலும், திரைக்கதையை தூக்கி நிறுத்தும் வகையில் அவை இடம்பிடித்திருக்கும். குறிப்பாக, ‘சொன்னது நீதானா’, ’என்ன நினைத்து’, ‘எங்கிருந்தாலும் வாழ்க’, ’நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்’ பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும்.

கண்ணதாசனின் பாடல் வரிகள் கதையோட்டத்தையும் கதாபாத்திரங்களின் மனவோட்டத்தையும் புடம்போட்டு விளக்கும் வகையில் அமைந்திருக்கும்.

என்றென்றும் வாழும்!

கைகூடாத காதலை எண்ணி மருகுபவர்கள் தங்களது இணையை பழிவாங்க நினைப்பதே தற்போது இயல்பாகிவிட்டது. தற்போதுள்ள வாழ்க்கை முறையில் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ நடக்கவியலா ஒரு கற்பனை.

ஆனாலும், எல்லா காதலும் புனிதமானதுதானா என்ற கேள்விக்கு, துயர் நிறைந்த பிரிவுக்குப் பிறகு ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று வாழ்த்தும் மனமே சிறந்த பதில்.

இத்திரைப்படம் வெளியான நாட்களில் கல்யாண்குமார் மற்றும் தேவிகாவின் பாத்திரங்களே மக்களால் கொண்டாடப்பட்டிருக்க வாய்ப்பு அதிகம்.

ஆனால், இப்போதுள்ள தலைமுறையும் இதனைப் பார்த்து ரசிக்க ஏதுவாக அமைந்திருப்பது முத்துராமனின் பாத்திரம்தான் என்றால் அது மிகையல்ல.

காரணம், அது மட்டுமே தற்போதுள்ள சமூகத்துக்கு பொருந்திப்போகக்கூடிய, சிறந்த ஆண் மகனுக்கான இலக்கணங்களை வரையறுக்கக்கூடிய, இன்றைய சூழலில் இக்கதையை ‘ரீபூட்’ செய்யத்தக்க அம்சமாகவும் அது திகழ்கிறது.

படத்தின் பெயர்: நெஞ்சில் ஓர் ஆலயம், கதை, வசனம், இயக்கம்: ஸ்ரீதர், இசையமைப்பு: விஸ்வநாதன் ராமமூர்த்தி, பாடல்கள்: கண்ணதாசன், கலை: கங்கா, உடை: பி.ராமகிருஷ்ணன், ஒப்பனை: சிவராம், பத்ரய்யா, ஒளிப்பதிவு இயக்குனர்: வின்சென்ட், ஒளிப்பதிவு: பி.என்.சுந்தரம், ஒலிப்பதிவு டைரக்டர்: ஏ.கிருஷ்ணன், பாடல்கள் ஒலிப்பதிவு: டி.எஸ்.ரங்கசாமி, படத்தொகுப்பு: என்.எம்.சங்கர், ப்ராசஸிங்: விஜயா லேபரட்டரி & எஸ்.ரங்கநாதன், தயாரிப்பு: சித்ராலயா, ஸ்டூடியோ: விஜயா – வாஹினி

நடிப்பு: கல்யாண்குமார், தேவிகா, முத்துராமன், நாகேஷ், வி.எஸ்.ராகவன், குட்டி பத்மினி, மனோரமா, ராமாராவ் மற்றும் பலர்.

-உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment