– ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்கம்
உணவு உண்ணும் முறை, செல்போன் பயன்படுத்தும் முறை ஆகியவை குறித்து ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விவரிக்கிறார்.
சைவமாக இருந்தாலும் அசைவமாக இருந்தாலும், ஆரோக்கியமான உணவை உண்ணுவதே முக்கியமானது. இரவு எட்டு மணிக்குள் இரவு உணவை முடித்துவிடுவது நல்லது. ஏனெனில் இரவில் நம்முடைய உடல் தூக்கத்துக்கு தயாராகும்.
இந்தியாவில் தூக்கமின்மை அதிகமாவதற்கு முக்கியமான காரணம் மன அழுத்தம் தான். இரவில் மொபைல் ஃபோன் பயன்படுத்தும் போது, அதிலிருந்து வரும் வெளிச்சம் நம்முடைய தூக்கத்தை பாதிக்கும். வெளிச்சத்தால் சூரியன் இன்னும் மறையவில்லை என்று நம்முடைய உடல் நினைத்துக் கொள்ளும்.
இதனால் சரியான நேரத்திற்கு சுரக்க வேண்டிய மெலடோனின் தாமதப்படும். தூக்கம் கெடுவது குழந்தையின்மைக்கு கூட காரணமாக அமைகிறது.
இரவு 9 மணிக்கு தூங்கி காலை 5 மணிக்கு எழுவது நல்லது. முன்னோர்கள் செய்த அனைத்தையும் நாம் பின்பற்ற வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட விஷயங்களை மட்டுமே நாம் செய்ய வேண்டும். இப்போது நாம் நம்முடைய இருப்பிடங்களைப் பாதுகாப்பாக மாற்றிவிட்டு, உடலைக் கெடுத்து வருகிறோம்.
தூக்கம் கெடுவதால் அல்சைமர் நோய் கூட ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இரவு நேரத்தில் சரியாகத் தூங்கினாலே உடல் ஆரோக்கியமாக இருக்கும். மொபைலை இரவில் ஸ்விட்ச் ஆப் செய்தாலே நிம்மதியான தூக்கம் வரும்.
இதைச் செய்வது ஒன்றும் கடினமான விஷயம் அல்ல. இதை நாம் செய்யாமல் விட்டால், தூக்கம் பாதிக்கப்பட்டு பல்வேறு நோய்கள் நமக்கு ஏற்படும்.
ஆரோக்கியமாக இருந்தால் 100 வயது வரை மொபைல் ஃபோன் பார்க்கலாம். உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் நீண்ட நேர மொபைல் ஃபோன் பயன்பாட்டை குறைத்துக் கொள்வோம்.