கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 8 ஆண்டுகளாக மூன்று மாணவர்கள் மட்டும் பயிலும் அரசு தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இதுகுறித்து ஒரு செய்தி தொகுப்பு.
ஊத்தங்கரையை அடுத்த வெங்கடாதாம் பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது சோளக்காப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் 70 வீடுகள் உள்ளன. விவசாயம், ஜவுளி, வணிகம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.
கிராமத்தில் மருத்துவம் பொறியியல் படித்து பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் இளைஞர்கள் அதிகம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்பதாயிரம் சதுர அடியில் நவீன கட்டமைப்புகளுடன் அமைந்துள்ளது.
வகுப்பறையில் அழகான ஓவியங்கள் பல்வேறு தகவல்கள் காற்றோட்ட வசதிகள் போன்றவை உள்ளது. 1966 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில் ஆரம்பத்தில் 66 மாணவர்கள் படித்தனர்.
2016 ஆம் ஆண்டு வரை இரட்டை இலக்கங்களோடு மாணவர்களின் எண்ணிக்கை இருந்தது. சோளக்காப்பட்டி கிராமத்தில் உள்ள பலரும் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வி பயில தனியார் பள்ளிகளில் சேர்த்தனர்.
தற்போது 3 மாணவர்கள் மட்டுமே அரசு தொடக்கப் பள்ளியில் படித்து வருகின்றனர். இரண்டாம் வகுப்பில் ஒரு மாணவரும், நான்காம் வகுப்பில் இரண்டு மாணவிகளும் படித்து வருகிறார்கள்.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு எண்ணற்ற நல திட்டங்களை வழங்கினாலும், தனியார் பள்ளிகளில் ஆங்கில கற்றல் மேம்பாட்டு திறன் வளர்த்துக் கொள்வதற்காகவே தனியார் பள்ளிகளை நாடுகின்றனர்.
சோளகாப்பட்டி அரசு தொடக்க பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்திட கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
– தேஜேஷ்