முன்மாதிரிப் பஞ்சாயத்திற்கு உதாரணமான பிரதாமபுரம்!

டாக்டர் க. பழனித்துரையின் நம்பிக்கைத் தொடர் – 2

நாகை மாவட்டம் பிரதாமபுரம் கிராமப் பஞ்சாயத்து நல்ல மேம்பட்ட பஞ்சாயத்திற்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது.

மற்ற பஞ்சாயத்துத் தலைவர்கள்போல் ஒன்றிய ஆணையரிடம் பணம் கேட்டு வரிசையில் நிற்காமல், வேலைத் திட்டங்களைத் தயாரித்துக் கொண்டு களத்தில் இறங்கும்போது மக்கள் சேவையில் தன்னை மறந்து ஈடுபடும்போது வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு ஆண்டவன் உனக்கு உதவிடுவான் என்று கூறிய வள்ளுவச் சித்தனின் வாக்கு பலிக்கும் விதமாக உதவிக்கு வருகிறது.

ஒரு வணிக நிறுவனம் “மில்கி மிஸ்ட்”. அந்த நிறுவனம் தந்த இயந்திரங்கள் மக்களின் நிதியளிப்பு இவை இரண்டின் வெளிப்பாடு அரிச்சந்திர நதிக் கால்வாய் தூர் வாரப்பட்டுவிட்டது.

அது ஒரு மிகப் பெரிய பணி. மக்களிடம் 3.50 லட்சம் ரூபாய் நன்கொடை பெற்று 6 கி.மீ தூரம் உள்ள கால்வாயைச் செப்பனிட்டது தனக்கு மிகப் பெரிய நம்பிக்கையைத் தந்தது.

அடுத்து ஒரு விவசாயக் கிராமத்தில் பால் உற்பத்தி மூலம் ஒரு வாழ்வாதாரம் இருக்கிறது என்பதை யாரும் உணராமல் இருப்பது ஏன் என்று கேள்வியைக் கேட்டு, ஒரு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை நாகை மாவட்டத்தில் முதல் முறையாக முன்னுதாரணமாக ஆரம்பித்து 240 உறுப்பினர்களைச் சேர்த்து செயல்பட வைத்தது ஒரு மக்கள் மேம்பாட்டுச் செயல்பாடாக மக்களால் பார்க்கப்பட்டது.

இதனைப் பார்த்து 15 கிராமங்களில் 15 கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் உருவாகியிருப்பது ஒரு பெரிய முன்னுதாரணச் செயல்பாடாக பார்க்கப்பட்டது.

அடுத்த மிகப்பெரிய கனவு தன் ஊரில படித்து பட்டம் பெற்ற பட்டதாரிகள் வேலையின்றி வேலையில்லாதவர்களாக அலையக்கூடாது. எதாவது ஒரு தொழில் புரிய வேண்டும் அல்லது எதாவது பணிக்குச் செல்ல வேண்டும்.

இன்று சோம்பித் திரிவதில் சுகம் கண்டு ஒரு இளைஞர் கூட்டம் அரசு வேலை வழங்கவில்லை எனக் கூறி அலைகின்றது.

அந்தச் சூழலை மாற்றியமைக்க வேண்டும். அதற்கு முறையாக பயிற்சிகளை இளைஞர்களுக்குத் தர வேண்டும் என முயன்று,

அரசுத் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு அந்த ஊர் இளைஞர்களை தயார்படுத்த பயிற்சியினை துவக்கி அதில் 30 இளைஞர்களுக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்தது பலருக்கு நம்பிக்கை உருவாக்கி இருக்கிறது.

அடுத்து சுய உதவிக் குழுப் பெண்கள், சில நேரங்களில் தேவையில்லாச் செலவுகளையும் செய்து கடனில் சிக்கிக் கொண்டு வாழும் சூழல் மாறாமல் பெண்களை அதிகாரப்படுத்தவும் முடியாது, மேம்படுத்தவும் முடியாது என்பதனை உணர்ந்து, அவர்களுக்கு தொழில் முனைய பயிற்சியளித்து, ஒரு தொழில் முனைவில் அவர்களை ஈடுபடுத்தியிருப்பது அடுத்த நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது.

அந்தத் தொழில் என்பது நெகிழிப் பைகள், பிளாஸ்டிக் குப்பை என அனைத்தையும் பெற்று துகள்களாக ஆக்கி அந்த மாவட்டத்தில் போடப்படும் தார் சாலைகளுக்கு விற்று விடுகின்றனர்.

அது மட்டுமல்ல அந்த மாவட்டத்தில் எங்கு தார்சாலை போடுவதாக இருந்தாலும் இங்கு உள்ள அந்த நெகிழி துகள்கள் வாங்கிப் போடாமல் சாலை போடமுடியாது.

அப்படி சாலை அமைத்தால், சாலை செலவினத்தை அரசு தராது என்ற நிலைக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவு பெறப்பட்டுள்ளது. இந்தத் தொடர் நிகழ்வுகள் மக்கள் பார்க்கும் எதார்த்த உண்மைகள்.

கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்தை மிகப்பெரிய செயல்பாட்டுக்களமாக ஆக்கியபோதும் பஞ்சாயத்துத் தலைவரின் கிராமிய மேம்பாட்டுப்பார்வை ஒரு முன்மாதிரிப் பஞ்சாயத்தை உருவாக்கும் வல்லமை கொண்டவர் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

குறிப்பாக 75 ஆண்டுகால மக்களாட்சி முறை அரசாங்கச் செயல்பாடுகள் மூலம் ஒட்டுமொத்த கிராமத்தின் கனவு, மக்களின் பொறுப்புணர்வு, சமூக வாழ்க்கை, வாழ்க்கை நியதிகள் வாழ்வின் விழுமியங்கள் என்பதையெல்லாம் அடியோடு தகர்த்து, அரசாங்கத்தை எஜமானாக ஆக்கி தங்களை குடிபடைகளாகவே சித்தரித்து அரசாங்க அலுவலர்களைப் பார்த்து மனு நீட்டும் மனிதர்களாகவே பழக்கப்படுத்தப்பட்டு விட்டனர்.

இதுதான் இன்றையச் சூழலில் சோகத்திலும் சோகம். இந்த மனோபாவம் மக்களிடம் ஊறிப்போய் நிற்கிறது. இந்த உணர்வு, பார்வை மிகவும் ஆழமாகிக் கிடக்கிறது.

அது மட்டுமல்ல கிராம மக்கள் சமூகமாக வாழ்வது என்ற நிலையிலிருந்து தனிமனித வருவாய் பார்க்கும் பார்வையில் சாதிய ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் பிரிந்து கிடந்து செயல்படுவது, கிராமத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சி மேம்பாடு என்பது பாதிப்புக்குள்ளாகிறது. கிராமங்களில் மிகப்பெரிய சுரண்டலுக்கு உள்ளாகிறது.

இப்படிப் பல சமூகங்கள் கிடப்பதைப் பார்க்கும்போது, நம் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களும், அரசுத் துறைகளின் செயல்பாடுகளும் இவர்களை மீட்க முடியவில்லை என்ற உண்மையை அரசாங்கம் ஆமோதித்துதான் இந்த உள்ளாட்சியை இன்று உயிர்பிக்க வைத்துள்ளனர்.

ஆனால், எதற்காக இந்த உள்ளாட்சிகள் உருவாக்கப்பட்டனவோ அந்த அத்தியாவசிய பணிகளை செய்யும் சூழலுக்கு பஞ்சாயத்தையும் மக்களையும் தயார் செய்யவில்லை என்பதை பார்க்கும்போது, அடுத்த கவலை நம்மைப் பற்றிக் கொள்கிறது.

பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக நீதி வழங்குதல் என்பதை யாரும் நினைத்துப் பார்க்க முடியாத பணிகளாக்கி வைத்துவிட்டனர்.

எந்தப் பஞ்சாயத்தும் அதை நோக்கி செயல்பட வைக்க முனையவில்லை. இந்தச் சூழலில் கிராமங்களில் உருவாக்கப்பட்டுள்ள அரசியல் ஆதிக்க சக்திகளை முறியடித்து ஏழைகளுக்கு சேவை செய்வது என்பது எதிர் நீச்சல் போடுவதாகும்.

அதுமட்டுமல்ல யாரை நோக்கி நம் சேவையை திருப்புகிறோமோ அவர்களுக்கே புரிவதில்லை, அவர்கள் எந்த ஆதரவுக்கரமும் நீட்டுவதில்லை என்பதுதான் அடுத்த பெரிய சோக நிகழ்வு.

இருந்தும் நாம் ஏதோ ஒரு உந்துதலால் மக்களை மாற்றும் முயற்சியில் ஈடுபாட்டுடன் இயங்கிக் கொண்டுள்ளோம் என்று அவர் விளக்கியது ஒரு வித்தியாசமான முயற்சியாக இருக்கிறது.

மகாத்மா காந்தியின் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் ஏறக்குறைய ஆண்டுக்கு 2 கோடி செலவு செய்யப்படுகிறது. அந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் யாருக்கும் தெரியவில்லை.

அது மட்டுமல்ல, அந்த இரண்டு கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம், அது நம் பணம் என்ற எந்தப் புரிதலும் இல்லை.

அந்தத் திட்டத்தில் வேலைக்கான கார்டு பெற வேண்டும். 100 நாள் ஆண்டுக்கு வேலை வழங்க வேண்டும்.

சராசரியாக ஒருவருக்கு 60லிருந்து 70 நாட்கள்வரை ஆண்டுக்கு வேலை கிடைக்க வாய்ப்புண்டு.

அப்படி வேலை கிடைக்கின்றவருக்கு தோராயமாக 2000 ரூபாய் கிடைக்கும். அதுவும் மற்ற இனாம்கள் போல வேலை இல்லாமல் கிடைக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் பார்வையாக இருக்கிறது. இந்த ஊரில் 281 பேர் இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்தத் திட்டத்தின் மூலம் என்ன சொத்து உருவாக்கப்பட்டுள்ளது என தீவிரமாக ஆய்வு செய்தால் நாம் ஒட்டு மொத்தமாக எவ்வளவு நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு வருகிறோம் என்பது நமக்குப் புலப்படும்.

இன்று கிராமப்புறங்களில் ஒரு ஆள் தினக்கூலி 750 ரூபாயிலிருந்து 800 ரூபாய்க்கு வந்துவிட்டது. பெண்களுக்கும் ரூ. 400 லிருந்து ரூ. 500 வரை கூலி உயர்ந்து விட்டது.

(தொடரும்…)

முந்தைய தொடர் – https://thaaii.com/2023/07/11/a-leader-with-a-dream/

Comments (0)
Add Comment