பஞ்சங்களும் பட்டினிச் சாவுகளும்!

“இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல, கடந்த தலைமுறைக்கும் கூட பஞ்சத்தின் கோரமுகம் பற்றித் தெரிந்திருக்காது. 1960களில் கோதுமைக் கஞ்சி குடித்து பசியைப் போக்கினோம்…” என தாத்தாக்கள் சொல்லக் கேட்டிருப்போம். அவ்வளவுதான்.

ஆனால், அன்று உணவுப் பஞ்சம் மனித உடல்களை கொஞ்சம் கொஞ்சமாக வதைத்து அணுஅணுவாக சித்ரவதை செய்து உயிரைக் குடித்த கதை வரலாற்றுச் சோகம். மனைவிமார்கள் கணவர்களை விட்டுப் பிரிந்து சென்றனர்.

பணியாளர்கள் எஜமானர்களை விட்டு ஓடிப்போனார்கள். குடும்பங்கள் வெளிநாட்டு ஏஜென்ட்களுக்கு அடிமையாக விற்கப்பட்டனர்.

எல்லாவற்றுக்கும் காரணம் ஒன்றே ஒன்றுதான். அது பஞ்சம். சிங்காரச் சென்னை என மார்தட்டும் அன்றைய மெட்ராஸின் பஞ்ச வரலாற்றை இங்கே நினைவுகூர வேண்டியது அவசியம்.

ஆங்கிலேயர்கள் கோட்டை எழுப்பி வணிகத்தைத் தொடங்கியதிலிருந்து சந்தித்த பஞ்சங்களும் பட்டினிச்சாவுகளும் பட்டியல் இடமுடியாதவை.

பருவமழை பொய்த்ததும், போர்களும் இதற்கு முக்கிய காரணங்கள்.

1646 முதல் 1908-ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட பதினான்கு பஞ்சங்களை மெட்ராஸ் சந்தித்தது. குறிப்பாக, 1781ம் வருடமும், 1876ம் வருடமும் ஏற்பட்ட பஞ்சங்கள் கொடூரத்தின் உச்சம்.

இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பரிதாபமாக மடிந்துபோயினர். இதனாலேயே சத்திரங்களும், கஞ்சித் தொட்டிகளும், நிவாரணக் குழுக்களும் தொடங்கப்பட்டன.

முதல் பஞ்சம் 1646-ல் ஏற்பட்டது. பட்டினியால் 3 ஆயிரம் பேர் இறந்தனர். சாந்தோமில் இருந்த போர்ச்சுகீசியர்களின் குடியிருப்பில் மட்டும் 15 ஆயிரம் பேர் மடிந்தனர். 

கோட்டையில் உணவுப்  பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட, மசூலிப்பட்டிணத்தில் இருந்த வணிக மையத்துக்கு முறையீடு செய்தனர்.

அங்கு பதில் கிடைக்காததால் சூரத்தில் இருந்த ஆங்கிலேயர்களுக்கு உதவும்படி செய்தி அனுப்பினர்.

அதில் ”அரிசியை மட்டும் வைத்துக்கொண்டு சமாளிக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இங்கு வாங்குவதற்கு ஒன்றுமே இல்லை. வீட்டுத் தேவைகளுக்குக் குறைந்தது பத்து மூட்டை கோதுமையாவது அனுப்பி வைக்கவும்…” என உருக்கமாக எடுத்துரைத்தனர்.

பிறகு, சூரத்திலிருந்து ‘Endeavour’, ‘Francis’ என்ற இரண்டு கப்பல்களில் அரிசி மூட்டைகள் வந்து சேர்ந்தன.

இதற்குள், ‘சிண்ட்ஸ்’ பருத்தித்துணியிலும், மற்றவற்றிலும் முதலீடுகள் குறைந்தன. நெசவாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துபோனது.

இந்திலைமை சீரடைய இரண்டாண்டுகள் பிடித்தன. இதற்குள் துணி வணிகத்திலிருந்து அரிசி இறக்குமதி வணிகத்துக்கு மெட்ராஸ் வணிகர்கள் மாறியிருந்தார்கள்.

மறுபடியும், 1658ல் பஞ்சம் ஏற்பட்டபோது அது மெட்ராஸை பெரிதாகப் பாதிக்கவில்லை. மீண்டும். 1686ல் மெட்ராஸில் பஞ்சம் ஏற்பட்டது. 17ம் நூற்றாண்டின் இந்தக் கடைசிப் பஞ்சம்.

35ஆயிரம் பேரை காவு வாங்கியது. ஆறாயிரம் குடும்பங்கள் வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்தன. பஞ்சத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் தொற்றுநோயால் இறந்தனர்.

இந்தத் தொற்றுநோய் ஏற்படக் காரணம், பஞ்சத்தில் இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படாமல் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததிலிருந்து வந்த துர்நாற்றம்தான்.

ஆனால், வடஇந்தியாவுடன் ஒப்பிடும்போது மெட்ராஸில் ஏற்பட்ட பாதிப்பு குறைவு. காரணம், நிவாரண நடவடிக்கைகளை இங்கிருந்த கிழக்கிந்தியக் கம்பெனி உடனடியாக எடுத்ததுதான்.

“ஏழைமக்கள் நிறைய பேர் உணவில்லாமல் தினந்தோறும் தெருக்களில் செத்து மடிகின்றனர்.

அவர்களுக்கு அரிசி வழங்க கம்பெனி அக்கவுண்ட்டுக்கு நூறு பகோடாக்கள் வழங்கப்பட்டுள்ளது.” எனக் கம்பெனியின் குறிப்புகளில் உள்ளதாக, ‘Madras Tercentenary Commemoration Volume’ நூலில் சொல்கிறார் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பி.வி.நாராயணசாமி நாயுடு.

இதன்பிறகு, 1718, 1728ல் பஞ்சங்கள் வந்தாலும் பாதிப்பு ஏற்படாமல் சமாளித்துவிட்டனர்.

ஆனால், 1736ல் ஏற்பட்ட பஞ்சம் அப்படி இருக்கவில்லை. உயிரிழப்புகள் இல்லை என்றாலும் நிறைய படிப்பினைகளைக் கற்றுக் கொடுத்தது.

விலைவாசிகள் மிகவும் உயர்ந்தன. உணவுப் பொருட்களின் விலை நூறு சதவிகிதம் அதிகரித்தது.

முதன்முறையாக கவர்னராக வந்த ஜி.எம்.பிட் பஞ்சங்களுக்குக் காரணம், “ஆட்சியில் இருந்த மொகலாயர்கள் நீர்ப்பாசனப் பணிகளை நிராகரித்ததுதான். ஏரிகள் தூர்ந்துவிட்டன. வயல்கள் தரிசாகக் காய்ந்து கிடக்கின்றன…” என்றார்.

அந்நேரம் கிராமப்புற மக்கள் நகரத்திலாவது உணவு கிடைக்குமா என ஏங்கியபடி மெட்ராஸை நோக்கிப் படையெடுத்தனர். இதனால், தெருக்களில் வழிப்பறி அதிகரித்தது. பலர் பொருட்களைச் சூறையாடவும் செய்தனர்.

இதனால் கம்பெனி சில நடவடிக்கைகளை நகரத்துக்குள் எடுத்தது. முதலாவதாக, தானிய வியாபாரிகள் சூழ்நிலையைப் பயன்படுத்தி விலையேற்றம் செய்ததைத் தடுத்தது. கம்பெனியே விற்பனை விலையை நிர்ணயம் செய்தது.

தேவைக்கு மேல் தானியங்களைச் சேமித்துக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை. பதுக்கி வைக்கப்பட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால், விரைவிலேயே இந்த உத்தரவுகளைத் திரும்பப்பெற்றது கம்பெனி.

பிறகு, அடுத்த ஆண்டு ‘தானியக் குழு’ ஒன்றை அமைத்து, தானிய விற்பனையைக் கண்காணித்தது.

அளவுக்கதிகமாக அரிசியோ, நெல்லோ வைத்திருந்தால் அதை அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட வேண்டும் என்றும், இல்லையெனில் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்தது.

மேலும், பதுக்கி வைத்திருப்பவர்கள் பற்றித்  தகவல் சொல்லும் இன்ஃபார்மர்களுக்கு 35 ரூபாய் சன்மானமும் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தானிய விற்பனையும், விலையும் ஒழுங்குப்படுத்தப்பட்டன.

அதன்பிறகு 1781ல் மெட்ராஸ் அதுவரை சந்திக்காத ஒரு பயங்கர பஞ்சத்தை எதிர்கொண்டது. இரண்டாம் மைசூர் போர் நடந்த நேரம்.

ஹைதர் அலியால் நிறைய சேதம் ஏற்பட்டது. பயிர்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. மக்களால் அமைதியாக விவசாயம் செய்ய முடியவில்லை.

இதனால் தானிய இறக்குமதிக்கான வரி நீக்கப்பட்டது. ஆனாலும், 1781ல் மார்ச் மாத இறுதியில் மெட்ராஸ் நகரில் 42 நாட்களுக்கு மட்டுமே தானியம் கையிருப்பு இருந்தது.

இதனால், ரேஷன்முறை கொண்டு வரப்பட்டு காவல்துறை கண்காணிப்பாளர் மூலம் ஒரு சுற்றறிக்கை விடப்பட்டது. அதன்படி, கோட்டையிலும், கருப்பர் நகரிலும் உள்ள குடும்பத்திலுள்ள நபர்களின் எண்ணிக்கை கொடுக்கப்பட வேண்டும்.

இதனால், உள்ளூரில் தங்கியிருந்த வெளியாட்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

பிறகு, மீண்டும் தானியக்குழு அமைக்கப்பட்டு விலை நிர்ணயம், பதுக்கல்காரர்களுக்கு அபராதம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆறு லட்சம் மக்களுக்குத் தேவையான 400 மூட்டைகள் அரிசி தினமும் கம்பெனியின் குடோனிலிருந்து தானியக் குழுவுக்கு அளிக்கப்பட்டது.

அவர்கள் அதை சலுகை விலையில் மக்களிடம் விற்றனர். இதில், ஒழுங்கு விதிகளை மீறும் வியாபாரிகளுக்குத் தண்டனைகளும் தரப்பட்டன.

மெக்கார்ட்னி, புதிய கவர்னராக நியமிக்கப்பட்டார். இவர், இந்தியாவின் கவர்னர் ஜெனரல் மூலமாகவும் தனியார் வியாபாரிகள் வழியாகவும் வங்காளத்திலிருந்து அதிகளவில் தானியங்களை வரவழைத்தார்.

அரிசியை ஏற்றிக் கொண்டு ஏராளமான கப்பல்கள் மெட்ராஸ் துறைமுகம் வந்து சேர்ந்தன. ஆனால், இங்குள்ள பேராசை பிடித்த வணிகர்கள், சில கோரிக்கைகளை கவர்னர் முன் வைக்க, இறக்குமதி நிறுத்தப்பட்டது.

மெட்ராஸுக்கு அது போதாத காலம். இயற்கை, வணிகர்களுடன் மக்களையும் சேர்த்து தண்டித்தது.

ஒரு பெரிய புயல் மெட்ராஸைத் தாக்கியது. ஒரே நாள் இரவில் சுமார் 70 கப்பல்கள் கரை ஒதுங்கின.

டிசம்பர் மாதத்தில் வெறும் ஆறு வாரங்களுக்கான தானியங்களே கையிருப்பில் இருந்தன. 1782ம் ஆண்டு மிகுந்த துயரத்துடன் தொடங்கியது.

மேற்கொண்ட நிவாரண நடவடிக்கையோடு தனியார் அறக்கட்டளைகளும் கைகோர்த்தன. பஞ்சமே இப்படியான அறக்கட்டளைகள் தோன்றக் காரணமாயின.

ஸ்டான்லி மருத்துவமனை எதிரிலிருக்கும் மணியக்காரர் சத்திரம் இந்தப் பஞ்சத்தின்போது உருவானதுதான்.

கோட்டையிலிருந்த புனித மேரி சர்ச்காப்பாளர்களும், பொது மக்களும் இணைந்து பஞ்ச நிவாரண நிதி வசூலித்தனர், ஐரோப்பியர்கள், போர்த்துக்கீசியர்கள், இந்துக்கள் எனப் பதினைந்து பேர் கொண்ட பஞ்ச நிவாரணக் குழு அமைக்கப்பட்டது.

இதற்கு. “மெட்ராஸ் உள்ளூர் ஏழைமக்கள் நிதி மேலாண்மைக் குழு’ எனப் பெயரிடப்பட்டது. ஆனாலும் உணவின்றி தினம் தினம் தெருக்களில் ஏழை மக்கள் செத்து மடிந்தனர்.

இதனால், பஞ்சம் இல்லாத வடபகுதிகளில் மக்களை இடம் பெயரச் செய்ய வேண்டும் என பஞ்ச நிவாரணக் குழு யோசனை சொன்னது. அதன்படி நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

இப்போது தானிய வணிகத்தை அரசே ஏற்றுக்கொண்டது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்ப, ஆறில் ஒரு பகுதி சரக்குகளை தனியாருக்கு விட்டுக் கொடுத்தது. 1783ம் வருடம் இந்தப் பஞ்சம் தெளிந்தது.

பின்னர், 1805ல் ஏற்பட்ட பஞ்சத்தில் 3,225 பேரும், 1806ல் 4,902 பேரும், 1807ல் 17 ஆயிரத்து 207 பேரும் மடிந்தனர்.

இதன்பிறகு, மெட்ராஸை கடுமையாகத் தாக்கிய பஞ்சம் 1876ல் ஏற்பட்டது. இதைத் ‘தாது வருட பஞ்சம்’ என்கின்றனர்.

இன்று வரையில் வரலாற்றில் பேசப்பட்டு வரும் பஞ்சம் இதுவே தென்னிந்தியாவைப் பாதித்த இந்தப் பஞ்சத்தில் மட்டும் சுமார் 50 லட்சம் மக்கள் பட்டினியால் உயிரிழந்தனர்.

அன்று இந்திய பஞ்ச நிவாரண நிதிச் செயலாளராக இருந்த வில்லியம் டிக்பை ‘The famine campaign in Southern India’ என்ற நூலில் பஞ்சத்தின் போது மெட்ராஸ் நிலையைப் பற்றி இவ்வாறு குறிப்பீடுகிறார்.

சில செல்வந்தர்கள் பட்டினியால் வாடிய ஏழைகளுக்கு உணவு வழங்கினர்.

இந்தச் செய்தி பல பகுதிகளுக்கும் பரவ, வட ஆற்காட்டிலிருந்து நிறைய பேர் மெட்ராஸில் குவிந்தனர்.

அவர்கள், மலை மலையாக அரிசி குவிந்து கிடப்பது போலவும், அங்கே போனால் பங்கிட்டுக்கொள்ளலாம் எனவும் எண்ணியுள்ளனர். ஆனால், நிலைமையோ வேறு. இங்கு பத்து இந்து சமூக மனிதர்கள் 11,400 பேர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கி வந்தனர்.

பீச்சில் மெலிந்த தேகம் கொண்ட பலர் தானிய வண்டிகளில் இருந்து கீழே விழும் தானியங்களுக்காகக் காத்து நின்றனர்.

அப்படிக் கீழே விழும் தானியங்கள் தானாக விழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு தெருவிலும் பட்டினியால் நேரும் இறப்பு அதிகரித்தது” என்கிறார்.

இச்சமயத்தில்தான் பக்கிங்ஹாம் கால்வாய் வெட்டப்பட்டது. இதில் பணிபுரிபவர்களுக்கு ஒருவேளை உணவு வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாகத்துறைமுகம் உருவாக்கப்பட்டதிலும் நிறைய பேர் பணிகள் செய்து பசியைப் போக்கிக்கொண்டனர்.

பிறகு, 1896 – 97லும், பின்னர் முதல் உலகப்போரை ஒட்டியும் ஒரு பஞ்சம் வந்தது. ஆனால், பெரிய பாதிப்புகள் ஏதும் நிகழவில்லை.

இன்றும் தாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது, ‘சாப்பிட்டாச்சா’ என விசாரிக்கிறோம். இந்த நடைமுறை கூட பஞ்ச காலத்தில் உருவானதாகச் சொல்வார்கள்.

இப்போது உணவுப் பஞ்சம் இல்லை என்றாலும் கூட அழிந்து வரும் நம் விவசாயத்தால் எதிர்காலத்தில் பஞ்சம் எட்டிப் பார்க்கலாம்.

-பேராச்சி கண்ணன் எழுதிய ‘தல புராணம்’ என்ற நூலிலிருந்து ஒரு கட்டுரை.

************************

தல புராணம்.

பேராச்சி கண்ணன்

செல்: 9841912829

சூரியன் பதிப்பகம்

No.229, கச்சேரி சாலை,

மைலாப்பூர், சென்னை – 600004

பக்கங்கள் – 455

விலை – ரூ.350/-

Comments (0)
Add Comment