ஓர்க்காக்களுக்கு என்ன ஆச்சு?

பெருங்கடல்களையே நடுநடுங்க வைக்கும் மிகப்பெரிய உயிர்க்கொல்லி, வேட்டையாடி எது தெரியுமா? அது பெருஞ்சுறா எனப்படும் கிரேட் வைட் ஷார்க்.

ஆனால், அந்த பெருஞ்சுறாவையே பீதிக்கு உள்ளாக்கும் ஓர் உயிரினமும் கடலில் இருக்கிறது. அந்த கடலுயிரின் பெயர் கில்லர் வேல். அதை ஓர்க்கா என்றும் சொல்வார்கள். தமிழில் கருங்குழவி ஓங்கல்.

ஓங்கல் எனப்படும் டால்பின் இனத்தைச் சேர்ந்த இந்த ஓர்க்காக்கள்தான், பெருங்கடல்களின் மிகப்பெரிய வேட்டைக்கார பாலூட்டிகள்.

உலகில் தற்போது உயிர்வாழும் பாலூட்டிகளில் மிகப்பெரிய அளவு மூளையுள்ள இரண்டாவது உயிர்களும் இந்த ஓர்க்கா ஓங்கல்கள்தான். ஒரு பெரிய ஓர்க்கா, பள்ளி பேருந்து அளவுக்கு பெரிதாக இருக்கும்.

கூட்டமாக வேட்டையாடும் ஓர்க்கா ஓங்கல்கள், பெருஞ்சுறாவை மிக நுட்பமாக தாக்கி கொல்லக் கூடியவை.

சுறாக்களால் பின்பக்கமாக நீந்த முடியாது. திடீரென நிற்கவும் முடியாது. நீந்தாமல் நின்றுவிட்டால் சுறாவால் மூச்சுவிட முடியாது. சுறாவை தலைகீழாகப் புரட்டிப் போட்டால் கதை கந்தல். சுறா, ஒருவித அசைவற்ற நிலைக்கு (Tonic Immobility) ஆளாகிவிடும்.

இதெல்லாம் ஓர்க்காக்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஆகவே, பெருஞ்சுறாவை சூழ்ந்து, அதை முன்னோக்கி நீந்த விடாமல் தடுத்து, முட்டிமோதி சுறாவை தலைகீழாகப் புரட்டி அதை உண்டு இல்லை என்று ஆக்கிவிடும்.

ஓர்க்காக்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு பெருஞ்சுறாவின் 7,100 பவுண்ட் எடை கொண்ட ஈரல்தான். விருப்பமான இன்னொரு உணவு திமிங்கிலக் குட்டியின் நாக்கு!
சரி. இப்போது விடயத்துக்கு வருவோம்.

கடலில் திமிங்கிலம், பெருஞ்சுறா போன்ற பேருயிர்களுக்கு ஓர்க்காக்கள் ஆபத்தாக இருந்தாலும், மனிதர்களைப் பொறுத்தவரை அவை சமர்த்து சர்க்கரைக் குட்டிகள்.

பொதுவாக படகுகளையோ, சிறு கப்பல்களையோ ஓர்காக்கள் தாக்கியதில்லை. 2020ஆம் ஆண்டு வரையில் இதுதான் நிலைமை.

ஆனால், அட்லாண்டிக் பெருங்கடலும், மத்தியத் தரைக்கடலும் கைகுலுக்கிக் கொள்ளும் ஜிப்ரால்டர் நீரிணைப் பகுதியில் ஓர்க்காக்கள் இப்போது படகுகளைத் தாக்கத் தொடங்கி யிருக்கின்றன.

2020ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த புதுப்பழக்கம், 2022ல் உச்சத்தைத் தொட்டது. இதுவரை மொத்தம் 250 படகுகள் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. 3 படகுகள் மூழ்கடிக்கப்பட்டு இருக்கின்றன. ஒரு மாதத்தில் மட்டும் 20 முறை முட்டல் மோதல் நடந்திருக்கிறது.

ஓர்க்கா ஓங்கல்கள், கூட்டம்கூட்டமாக வாழ்பவை. இந்த கூட்டத்தை பாட் (Pod) என்பார்கள். யானைக் கூட்டத்தை வயது முதிர்ந்த பெண் யானை வழிநடத்துவதைப் போல, ஓர்க்கா ஓங்கல் கூட்டங்களையும் வயதான பெண் ஓர்க்காதான் வழிநடத்தும்.

ஜிப்ரால்டர் நீரிணைப் பகுதியில் ஸ்பெயின் நாட்டுக்குத் தெற்கே வைட் கிளாடிஸ் என்ற ஓர்க்கா கூட்டம் இயங்குகிறது.

66 அடிநீளமான ஒரு பாய்மரப் படகைத் தாக்கி இந்த புது டிரெண்டை முதன்முதலில் ஆரம்பித்து வைத்தது இந்த குழுதான். அதன்பிறகு அடுத்தடுத்து தாக்குதல்கள்.

ஜிப்ரால்டர் நீரிணைப் பகுதியில், படகுகள் மீது இதுவரை நடந்த 61 விழுக்காடு தாக்குதல்களுக்கு இந்த வைட் கிளாடிஸ் கூட்டமே காரணம்.

ஓர்க்காக்களில் ஆண் ஓர்க்காக்கள் சூராதிசூரர்கள் என்றாலும் எல்லாம் அம்மா கோண்டுகள். அல்லது பாட்டி சொல்லைத் தட்டாத உயிர்கள்.

கூட்டத்தை வழிநடத்தும் அம்மாச்சி, ‘தாக்கு’ என்றால் கூட்டம் தாக்கும். ‘நிறுத்து’ என்றால் நிறுத்திக் கொள்ளும்.

இந்த வைட் கிளாடிஸ் கூட்டத்தை வழிநடத்துவது பிளான்கா அல்லது லமாரி என்ற முதிர்ந்த பெண் ஓர்க்கா.

ஐபீரியன் பகுதி கடலில் வைட் கிளாடிஸ் ஓர்க்கா கூட்டம் இந்த தாக்குதல் விளையாட்டை ஆரம்பித்து வைக்க, இப்போது அது மற்ற ஓர்க்கா கூட்டங்களுக்கும் பரவி வருகிறது.

ஸ்பெயினின் தெற்குப்பகுதியில் இருந்து ஆரம்பித்த இந்த புதுப்பழக்கம், போர்த்துக்கல், பிரான்ஸ் நாட்டு கடல்களைத் தாண்டி வடக்கு நோக்கி போய்க் கொண்டிருக்கிறது.

வடகடல் பகுதியில், ஸ்காட்லாந்தின் லெர்விக் பகுதியில் இருந்து நார்வே நாட்டின் பெர்ஜென் பகுதி நோக்கிச் சென்ற ஒரு படகு தாக்கப்பட்டது லேட்டஸ்ட் சம்பவம்.

ஜிப்ரால்டர் பகுதியில் இருந்து இரண்டாயிரம் மைல்கள் தொலைவில் இருக்கும் இந்தப் பகுதிக்கு இந்தப் பழக்கம் எப்படி பரவியது என்பது புரியவில்லை.

ஓர்க்காக்கள் அறிவுள்ளவை. படகுகளின் சுக்கானைத் தாக்கினால் படகு செயலிழந்து விடும் என்பது அவற்றுக்குத் தெரியும்.

அதனால், பெரும்பாலான தாக்குதல்கள், படகுகளின் சுக்கானைக் குறிவைத்தே நடந்திருக்கின்றன.

படகுகள் ஓடாமல் நின்றுவிட்டால் ஓர்க்காக்கள் அவற்றைத் தாக்குவதில்லை. அது ஓர்க்காக்களின் புதிய போர்மரபு போலிருக்கிறது.

சரி. ஓர்க்காக்களின் இந்த திடீர் நடத்தை மாற்றத்துக்கு என்ன காரணம்?
படகுகளை அவை பாய்ந்து தாக்கும் காரணம் என்ன? கடலுயிர்கள் வல்லுநர்கள் இதற்கு 3 காரணங்களை முன் வைக்கிறார்கள்.

வைட் கிளாடிஸ் கூட்டத்தை வழிநடத்தும் பெண்ஓர்க்கா, படகு ஒன்றினால் காயப்பட்டிருக்க வேண்டும். அல்லது மீனவர்களின் தொடர்தூண்டிலில் சிக்கிய ஒரு சூரை மீனைத் தின்னப் போய், தூண்டில் முள்ளால் அது காயம் அடைந்திருக்க வேண்டும்.

கடலுயிர்களிடம் பழிவாங்கும் பழக்கம் எதுவும் கிடையாது என்றாலும், காயமடைந்த ஓர்க்கா, பழிவாங்கும் நோக்கத்தில் படகுகளை தாக்கும் பழக்கத்தை கூட்டத்துக்கு ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்கிறார்கள் கடலுயிர் வல்லுநர்கள்.

படகுகள் மீதான ஓர்க்காக்களின் இந்த தாக்குதல்களை, அவை கண்டுபிடித்திருக்கும் புதிய விளையாட்டு என்று சிலர் கருதுகிறார்கள்.

இந்த ‘புதிய விளையாட்டு’, அடுத்தடுத்த ஓர்க்கா கூட்டங்களுக்கும் வேகமாகப் பரவி வருகிறது.

இன்னும் சிலர், ஜிப்ரால்டர் நீரிணைப் பகுதி வழியாக இடம்பெயர்ந்து வலசை போகும் சூரைமீன்களை மீன்பிடிப் படகுகள் பிடிப்பதால் அவற்றைப் போட்டியாளர்களாகக் கருதி ஓர்க்காக்கள் தாக்குவதாகக் கூறுகிறார்கள்.

ஜிப்ரால்டர் நீரிணை அதிக அளவில் கப்பல்கள் நடமாடும் குறுகலான ஒரு பகுதி.

இங்கு கப்பல்களும், படகுகளும் ஏற்படுத்தி வரும் ஒலிமாசும், சூழல்கேடும்தான் ஓர்க்காக்கள் கோபப்படக் காரணம் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்.

ஆக, உண்மை காரணம் என்ன என்பது தெள்ளத் தெளிவாகத் தெரியவில்லை.

பண்பாட்டு பரிணாமம் என்பது மனிதர்களுக்கு மட்டும்தான் உரித்தானது என்று நீண்ட காலமாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால், விலங்குகளுக்கும் அது உண்டு என்பது அண்மை காலத்தில் பலமுறை நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.

ஓர்க்காக்கள் படகுகளைத் தாக்குவது ஒருவகையான பண்பாட்டு பரிணாம வளர்ச்சிதான்.

ஓர்க்கா கூட்டத்தின் பாட்டிகள் 80 முதல் 109 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. எனவே அவை சொல்லித்தரும் பாடங்கள், புதிய வித்தைகள் அந்த ஓர்க்கா கூட்டத்தில் நீண்டகாலம் நிலைபெற்று நிற்குமோ என்ற பயம் ஏற்படுகிறது.

ஆனால், ‘ஓர்க்காக்களின் இந்த படகுத் தாக்குதல்கள் தொடராது, அவை ஒரு கட்டத்தில் நின்றுவிட வாய்ப்பிருக்கிறது’ என்றே கடலுயிர் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

விலங்குகளின் பண்பாட்டு பரிணாம வளர்ச்சி தோன்றியதுபோலவே திடீரென மறைந்து விடக்கூடியது.

ஆஸ்திரேலியாவின் பாட்டில் மூக்கு ஓங்கல்கள் ஒருகாலத்தில், திடீரென கடற் பஞ்சுகளை பிடுங்கி வாயில் கவ்வியபடி திரிந்தன. பின்னர் அந்தப் பழக்கம் திடீரென நின்று போனது.

அதைப் போல ஓர்க்காக்களின் அதிரடியும் விரைவில் நின்றுபோகும் என்று கருதுகிறார்கள் கடலுயிர் வல்லுநர்கள்.

காத்திருப்போம்.

நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு

Comments (0)
Add Comment