நிஜ தேர்தலை கண் முன் நிறுத்திய பள்ளி மாணவர்கள் தேர்தல்!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்ற தேர்தல் நிஜ தேர்தல் போல் நம் கண் முன் நிறுத்திய சம்பவத்தின் தொகுப்பை இப்போது காணலாம்.

மணப்பாறையில் உள்ள விராலிமலை சாலையில் தனியார் சிபிஎஸ்சி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது.

இந்த பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள 4 வகுப்புகளில் ஒரு வகுப்பிற்கு இருவர் வீதம் மொத்தம் 8 பேரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்றது.

பள்ளியின் விளையாட்டுக்குழுத் தலைவர், துணைத் தலைவர், பள்ளியின் மாணவர் குழுத் தலைவர், துணைத் தலைவர் இந்த பொறுப்புகளில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என தேர்ந்தெடுக்க வாக்குச்சீட்டும் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் வழங்கப்பட்டது.

தேர்தலில் போட்டியிடும் மாணவ- மாணவிகளின் பெயர், புகைப்படம் மற்றும் அவர்களுக்கான சின்னங்களும் பொறிக்கப்பட்டிருந்தது.

முன்னதாகவே தேர்தல் நடைமுறைகளின் படி தேர்தலில் போட்டியிடும் மாணவ – மாணவிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

வேட்பு மனு பரிசீலனை, வேட்பு மனு வாபஸ் உள்ளிட்டவைகள் முடிந்த பின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து 24 பேர் களத்தில் போட்டியிட்டனர்.

3 நிறங்களில் நான்கு வாக்குச்சீட்டுகள் வாக்காளர்களான மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. ஒரு வாக்குச்சீட்டில் ஒரு மாணவர் மற்றும் மாணவிக்கு என 2 வாக்குகள் வீதம் 4 வாக்குசீட்டிற்கு 8 வாக்குகள் செலுத்த வேண்டும்.

அதன்படி மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குசீட்டில் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை பதிவு செய்து நீண்ட வரிசையில் நின்று வாக்குப் பெட்டியில் செலுத்தினர்.

நிஜ தேர்தலை போல் பள்ளியில் நடந்த இந்தத் தேர்தல் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் தேர்தல் குறித்தஒரு தெளிவான புரிதலை ஏற்படுத்தியதுடன் அனைவரின் கவனத்தையும் வெகுவாகவே ஈர்த்தது.

தேர்தல் என்றால் என்ன? அது எப்படி நடைபெறும்? வாக்களிப்பது எப்படி? தேர்தலில் போட்டியிடுவது எப்படி என்பதை எல்லாம் செய்முறையாக செய்து நிஜ தேர்தலையே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றனர் ஓர் தனியார் பள்ளி மாணவ – மாணவிகள்.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment