பூமியில் இருந்து நிலவு சுமார் 3.84 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ளது. பூமிக்கு மிக அருகில் உள்ள இந்த கோளில் அரிய வகை கனிம வளங்கள் இருப்பதாக விண்வெளி ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்திய கூறுகள் காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
இதையடுத்து அங்கு மனிதர்களை வாழ வைக்க முடியுமா என்பது தொடர்பான ஆராய்ச்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பிரபஞ்சத்தில் நீண்ட தொலைவில் உள்ள மற்ற கிரகங்களை ஆய்வு செய்ய மிக எளிதாக நிலவில் இருந்து விண்கலங்களை அனுப்ப முடியும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
எனவே நிலவில் செய்யப்படும் ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.
நிலவில் இதுவரை அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே தங்களது விண்கலன்களை இறக்கி ஆய்வு பணிகளை செய்துள்ளன.
இந்தியாவும் 4-வது நாடாக அந்த வரிசையில் இடம் பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கின. முதல் சந்திரயான் விண்கலம் செலுத்தப்பட்டபோது அது நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது.
அதற்கான படங்கள் ஆதாரத்தையும் உலக நாடுகளுக்கு வழங்கி சந்திரயான் பிரமிக்க வைத்தது.
நிலவில் மிக எளிதான பகுதிகளில்தான் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் ஆய்வு நடத்தி வருகின்றன. நிலவின் தென் துருவத்தில்தான் அதிக கனிம வளங்களும், நீர்ச்சத்துக்களும் உள்ளன.
எனவே அங்கு முதல் கட்ட ஆராய்ச்சியை முதல் நாடாக தொடங்கும் நடவடிக்கைகளில் இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த 2019 ஜூலை 22- தேதி விண்ணில் செலுத்தியது.
பல்வேறு கட்ட பயணங்களுக்கு பிறகு, சந்திரயான்-2 விண்கலம் 2019 செப்டம்பரில் நிலவின் சுற்றுப்பாதையை அடைந்தது. எனினும், தொழில்நுட்பக் கோளாறால் லேண்டர் கலன் தரையிறங்காமல், நிலவில் மோதி செயலிழந்தது.
அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர், நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, சந்திரயான்-3 விண்கலத்தை ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்தது.
இந்த விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம்.-3 (ஜி.எஸ்.எல்.வி.மார்க்-3) ராக்கெட் மூலம் இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
ராக்கெட் ஏவுதலுக்கான 25.30 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று மதியம் 1 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து, எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.
இன்று (ஜூலை – 14) காலை சந்திரயான்-3 விண்கலத்தில் திரவ எரிபொருள் நிரப்பும் பணிகள் நடந்தன.
சில மணி நேரங்களில் இந்த பணி வெற்றிகரமாக நிறைவு பெற்றது. கிரையோஜெனிக் எந்திரத்தில் அடுக்கடுக்காக திரவ எரிபொருள் நிரப்பப்பட்டது.
இதையடுத்து இறுதி கட்ட ஆய்வுகள் நடந்தன. அதில் சந்திரயான்-3ல் உள்ள அனைத்து கருவிகளும் திருப்திகரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதுபோல சந்திரயா-3 விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட் பாகங்களும் திட்டமிட்டபடி இயங்கி வருவது உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து திட்டமிட்டபடி சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது தளத்தில் இருந்து இன்று பிற்பகல் சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
இதன் மூலம் சந்திரயான்-3 விண்கலம் தனது பயணத்தை திட்டமிட்டபடி இன்று தொடங்கியது.
சந்திரயான்-3 விண்கலம் ஏவுதலை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் வந்திருந்தனர். அமெரிக்கா, ரஷியா, சீனா அனுப்பிய விண்கலன்கள் சக்தி வாய்ந்தவை. எனவே அவை விரைவில் நிலவை சென்று அடைந்தன.
ஆனால் சந்திரயான்-3 விண்கலத்தை 10 கட்டங்களாக நிலவுக்கு அருகே கொண்டு செல்ல இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்.
எனவே சந்திரயான்-3 விண்கலம் நிலவை சென்றடைய 40 நாட்கள் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அதுவரை அதன் பயணத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் பெங்களூர் உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தங்களது கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து கண்காணிப்பார்கள்.
40 நாள் பயணத்துக்கு பிறகு ஆகஸ்டு 23-ம் தேதி நிலவில் சந்திரயான்-3 விண்கலத்தை தரை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்.
அன்று மாலை 5.47 மணிக்கு சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரை இறங்கும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
சந்திரயான்-3 விண்கலத்தின் பயணத்தில் ஏதேனும் மாற்றங்களை விஞ்ஞானிகள் செய்தால் மட்டுமே நிலவில் அது தரை இறங்குவதில் சில மணி நேரம் மாறுபடலாம்.
எனவே திட்டமிட்டபடி அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக உள்ளனர். சந்திரயான்-3 விண்கலம் 3,895 கிலோ எடை கொண்டது.
ஏற்கெனவே ஆர்பிட்டர், நிலவை சுற்றி வருவதால், இந்த முறை லேண்டர், ரோவர் கலன்கள் மட்டும் அனுப்பப்படுகின்றன.
இவை 14 நாட்கள் நிலவில் ஆய்வு மேற்கொள்ளும். இந்த திட்டம் வெற்றி அடையும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இதன் மூலம் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு, நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.