முற்றுணர்ந்த பேராசிரியர் பெரியார்!

– ‘பொன்னியின் செல்வன்’ கல்கி

தந்தை பெரியாரைப் பற்றிப் பல எழுத்தாளர்கள் வியந்தும், விமர்சித்தும் பேசியிருக்கிறார்கள்.

ஆனால் பிரபல எழுத்தாளரான கல்கி அவரைப் பற்றி எழுதியிருப்பதைப் பாருங்கள்.

“அதிக நீளம் என்னும் ஒரு குறைபாடு இல்லாவிட்டால், ஈரோடு ஸ்ரீமான் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்குத் தமிழ்நாட்டுப் பிரசங்கிகளுக்குள்ளே முதன்மை ஸ்தானம் ஒரு கணமும் தயங்காமல் அளித்துவிடுவேன்.

சாதாரணமாக, இவருடைய பிரசங்கங்கள் மூன்று மணி நேரத்துக்குக் குறைவது கிடையாது. இந்த அம்சத்தில் தென்னாட்டு இராமசாமியார் வணநாட்டுப் பண்டித மாளவியாவை ஒத்தவராவார்.

ஆனால் இருவருக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு.

பண்டிதரின் பிரசங்கத்தை அரை மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்து என்னால் கேட்க முடியாது. பஞ்சாப் படுகொலையைப் பற்றிய தீர்மானத்தின் மேல் பேச வேண்டும் என்றால் பண்டிதர் ஸிரர்ஜிதௌலா ஆட்சியில் ஆரம்பிப்பார்.

1885 ஆம் வருஷத்தில் காங்கிரஸ் மகாசபை ஸ்தாபிக்கப்பட்ட காலத்திற்கு வருவதற்கு முன் பொழுது விடிந்துவிடும்.

ஆனால் இராமசாமியார் இவ்வாறு பழங்கதை தொடங்குவதில்லை. எவ்வளவு நீட்டினாலும், அவருடைய பேச்சில் அலுப்புத் தோன்றுவது கிடையாது.
அவ்வளவு ஏன்?

தமிழ்நாட்டில் இராமசாமியாரின் பிரசங்கம் ஒன்றை மட்டும் தான் என்னால் மூன்று மணி நேரம் உட்கார்ந்து கேட்க முடியும் என்று தயங்கமால் கூறுவேன்.

உட்கார்ந்து உட்கார்ந்து இடுப்பு வலி கண்டு விடும். எழுந்து போக வேண்டும் என்று கால்கள் கெஞ்சிக் கூத்தாடும். ஆனால் போவதற்கு மனம் வராது.

தாம் மூன்றாம் வகுப்புக்கு மேல் படித்ததில்லை என்பதாக ஸ்ரீமான் நாயக்கரே ஒரு சமயம் கூறினார் என அறிகிறேன்.

இருக்கலாம். ஆனால், உலகாநுபவம் என்ற கலாசாலையில் முற்றுணர்ந்த பேராசிரியர் என்பதில் சந்தேகம் இல்லை.

எங்கிருந்து தான் அவருக்கு அந்தப் பழமொழிகளும், உபமானங்களும், கதைகளும், கற்பனைகளும் கிடைக்கின்றனவோ, நான் அறியேன்!”

-1931 ல் வெளிவந்த ஆனந்த விகடன் இதழிலிருந்து ஒரு பகுதி.

Comments (0)
Add Comment