தமிழ் சினிமாவில் டைட்டில் கார்டு பிரச்சினை!

ஆரோக்கியமான விமர்சனத்தைப் பெற்றதோடு, வசூலிலும் அள்ளிக் குவித்துள்ளது ‘மாமன்னன்’.

தயாரிப்பாளரும், நாயகனுமான உதயநிதி ஓசையில்லாமல் டைட்டில் கார்டில், தனது விசாலமான மனதை வெளிப்படுத்தியுள்ளார்.

விளம்பரம் போன்ற அனைத்து இடங்களிலும் தன்னை அவர் முன்னிறுத்தவில்லை.

வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோரது பெயருக்கு பின்னால்தான் தனது பெயரை போட்டுள்ளார்.

இதற்கு முன்னால் இப்படி நடந்ததுண்டா?

படத்துக்கு தூணாக இருக்கும் இசையைக் கொடுத்த இளையராஜாவை, டைட்டிலில் முதலாவதாக போட்டு அவருக்கு கவுரவம் செய்த இயக்குநர்கள் தமிழில் நிறைய பேர் உண்டு.

பெரிய நடிகர்களின்  சில படங்கள், டைட்டில் கார்டில் எதிர்கொண்ட   பிரச்சினைகள், டைட்டிலில் பெயரை விட்டுக்கொடுத்த நடிகர்கள் குறித்த ஒரு செய்தி தொகுப்பு:

கூண்டுக்கிளி 

எம்.ஜி.ஆர்., சிவாஜியை விட 11 வயது மூத்தவர். சிவாஜி, சினிமாவுக்கு வருவதற்கு 16 ஆண்டுகள் முன்பே எம்.ஜி.ஆர். வந்து விட்டார்.

எம்.ஜி.ஆர் தனது 19 வயதில் சதி லீலாவதி படத்தில் அறிமுகமானார். பராசக்தியில் சிவாஜி தனது சினிமாப் பயணத்தைத் தொடங்கியபோது வயது 24.

போட்டிப்போட்டுக் கொண்டு இருவரும் சமகாலத்தில் உயர்ந்தார்கள்.

தொழிலில் போட்டி இருந்ததே தவிர இரண்டு பேரும் நட்பாகவே பழகினர்.

இருவரும் சேர்ந்து நடித்த ஒரே படம் ‘கூண்டுக்கிளி’. இதன் டைட்டிலில் எம்.ஜி.ஆர் பெயர் முதலிலும் அதே நேர் கோட்டில் சிவாஜி பெயரும்  இடம் பெற்றது.

ஆரம்பகாலத்தில் எம்.ஜி.ராமச்சந்தர் என்றே டைட்டிலில் எம்.ஜி.ஆர். பெயரை போடுவார்கள். கூண்டுக்கிளியிலும் எம்.ஜி.ராமச்சந்தர் என்றே பெயர் வந்தது.

வஞ்சிக்கோட்டை வாலிபன்

வைஜயந்திமாலாவை விட பத்மினி நான்கு வயது மூத்தவர். 1948-ம் ஆண்டு தனது 16 வயதில் ‘பாகர்’ என்ற இந்திப் படத்தில் அறிமுகமாகி தனது சினிமாப் பயணத்தை ஆரம்பித்தார் பத்மினி.

வைஜயந்திமாலா, 1949-ம் ஆண்டு ‘வாழ்க்கை’ படத்தில் அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 13 தான்.

இந்திப் படங்களிலும் கொடி கட்டிப் பறந்தார். அரசியலில் காங்கிரசில் நுழைந்து மக்களவை உறுப்பினராகவும் இருந்தார்.

வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் பத்மினியும், வைஜயந்திமாலாவும் ஆடும் போட்டி நடனம் மிகவும் பிரசித்தம்.

தொழிலிலும் இருவருக்கும் போட்டி உண்டு. இதனால் அந்தப் படத்தில் யார் பெயரை டைட்டிலில் போடுவது என்பதில் இருவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டது.

இதில் ஜெயித்தவர் வைஜயந்திமாலாதான்.ஜெமினி கணேசனுக்கு அடுத்து, அவர் பெயர் போடப்பட்டது. மூன்றாவதாக பத்மினி பெயர் வந்தது.

புவனா ஒரு கேள்விக்குறி

வில்லனாக அறிமுகமான ரஜினிகாந்த் ஹீரோவாகவும், நாயகனாக நடித்து நல்லபெயர் எடுத்திருந்த சிவகுமார் வில்லனாகவும் நடித்த வித்தியாசமான படம் ‘புவனா ஒரு கேள்விக்குறி’.

இப்போது ரஜினி, சூப்பர்ஸ்டார். ஆனால் புவனா ஒரு கேள்விக்குறி வந்த சமயத்தில் சிவகுமார் தான் டாப்ஸ்டார். இதனால் பட டைட்டிலில் சிவகுமார் பெயர்தான் முதலில் இடம் பெற்றது.

கவிக்குயில் என்ற படத்தில் எஸ்.வி.சுப்பையா பெயருக்கு பிறகே ரஜினி பெயர் இடம் பெற்றதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அப்போது முதலிடத்தை நோக்கி பயணப்பட்ட ரஜினி இதனை பொருட்படுத்தவில்லை.

ராஜாவின் பார்வையிலே

ரஜினிக்கு நிகராக இன்று உச்சத்தில் இருக்கும் விஜய்யும் அஜித்தும் சமகாலத்தில், அதாவது 1990 களில் சினிமாவில் நுழைந்தார்கள். தனுஷ் போன்று, இவர்கள் ஒரே படத்திலேயே சிம்மாசனம் ஏறவில்லை.

அவர்களை வைத்து இயக்கிய டைரக்டர்கள் செதுக்கி செதுக்கி, இன்றைய உயரத்தை எட்ட வைத்தனர். 100 கோடி சம்பளம் வாங்கும் இருவரும் ’ராஜாவின் பார்வையிலே’என்ற ஒரு படத்தில் மட்டும் சேர்ந்து நடித்தனர்.

இருவருக்கும் ரசிகர் பட்டாளம் இல்லாத நேரத்தில் வெளியான அந்தப் படத்தில் விஜய் பெயர்தான் டைட்டில் கார்டில் முதலாவதாக வரும்.

இரண்டாவதாக கதாநாயகி இந்திரஜா (அறிமுகம்) பெயர் இடம் பெற்றது. மூன்றாவதாகவே அஜித் பெயர்.

இந்த விவகாரத்தில் விஜயும், அஜித்தும் தலையிடவில்லை. இயக்குநராக செய்த முடிவு அது.

இப்போது அப்படி ஒரு காரியம் நடந்திருந்தால் நிலைமையே வேறாக இருக்கும்.

‘ஒருதலை ராகம்’ படத்தை உருவாக்கியவர் டி.ராஜேந்தர்.

ஆனால், டைரக்டர் என தயாரிப்பாளர் இப்ராஹிம் பெயரே டைட்டிலில் இடம் பெற்றது.

டி.ராஜேந்தர் அப்போது போர் தொடுக்கும் நிலையில் இல்லை என்பதால் இதனை சகித்துக் கொண்டார்.

மூலக்கதை வசனம் ராஜேந்திரன் என்றும் இசை, பாடல்கள் ராஜேந்திரன் என்றும்  டி.ஆர். பெயர் இரண்டு முறை டைட்டிலில் காண்பிக்கப்பட்டதை இங்கே நினைவு கூற வேண்டும்.

பி.எம்.எம்.

Comments (0)
Add Comment