மனம் விட்டுப் பேச நெருங்கிய உறவுகள் தேவை!

தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை தரமணியில் உள்ள அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் சென்னை சைக்கிளிங் ஃபெஸ்டிவல் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டார்.

அப்போது உரையாற்றிய அவர், “எதிர்கால தலைமுறையினர் ஆன்லைன் விளையாட்டுகள் ஆன்லைன் ரம்மி உள்ளிட்டவற்றில் தங்களது நேரத்தை செலவழிக்காமல் சைக்கிள் ஓட்டுவது உள்ளிட்ட பயனுள்ள விளையாட்டுகளை விளையாடும் போது மனநலம் மேம்படும்.

தற்போது தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் முன்னேறி வருகிறது. எனவே தொழில் அதிபர்கள் தமிழ்நாட்டில் சைக்கிள்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய வேண்டும்.

டி.ஐ.ஜி. விஜயகுமாரின் மரணம் துரதிஷ்டவசமானது. முன்கூட்டியே அவருக்கு மனநல பிரச்சனை இருந்தது தெரியவந்து சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் அவர் தற்கொலை செய்து கொள்கிறார் என்றால் அந்த மன நோயின் தீவிரம் தெரிகிறது.

மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களைப் புரிந்து கொண்டு அவர்களுடன் இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் உதவியாக அரவணைப்புடன் செயல்பட வேண்டும்” எனக் கூறினார்.

இந்த நிலையில், சென்னை அயனாவரம் பகுதியில் ஆயுதப்படை  காவலர் ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் 2022 ஆம் ஆண்டு காவல்துறை பணியை பெற்றார். பின்னர் சென்னை புதுப்பேட்டை  ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு சுமார் 4 மாதத்திற்கு முன்பு திருநெல்வேலியில் திருமணம் நடைபெற்றது. மனைவியும் திருநெல்வேலி மாவட்டத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். அருண்குமார் ஆயுதப்படை காவலரிலிருந்து குதிரைப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் சென்னை அயனாவரம் பகுதியில் தனியாக வசித்து வந்த ஆயுதப்படை காவலரான அருண்குமார்  இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை மாவட்ட டிஐஜி விஜயகுமார் உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மேலும் ஒரு காவலர் சென்னையில் உயிரிழந்து உள்ளார் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment