முதுமை வரமா, சுமையா?

முதுமை என்பது மனித வாழ்வு மட்டுமன்றி அனைத்து உயிரினங்களில் கடந்து செல்ல வேண்டிய ஓரு பகுதியாகும்.

செல்களின் தோற்றமும் வளர்ச்சியும் பின்பு அதன் சிதைவுகள் அதனால் உருவாகும் விளைவுகளும் உடலியல் சார்ந்த இயக்கத்தில் தாக்கங்களை ஏற்படுத்துவது என்பது இயற்கையின் நியதி என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

முதுமையின் பிரச்சினைகள் தவிர்க்க இயலாது என்றாலும் கூட அந்த பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான பொருளாதார இன்மையும், உடல் ரீதியாக மற்றவர்களை சார்ந்து இருக்கும் நிலை உருவாகும் சூழலில்,

குடும்பம், சமூகம் சார்ந்த உறவுகளில் உரசல்களும், விரிசல்களும், நிராகரிப்புகளும், புறக்கணிப்புகளும் நிகழும் போது மனதளவில் அதிகம் பாதிக்கக்கூடிய மூத்த குடிமக்கள் வாழும் நாடுகளில் இந்தியா ஓன்று.

இதை பெரும்பாலான மூத்தகுடிமக்கள் வெளிகாட்டிக் கொள்வதில்லை. அவமானங்களை சுமந்து கொண்டு விரக்தியுடன் வேதனையுடன் முதுமையை கழிப்பவர்கள் பலர்.

தினமும் பூங்காக்களிலும் சாலை ஓரங்களை காணும் முதியவர்கள் வாழ்க்கை பிரச்சினைகள் பலரால் உணர இயலாது.

அதில் கவனமோ அக்கறையோ கொள்வதற்கு நேரமும் இல்லை. இது போன்ற சூழலில் முதியோரை சார்ந்த உறவுகளில் மிகவும் பெரும்பாலானோர் அதை சேவையாகவோ அல்லது கடமையாகவோ கருதுவதில்லை.

இதுபோன்ற மனப்பான்மை உள்ள எண்ணங்கள் மிகவும் குறைவாக உள்ள தலைமுறை இது. விதி விலக்குகள் இருக்கலாம்.

தாராளமய, தனியார்மய, உலகமய கொள்கைகளைக் கருவாக கொண்ட பெரு நுகர்வு கலாச்சாரத்தின் வணிகமய பண்பாட்டு வழிமுறைகளை பின்பற்றும் ஒரு மிகபெரிய சமூகத்தில் அனைத்து துறைகளும் லாபம் என்பதை முதன்மை குறிக்கோளாக கொண்டு இயங்குவதால், சுயநலம் சந்தர்ப்பவாதம், ஊழல் மனம் போன்றவை தவிர்க்க இயலாத உளவியலை கட்டமைத்துவிட்டது.

அறம் சார்ந்த விழுமியங்கள் தொலைந்து போவது தவிர்க்க இயலாது. எனவே நிர்ப்பந்தம் காரணமாக முதியவர்களை பேணுவதை பெரும் சுமை என கருதும் மனப்பான்மை பெருகுவது இயல்பானது.

அதீத பொருளாதார இடைவெளி பெருகி விட்ட அவசரமான வாழ்வில் அனைவரும் தங்களது வாழ்வியல் இருப்பிற்காக ஒருவரை முந்தி கொண்டு செல்லும் வேகமான வாழ்க்கை ஓட்டத்தில் தங்களை சுற்றி உள்ள உணவு உடை, உறையுள் என்ற தேவையை தாண்டி அனைத்திற்கும் ஆசைப்படும் பொருள் சார்ந்த பேராசையை முன்வைத்து, மக்களை ஈர்க்கும் வண்ணம் வணிக உத்திகள் வடிவமைக்கபட்டுள்ளன.

வணிகமயமாக்கபட்ட பண்பாட்டில் ஊறி திளைத்து வரும் உலகில் தேவைகளுக்கும் ஆசைகளுக்கும் உள்ள அளவு கோல்களை அனைவராலும் சரியாக நிர்ணயம் செய்ய இயலாது.

ஆசை பெருவெள்ளத்தில் உந்தப்படும் பெருங்கூட்டத்தையே வணிக உலகம் விரும்புகிறது.

அதை பெருக்குவதற்கான உத்திகளை விளம்பரங்கள் மூலமாகவும் மனிதன் பயணம் செய்யும் அனைத்து தடங்களையும் ஆக்கிரமித்து பேயாட்டம் ஆடுகிறது.

மக்களை ஆட்டுவிக்கிறது. பார்க்கும் காட்சி அனைத்தும், கேட்கும் ஓசை முழுவதும் விளம்பர பேரிரைச்சல் மனதின் மீது பெரும் தாக்குதலை நடத்துகிறது.

அரசியல், ஆலயம், ஆன்மிகம், கல்வி, சுகாதாரம், விளையாட்டு, கேளிக்கை என சகலமும் வணிக முன்னெடுப்புகளாக மாறிய முதலாளித்துவ சந்தை பொருளாதார வாழ்வில் மனித விழுமியங்கள் மறைந்து போவது இயல்பான ஒன்று.

இந்த புறநிலை தாக்கத்தில் வளரும் தலைமுறையிடம் அன்பு பாசம் போன்ற அனைத்துமே காலத்திற்கு ஏற்றவாறு வெவ்வேறு விதமான தாக்கங்களை அவர்களது மனதில் உருவாக்கும்.

அவை அனைத்தும் அவர்களது நடத்தையில் அவ்வப்போது முழுவதுமாக வெளிப்பட கூடும். சில நேரங்களில் அதன் ஒரு பகுதி அதை உள்ளடக்கிய எண்ணங்களின் செயல்வடிவமாகவோ வெளிப்படும்.

மிகவும் மன அழுத்தம் மிகுந்த சூழலில் திருமண உறவுகள் உருவாக்கிய இணைகளுக்கு இடையே உள்ள புரிதல், அவர்கள் குழந்தைகள் எதிர்காலம் ஆகியவற்றை நோக்கிய எதிர்பார்ப்புகள், எதிர்கால தேவைகள், வீடு வாசல், வாகனம் ஆகியவை குறித்து தேடல்கள்,

அதற்கான உழைப்பு, ஏற்றபடும் கடன் சுமை உருவாக்கும் மன அழுத்தங்கள் மிகுந்த சூழலில் வயது முதிர்ந்த பெற்றோர்களை பேணுதல் என்பது கூட தங்களது குழந்தைகள் பாதுகாப்பு பராமரிப்பு மற்றும் வீட்டிற்கான பாதுகாப்பு என்ற தேவை சார்ந்தே அமைந்திருக்கும்.

வெளிநாடுகளில் வாழ்பவர்களிடம் இதற்கான தேவை அதிகம். வயோதிகம் அதிகமானால் அது அவர்களுக்கு சுமையாக மாறும் எண்ணங்கள் உருவாகும் அல்லது உருவாக்கப்படும்.

இதை ஒரு எதிர்மறை சிந்தனையின் வெளிப்பாடாக பலர் கருதலாம். நல்ல இளைஞர்களே இல்லையா என்ற கேள்விகள் எழுவது இயல்பு.

இன்று உலகில் உள்ள பெரும்பாலான குடும்ப நிகழ்வுகள் மற்றும் செய்திகள் மற்றும் எதார்த்தம் சார்ந்த உண்மைகளை சரியான கோணத்தில் புரிந்து கொள்வது அவசியம்.

உயர் நடுத்தர வர்க்கம் மற்றும் மிகவும் வசதி படைத்தவர்கள் குடும்பங்கள் எதிர் கொள்ளும் முதியோர் பிரச்சினைகள் வேறு. உயர் நடுத்தர வர்க்கத்தில் படித்த முதியவர்கள் பலர் வாழ்வியல் எதார்த்தம் அறிந்த பக்குவம் உடைய மனிதர்கள்.

அவர்கள் இதை எளிதில் கடந்து சென்று விட முடியும். உடல் ரீதியாக மிகவும் நலிவுற்று மருத்துவ தேவைகளை சார்ந்து வாழும்போது சிக்கல்களை எதிர்கொண்டு ஆக வேண்டும்.

அதில் உருவாக்கப்பட்ட உறவுகளிடம் இருந்து உதவிக்கரம் கிடைக்கலாம். அதை தவிர்க்கும் உறவுகளே அதிகமாக இருக்கும்.

இந்த சூழலில் முதுமையில் வாழும் மனிதர்களில் கிராமங்களில் வாழும் மக்களில், ஏழை எளிய மக்கள், நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த நகர்புற மற்றும் கிராமங்களில் வாழும் மக்கள் அன்றாட தேவைக்கான வாழ்க்கை போராட்டத்தில் முதியோர் பேணுதல் என்பது மிகவும் அரிதான ஒன்றாக மாறி போய்விட்டது.

பல குடும்பங்களில் வெளியே தெரியாமால் முதியோர் கொலைகள் நடப்பது மிகவும் சாதரமானதாக மாறி வருகிறது.

இது குறித்து ஆய்வு மேற்கொள்ளும் தன்னார்வ குழுக்கள் விரிவாக அறிக்கை அளித்துள்ளன.

தேசிய குற்ற ஆவண காப்பகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 2021-ஆம் ஆண்டு முதியவர்கள் கொல்லப்பட்டதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்பது கவலை கொள்ளத்தக்கதாகும்.

முதியோர் எவ்வாறு கொலை செய்யபடுகின்றனர் என்பது பற்றி விக்கிபீடியா தகவல்தளம் விவரிக்கிறது

(படுத்த படுக்கையாக உள்ள முதியோர்களின் உயிரை வெகு விரைவில் பறிக்க தமிழ்நாட்டில் பல வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது.

• தலைக்கு ஊத்தல் எனும் தலைக்கு விளக்கெண்ணெயை நன்கு தேய்த்து குளிர்ந்த நீரில் குளிப்பாட்டி பின் இளநீரை குடிக்கச் செய்தல்.

• குடும்ப உறுப்பினர்கள் வரிசையாக தொடர்ந்து முதியோரின் வாயில் பால் ஊற்றுதல். (இதனை ஒரு சடங்காக செய்தல்

• பூச்சிக் கொல்லி மாத்திரைகள் கொடுத்தல்

• விஷ ஊசி போடுதல்.

• கண்காணாத இடத்தில் விட்டுவிட்டு வந்துவிடுதல்.)

முதியோர் பாதுகாப்பு சட்டம் 2007, அதை வலுபடுத்தும் 2019 சட்டம் பல்வேறு பொறுப்புகளையும் கடமைகளையும் அரசு அதிகாரிகளுக்கு வழங்கி உள்ளது. நீதிமன்றத்தில் பல்வேறு தீர்ப்புகள் வெளி வந்துள்ளன. தமிழ்நாடு அரசு முதியோர் பாதுகாப்பு வரைவு அறிக்கை வெளியாகி உள்ளது.

இவை எல்லாம் ஏட்டளவில் மட்டுமே உள்ளது. அரசு முதியோர் பராமரிப்பு இல்லங்கள் நிலைகளை நேரில் சென்று ஆய்வு நடத்தினால் அதன் உண்மை நிலையை அறியமுடியும்.

தனியார் நடத்தும் தொண்டு நிறுவனங்களும் இதற்கு விதி விலக்கல்ல. ஒன்றிரண்டு நிறுவனங்களை தவிர மற்ற இல்லங்கள் திருப்திகரமான நிலையில் இல்லை.

அதிகாரிகள் பலர் இதற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. அதற்கான காரணங்கள் பல.

முதியோருக்கு அளித்த ரயில் கட்டண சலுகையை கூட விலக்கி கொண்ட நாடு இது.

மனித உயிர் எனபதற்கு எந்த மதிப்பும் இல்லாத நாடு எனபதை தினசரி செய்திகள் உறுதிப்படுத்தி வருகின்றன.

எனவே, பொருள் தேடுதலுக்கான வேட்கை அதிகரித்து வரும் உலகில் பொருளாதாரம் சார்ந்த எதிர்பாரப்புகள் மட்டுமே முதியோர் பராமரிப்புகள் மீதான விருப்பு வெறுப்புகளை நிர்ணயிக்கும்.

முதியவரிடம் செல்வம் மிகையாக இருப்பின் அதற்கு தகுந்த அளவு பாசம் பெருகி ஓடும். அல்லேல் அந்த முதியவர் தேவையற்ற ஒரு பொருளாக கருதும் எண்ணம் மேலோங்கும்.

இவை பொருள் சார்ந்த உலகின் கோட்பாடுகளால் நிர்ணயிக்கப்பட்ட எதார்த்தங்கள். இதில் முதியவர்கள் பாசப் பறவைகளாக இருந்தால் பிரச்சனைகளில் உழல்வது முதியவர்களாகவே இருப்பார்கள்.

பெருகி வரும் ஓய்வு கால இல்லங்கள் மற்றும் முதியோர் பராமரிப்பு இல்லங்கள் இதற்கு சான்று. ஓய்வு கால இல்லங்கள், முதியோர் பராமரிப்பு இரண்டும் வேறு. எனினும் இரண்டும் இணைந்த சேவைகளை தரும் இல்லங்கள் உள்ளன.

இதில் பொருளாதார தன்னிறைவு பெற்றவர்கள் தங்களை இது போன்ற இல்லங்களை தேர்ந்தெடுத்து அதற்கு தகுந்த வாழ்க்கை முறையை மேற்கொள்வதை இன்றைய உலகின் போக்கை அறிந்த பல அறிவார்ந்த பெருமக்கள் உணர்ந்துள்ளனர். அவர்களது வாரிசுகளும் அதை விரும்புகின்றனர்.

உறவுகளில் அன்பு, பாசம், நேசம் இவை மனித உணர்வுகளோடு இணைந்தவை. இவைகளை தாண்டிய பந்தம் பிணைப்பு போன்றவற்றை வாழ்வியல் எதார்த்தம் என்பதோடு பொருத்தி பார்த்து அதனடிப்படையில் வாழ்க்கையை முறை யை அமைத்து கொள்வது நலம்.

மிகையான பந்தம், பிணைப்பு போன்றவைகளில் தங்களை ஆட்படுத்தி கொள்பவர்கள் உறவுகளால் உருவாகும் சிறு உரசல்கள் மற்றும் விரிசல்களால் அதிகமான பாதிப்பிற்கு உள்ளாவார்கள்.

இதை அறிந்தவர்கள் இதற்கான சூழல் உருவாகுவதை தவிர்த்து விடுவார்கள். அது போன்ற நிலை உருவானால் அதற்கு தகுந்தவாறு அதை கையாளும் மனபக்குவம் மற்றும் அதை கடந்து போகும் மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள்.

“அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு”.

பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதின் பொருள் பொதிந்த வரிகளை அன்றே உணர்ந்த வள்ளுவர் இப்படிப் படைத்துள்ளார்.

இவ்வுலகம் பொருள் சார்ந்த இயங்கும் என்பதே இயக்கவியல் பொருள்முதல் வாதம் முன்வைக்கும் அறிவியல் கோட்பாடு.

அவ்வுலகம் என்பதும் அனுமானம். அது நம்பிக்கை சார்ந்த ஒரு கருத்து. அது கருத்து முதல் வாதம் உரைக்கும் கூற்றாகும். மிகப்பெரிய மனித சமூகம் இயல்பாகவே இயற்கையின் பேராற்றல் மீது கொண்டிருந்த அச்சம் அவற்றை வணங்கிட வைத்தது.

பின்னாளில் அதுவே இறை நம்பிக்கையாக வேறு ஒரு பரிமாணமாக உருவெடுத்தது. அது மதம் என நிறுவன கட்டமைப்புக்குள் நிர்மாணிக்கப்பட்ட போது அது தனிமனித சுரண்டலை தக்க வைக்கவே அதிகம் பயன்படுத்தப்பட்டது.

இதில் அருள், மனித நேயம், கருணை, அன்பு போன்றவ நன்னெறிக் கோட்பாடுகள் இணைக்கபட்டது. அதன் மற்ற நோக்கங்களை மறைப்பதற்கு காரணமாயிருந்தது.

சமூகத்தின் சமநிலை பேணுவதற்காக அருள் நெறி இருப்பது அவசியம் என்பதன் பொருட்டு அருள் சார்ந்த வாழ்வு அவ்வுலக வாழக்கையை பேணும் என்ற கருத்து முன்னிலைப் படுத்தபட்டது.

சொர்க்கம், நரகம் என்பது மனிதத் தேடலின் உருவாக்கங்களே! உண்மையில் சொர்க்கமும் நரகமும் இவ்வுலக வாழ்வின் நிகழ்வுகளே. சிலருக்கு வாழ்க்கை முழுவதும் சொர்க்கமயமாக இருக்கலாம். சிலருக்கோ வாழ்க்கை முழுமைக்கு நரகமாக அமையலாம். சிலருக்கு சொர்க்கம் மற்றும் நரகம் மாற் மாறி அமையலாம்.

இவற்றையும் கருத்து முதல் வாதம், ஊழ்வினை பயன் என வகைப்படுத்தப்படுகிறது. அதை கர்மா என்றும் கூறுகின்றனர்.
ஊழ் வினை வந்து உறுத்தும் என இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடுகிறார்.

ஊழ் என்பது குறித்து வள்ளுவர் கூறிய கருத்துகள் கூட விவாத்திற்குரியவை.
அவை முற்பிறவி தொடர்புடையது அல்ல. அது முந்தைய செயல்களின் எதிர்வினை என்ற கருத்தும் கூறப்படுகிறது.

கணியன் பூங்குன்றனார் இதை தெளிவாக ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்று கூறியுள்ளார்.

எந்த வினைக்கும் அதற்கு இணையான எதிர்வினை உண்டு என்ற இயற்பியல் அறிஞர் ஐசக் நியூட்டன் அறிவியல் மூன்றாவது விதியை உற்று நோக்க வேண்டும்.
இவற்றுக்கும் முதுமைக்கும் என்ன தொடர்பு என்ற வினா எழுவது இயல்பு.

ஏனெனில் இளமையின் வாழும் வாழ்க்கை முறை, சரியான திட்டமிடுதல் இன்மை மற்றும் உடலை கேணுவதில் உள்ள அலட்சிய போக்கு, உணவு முறை, பிற்கால பொருள் தேவை குறித்த விழிப்புணர்வு இன்மை போன்ற பல்வேறு காரணங்களால் இதற்கான எதிர்வினை உருவாகும் என்ற புரிதல் அவசியம்.

எல்லோரும் இதைப்போல எச்சரிக்கையோடு இருப்பார்கள் என எதிர்பார்க்க இயலாது.

எச்சரிக்கையோடு இருந்தாலும் சில நிகழ்வுகள் வாழ்வின் பாதையை தடம் மாற்றவோ சில நேரங்களில் தடம் புரள வைத்து விடும்.

இது போன்ற நிகழ்வுகளுக்கு விடைகளும் இருக்கும் சில நிகழ்வுகளுக்கு விடை இல்லை. விடை தெரிந்தவற்றை அறிதல் அவசியம். அதை படிப்பினை என்று கருதி அதற்கு ஏற்ற நிலைபாட்டை மாற்றி கொள்ளுதல் நலம் பயக்கும்.

இதை விடுத்து அருள் கூறும் அவ்வுலக வாழ்க்கை குறித்த அக்கறையில் ஆன்மிக அடைக்கலம் செல்பவர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அதில் அமைதி கிடைப்பதாக கருதுகிறவர்கள் பலர். அது அவரவர் விருப்பம் சார்ந்த உரிமை.

ஏனோ அது “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே, அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே” என்ற பாடல் வரிகளை நினைவுபடுத்துகிறது.

வாழ்வியல் எதார்த்தம் அறிந்தவர்கள் பலருக்கு முதுமை வரமாக இருக்கும். அவர்களுக்கு கூட சில நிகழ்வுகள் சுமையாக மாற்றி விடும்.

ஜப்பான் ஓக்கினோவா மாநிலம் மற்றும் உலகின் மத்திய தரைக்கடல் தீவு மற்றும் அமெரிக்க நாட்டின் பசிபிக் பெருங்கடல் தீவுகளில் முதியோர்கள் அதிக அளவில் உடல் நலம் மற்றும் மனநலம் போன்ற குறியீடுகளில் ஆரோக்கியமான வாழ்க்கையில் உள்ளார்கள் என்று தரவுகள் கூறுகிறது.

ஜப்பானில் இந்த வாழ்க்கைக்கு அடித்தளமான கோட்பாடு IKIGAI என்ற அழைக்கப்படுகிறது. வாழ்வின் நோக்கம் அர்த்தமுடையதாக இருத்தலின் அவசியத்தை உள்ளடக்கியது இந்தக் கோட்பாடு.

இதை தவிர்த்த பல்வேறு காரணங்களான புவியியல் தன்மை, உணவு பழக்கம், வாழ்க்கை முறை போன்ற பல காரணிகள் நீடித்த வாழக்கைக்கான பின்புலம் என கருதபடுகிறது.

ஒரு சிறிய நினைவூட்டல்.

“விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும் விரல்கள் என்னவோ ஜன்னல் கம்பிகளோடதான்” – கவிஞர் மு.மேத்தா

– பாலு

Comments (0)
Add Comment