தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்த பாலனின் அடுத்த படைப்பான ‘அநீதி’ திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது.
தெலுங்கு பதிப்பிற்கு ‘பிளட் அண்டு சாக்லேட்’ என்று பெயரிடப்பட்டு ஜூலை 21 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமான முறையில் வெளியாகவுள்ளது.
சென்னையில் நடந்த ‘அநீதி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, ” நா. முத்துக்குமார் அவர்கள் வசந்தபாலன் பற்றி நிறைய சொல்லுவார்.
நா. முத்துக்குமாரின் நீட்சியாகத்தான் இந்த திரைப்படத்தில் நான் இரண்டு பாடல்களை எழுதி உள்ளேன். ஒன்று காதல் பாடலாகவும் மற்றொன்று நீதி, அநீதி பற்றி விவரிக்கும் பாடலாகவும் அமைந்துள்ளது” என்றார்.
நடிகை வனிதா விஜயகுமார், “இத்திரைப்படத்தின் மூலம் ஒரு இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரை உலகில் நான் மீண்டும் பிரவேசிக்கிறேன். இது ஒரு மிகவும் அருமையான திரைப்படம்.
திரைத்துறையின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக இருந்தும் வசந்த பாலனிடம் துளி அளவு கர்வம்கூட இல்லை.
அத்தனை எளிமையாக அனைவரிடமும் பழகுகிறார்.
இப்படத்தில் பணியாற்றி உள்ள அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்கள். ‘அநீதி’ திரைப்படம் பெரிய வெற்றியை பெறும்” என்றார்.
நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி, “வசந்தபாலன் ஒரு துருவ நட்சத்திரம் போன்றவர்.
ஆஸ்திரேலியாவில் நான் வசித்த காலத்தில் அவரது படங்களை தொடர்ந்து பார்த்து ரசிப்பேன். அவரது இயக்கத்தில் நான் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சி.
இப்படத்தில் நடித்த பின்னர் அர்ஜுன் தாசின் ரசிகனாக நான் மாறிவிட்டேன்.
சிறு வயதிலேயே மிகுந்த திறமையோடு அவர் திகழ்கிறார். ‘அநீதி’ திரைப்படம் மிகவும் செம்மையாக உருவெடுத்துள்ளது” என்று வாழ்த்தினார்.
நடிகை துஷாரா விஜயன், “இயக்குநர் வசந்தபாலன் மிகுந்த அர்ப்பணிப்பு மிக்கவர், அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்.
ஒப்பனை இல்லாமலேயே இப்படத்தில் என்னை மிகவும் அழகாக காட்டிய ஒளிப்பதிவாளருக்கு நன்றி. அர்ஜுன் தாசுடன் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது, அவர் ஒரு சிறந்த நடிகர்” என்று பாராட்டினார்.
நடிகர் அர்ஜுன் தாஸ், “இயக்குநர் வசந்தபாலன் என்னை சந்திக்கவேண்டும் என்று கூறிய போது வில்லன் பாத்திரத்தில் நடிக்கத்தான் கூப்பிடுகிறார் என்று எண்ணினேன்.
ஆனால் அவர் சுமார் மூன்றரை மணி நேரம் கதையை பொறுமையாக விவரித்ததுடன், இதில் நாயகனாக நடிக்கவேண்டும் என்று கூறி என்னை மகிழ்ச்சியில் ஆற்றினார்.
அடுத்த நாளே இந்த படத்தில் நடிக்க நான் ஒப்பந்தமானேன்”
இயக்குநர் வசந்தபாலன், “வல்லான் வகுத்ததே நீதி, எளியோருக்கு இங்கு அநீதி என்ற இந்த காலகட்டத்தில் நீதியை உரக்கச் சொல்ல இந்த ‘அநீதி’ திரைப்படம் வருகிறது.
நீதி கிடைக்காதவர்கள் குரலாக இப்படம் ஒலிக்கும். எளிமையான மனிதர்களின் வாழ்க்கையை இது பிரதிபலிக்கும்.
மொத்த உலகமும் சிறு அன்பை எதிர்பார்த்தே சுழல்கிறது. அதை இப்படத்தின் மூலம் சொல்ல முயற்சித்துள்ளோம்” என்றார்.