பட்ஜெட் பேதமின்றி வசூலைக் குவிக்கும் படங்கள்!

கொரோனா ருத்ரதாண்டவம் ஆடிய கொடிய நேரத்தில் அதலப்பாதாளத்துக்கு  சரிந்த தொழில்களில் சினிமாத்துறை முக்கியமானது.

ஷூட்டிங், டப்பிங் போன்ற வேலைகள் எப்போதாவது, எங்கேயாவது நடந்தாலும் திரையரங்குகள் மாதக்கணக்கில் மூடப்பட்டன.

திரையரங்குகள் மீண்டும் உயிர்ப்பெறுமா? என்ற  சந்தேகம் சினிமா உலகை தாண்டியும் விவாதிக்கப்பட்டது.

பேயாட்டம் ஆடி லட்சக்கணக்கான உயிர்களை எடுத்துசென்றபின் ஆட்டத்தை நிறுத்தியது கொரொனா. திரை உலகம், குறிப்பாக தமிழ் சினிமா மறுமலர்ச்சி அடைந்தது.

கோடிகளைக் கொட்டி எடுக்கப்பட்ட படங்களோடு, ஜீவனுள்ள கதைகளோடு வந்த படங்களும் ஹிட் அடித்தன.

பொன்னியின் செல்வனும், லவ்டுடேவும் ஆகச்சிறந்த உதாரணங்கள்.

இப்போது மாமன்னனும், போர்தொழிலும் திரை உலகின் அனைத்து தரப்பினரையும் (தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள்) சந்தோஷக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

மாமன்னன்

’பரியேறும் பெருமாள்’ படத்தில் தென் மாவட்டத்தில் நடைபெறும் ஜாதிய வன்மத்தை சொன்ன மாரி செல்வராஜ், மாமன்னன் படத்தில் கொங்குநாட்டில் நிகழும் அவலத்தைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்கள் நடிக்க, பெரும் பட்ஜெட்டில்  தயாரிக்கப்பட்டது.

பட ரிலீசுக்கு முன்னரே வெளியான இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள், படத்துக்கு நல்ல விசிட்டிங் கார்டாக அமைந்தன.

உதயநிதியின் ரெட் ஜெயண்ட்  மூவீஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

படம் முடிவடையும் சமயத்தில் உதயநிதி அமைச்சர் பொறுப்பு ஏற்றதால் ‘மாமன்னன் எனது கடைசி படமாக இருக்கும்’ என அறிவித்தார்.

ஜூன் 29 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை அன்று படம் வெளியானது.

தமிழகம் முழுவதும் சுமார் 700 திரையரங்குகளில் மாமன்னன், ரிலீஸ் செய்யப்பட்டது. உதயநிதி, இதுவே தனது கடைசி படம் என சொன்னதால், முதல் நாளில் எல்லா தியேட்டர்களிலும் திருவிழாக் கூட்டம்தான்.

படம் வெளியான முதல் தினத்தன்று, ’பொன்னியின் செல்வன்’ முதலாம் பாகத்தின் வசூலை தாண்டி மாமன்னன் வசூல் செய்துள்ளது.

உலகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் மாமன்னன் 10 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

போர் தொழில்

குறைந்த செலவில் உருவாகி, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வசூலை வாரிக் குவித்த படம் ‘போர்தொழில்’.

புதுமுக இயக்குநர் விக்னேஷ்ராஜா இந்தப் படத்தைத் இயக்கியுள்ளார்.

சூது கவ்வும், ஓ மை காட், தெகிடி ஆகிய படங்களில் நடித்த அசோக் செல்வன், இதன் ஹீரோ. அவருடன் சரத்குமாரும் இணைந்து நடித்துள்ளார்.

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த இந்தப்படம் கடந்த மாதம் வெளியானது. கிரைம் த்ரில்லர் ரகத்தைச் சேர்ந்த படம்.

சுமார் 5 கோடி ரூபாய் செலவில் உருவான போர்தொழில் 20 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை ரிலீசுக்கு முன்பே தயாரிப்பாளர், சோனி லைவ் நிறுவனத்துக்கு விற்று விட்டார்.

அந்த ஒப்பந்தத்தின்படி விரைவில் சோனி லைவில் போர்தொழில்  வெளியிடப்பட உள்ளது.

இதனால் திரையரங்கு வசூல் பாதிக்கப்படும் என கருதும் தியேட்டர் அதிபர்கள், இன்னும் பத்து பதினைந்து நாட்கள் கழித்து ஓடிடியில் வெளியிடுமாறு கோரிக்கை வைத்தனர்.

ஆனால், அதனை ஏற்க சோனி நிறுவனம் மறுத்து விட்டது.

தியேட்டருக்கு வருவார்கள். படம் சூப்பர்டூப்பர் ஹிட் அடித்ததால், சென்னையில் அண்மையில் படத்தயாரிப்பாளர் நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தினார்.

விழாவில் பங்கேற்ற சரத்குமார், ’’அனைவரும் நேரம் காலம் பார்க்காமல் உழைத்ததால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. தியேட்டருக்கு யாரும் வரமாட்டார்கள் என நினைக்க வேண்டாம். நல்ல படங்களை உண்மையுடன் எடுத்தால் மக்கள் கண்டிப்பாக தியேட்டர்களுக்கு வருவார்கள்” என யதார்த்த நிலையைப் புட்டு வைத்தார்.

– பி.எம்.எம்.

Comments (0)
Add Comment