அபாய கட்டத்தைத் தாண்டிய உலக சராசரி வெப்பநிலை! 

உலக சராசரி வெப்பநிலை அபாய கட்டத்தை கடந்துள்ளது. பூவுலகை அழிவிலிருந்து காக்க நாம் என்ன செய்யப்போகிறோம் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகின் சராசரி வெப்பநிலை கடந்த 3-ம் தேதி 17 புள்ளி பூஜ்ஜியம் ஒன்று டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து, அந்த நாள் உலகின் மிக அதிக வெப்பம் தகித்த நாளாகப் பதிவாகி உள்ளது.

உலகின் சராசரி வெப்பநிலையை 16 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் வல்லுனர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், புவிவெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதும், அதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் நடவடிக்கை எடுக்காததும் கவலையளிக்கிறது.

உலகின் சராசரி வெப்பநிலையை கட்டுப்படுத்த வேண்டிய இலக்கான 16 டிகிரி செல்சியஸ் என்ற இலக்கைக் கடந்து 17 புள்ளி பூஜ்ஜியம் ஒன்று டிகிரி செல்சியசாக அதிகரித்திருக்கிறது.

இனிவரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கும் என்றும், வெப்பமயமாதலுக்குக் காரணமான பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் மிக மோசமான விளைவுகளை உலகம் எதிர்கொள்ளும் என்றும் காலநிலை வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பூமியிலிருந்து கரியமில வாயு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றப்படும் அளவை 2010-ம் ஆண்டில் இருந்ததை விட 2030-ம் ஆண்டுக்குள் 45 விழுக்காடு குறைக்க வேண்டும்.

சுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றப்படும் அளவையும், அவை அகற்றப்படும் அளவையும் 2050-ம் ஆண்டுக்குள் சமமாக ஆக்க வேண்டும் என்பதுதான் கிளாஸ்கோ நகரில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற 26-வது ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டில் தீர்மானத்தின் அடிப்படையாக இருந்தது.

ஆனால், இந்த இலக்குகளை அடைவதற்கான வழிமுறைகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

– தேஜேஷ்.

Comments (0)
Add Comment