மனம் மாற்றிய பொன்னியின் செல்வன்!

பெரிதினும் பெரிது கேள்:

பெருநிறுவனத்தில் தலைமைப் பொறுப்பை வகிக்கும் நண்பர், தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் நேரம் செலவழிக்கப் போவதாகவும், அதற்காக தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் அறிவிக்கிறார்.

இதுபற்றிய அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார் பத்திரிகையாளர் ம.கா. சிவஞானம்.

நேற்று ஒரு நண்பனிடம் பேசிக் கொண்டிருந்தேன். மிகப்பெரும் கம்பெனி ஒன்றை வெற்றிகரமாக நடத்தி வருபவன்.

இனி சொந்த வாழ்க்கைக்காக நேரம் செலவழிக்கப் போவதாகவும், இதற்காக கம்பெனியின் நிர்வாகத்தில் தனது நேரடி பங்களிப்பை குறைத்துக் கொள்ளும் வகையில் பெரியதொரு மாற்றத்துக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் கூறினான்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நிர்வாகத் திறன் மிக்கவன். நிறைய படித்துப் படித்து, தன்னை கூர்தீட்டியபடி பிரமாண்டத்தை நோக்கி வளர்ந்து கொண்டிருப்பவன்.

அப்படிப்பட்டவனை இப்படியொரு தடாலடி முடிவுக்கு மாற்றியது எதுவாக இருக்கும்?

தொழில், நிர்வாகம் சார்ந்து அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் அவனிடம் பேசும்போதெல்லாம் ‘சமீபத்தில் என்ன படித்தாய்?’ என்பதே நான் கேட்கும் முதல் கேள்வியாக இருக்கும்.

இந்த முறை, தான் பார்த்த ஒரு காட்சியை சொன்னான்.

‘பொன்னியின் செல்வன் – 2’ படக்காட்சி அது.

அருண்மொழி வர்மன் தனக்கு அளிக்கப்பட்ட மணிமுடியை மதுராந்தக தேவனுக்கு வழங்க முற்பட்டபோது, ‘வேண்டாம்.. எனக்கு அந்தத் தகுதி இல்லை. நான் தகுதிக்கு மீறி ஆசைப்பட்டவன்..’ என்று மறுப்பான் மதுராந்தக தேவன்.

அப்போது ‘பேராசைதான் அரசர்களுக்கு அழகு’ என்று சொல்லி நீண்டதொரு விளக்கமும் தருவான் அருண்மொழி.

இதைச் சொல்லிவிட்டு, “பேராசைதான் தலைவனுக்கு தகுதி என்பதில் நான் உடன்படுகிறேன். அதுதான் வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லும். ஆனால், இப்போது எனக்கு பேராசை இல்லை. என் மனம் அதைக் கடந்து நிற்கிறது.

சிவஞானம்

அப்படியிருக்க, நான் தலைவனாக இருந்து வழிநடத்துவது, அது என் கம்பெனியில் பணிபுரிவோரின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல தானே?!

சில ஆண்டுகளாகவே என் மனதில் உருப்பெற்று வந்த விஷயம்தான்.. இந்த வசனம் அதை தெளிவுபடுத்திவிட்டது…” என்றான் நண்பன்.

இந்த உரையாடலில் நான் அறிந்தது எது என யோசித்துப் பார்த்தேன்.

தரமான பத்திரிகைகள் என்று பேர் வாங்கியும், ‘மல்லிகை மகள்’ குழுமம் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்காதது ஏன் என்பதற்கான பதிலில் நான் இதுவரை அறியாதிருந்த அந்த ரகசிய கூட்டுப்பொருள் எதுவென்று பளிச்சென்று விளங்கியது!

ஒரு பதிப்பாளராக – எனக்கான நவீன புத்தனாக தெரிந்தான் நண்பன்.

Comments (0)
Add Comment