ஒற்றுமைப்படுமா எதிர்க்கட்சிகள்?

‘தாய்’ தலையங்கம்

*

ஒன்றிய அரசை அகற்றும் நோக்கத்தை முன்வைத்து இதற்கு முன்பு சில சந்தர்ப்பங்களில் எதிர்க்கட்சிகள் தங்கள் முரண்களை ஒதுக்கி வைத்து ஒன்று சேர்ந்திருக்கின்றன.

நெருக்கடி நிலைக்குக்குப் பிறகு இந்திரா காந்தியை எதிர்த்து ஜனதாக் கூட்டணியாகப் பல கட்சிகள் ஒன்று சேர்ந்தன. பின்னாளில் பிரதமராக இருந்த வாஜ்பாயும் அந்தக் கூட்டணியில் அங்கம் வகித்தார்.

அதைப் போலவே ஒன்று சேர்வது குறித்துப் பேசிக் கொண்டிருந்த வெவ்வேறு எதிர்க்கட்சிகள் அண்மையில் பாட்னாவில் ஒன்று சேர்ந்து முதற்கட்ட ஆலோசனையை நடத்தியிருக்கின்றன.

காங்கிரசும், பல்வேறு தேசிய, மாநிலக் கட்சிகளும் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில், கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. பிரதமர் வேட்பாளர் குறித்தும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

முதற்கட்டமாக நடந்த அந்த ஆலோசனைக் கூட்டத்திலேயே பல முரண்கள் வெளிப்பட்டன. ஆம் ஆத்மி ஒட்டியும் ஒட்டாமல் இருந்தது விமர்சனத்திற்கு உள்ளானது.

அடுத்த கட்டக்கூட்டம் கர்நாடகாவில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மூத்த தலைவரான சரத்பவாரின் கட்சிக்குள் குழப்பம் உண்டாக்கப்பட்டு நாற்பது எம்.எல்.ஏ.க்களுடன் அஜித்பவார் வெளியேறி அதிகாரப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.

இது ஒருவிதமான அரசியல் சதுரங்க விளையாட்டு மாதிரி தான். காய்கள் பின்னிருந்து நகர்த்தப்படுகின்றன.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அந்த முயற்சிக்கு ஒரு முட்டுக்கட்டையாகவே இந்த எதிர்வினை நடந்திருக்கிறது.

ஏற்கனவே மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள முக்கியப் புள்ளிகளை நெருக்கடிக்கு ஆளாக்கி வருகிறது அமலாக்கத்துறை.

2024 – நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க இந்த நெருக்கடிகள் இன்னும் அதிகரிக்கலாம். பல கைதுகள் நடந்து ஊழல் குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் வெளிவரலாம்.

சில கட்சிகள் மேலும் பலவீனமாக்கப்படலாம். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதைத் தடுக்க என்னென்ன தந்திரங்களைக் கையாள முடியுமோ, அனைத்தையும் செய்யத் தயாராகவே இருக்கும் மத்தியில் இருக்கும் ஆளும் கட்சி.

இதையெல்லாம் எதிர்பார்த்த நிலையில், இதையும் கடந்து தான் எதிர்க்கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டியிருக்கிறது.

நாட்டு மக்களிடம் நம்பிக்கை உருவாக வேண்டும் என்றால், தங்களுடைய ஈகோக்களைத் தாண்டி எதிர்க்கட்சித் தலைவர்கள் முடிவு எடுத்தால் தான் அது சாத்தியப்படும்.

Comments (0)
Add Comment