காலத்தை வென்று நிற்கும் கருத்துக்கள்!

சமுதாய சிந்தனை, சமநிலைப்‌ பார்வை, உயர்ந்த லட்சியம்‌, உன்னத கோட்பாடு, வீரம்‌, விவேகம்‌ என அத்தனை தலைமைப்‌ பண்புகளும்‌ நிறைந்த மாமனிதர்‌ – தனது எழுச்சியிகு அறவுரைகளால்‌, பாரத தேசத்தின்‌ பண்பாடு, கலாச்சாரம்‌, புகழ்‌ அத்தனையையும்‌ உலகெங்கும்‌ ஒலிக்கச்‌ செய்த மகான் ‌- வீரத்துறவி விவேகானந்தர்‌ பிறந்த தினமான இன்று (ஜூன் – 4) சர்வதேச இளைஞர்‌ தினமாக அனுசரிக்கப்படுகிறது.

1863-ம் ஆண்டு பிறந்து 39 ஆண்டுகளே வாழ்ந்து மறைந்த விவேகானந்தர்‌, தனது குறுகிய கால வாழ்க்கைப்‌ பயணத்தில்‌ ஆற்றிய சமுதாயப்‌ பணிகள் அளப்பரியது.

“நீ மனிதனாகப் பிறந்திருக்கிறாய். நீ வாழ்ந்து மறைந்ததற்கு அறிகுறி எதையாவது விட்டுச் செல்’’ என அறிவுரை மட்டும் கூறவில்லை.

தான்‌ வாழ்ந்து மறைந்ததற்கு அந்த மாமனிதன்‌ விட்டுச்‌ சென்ற அறிகுறிகள்‌ ஒன்றல்ல இரண்டல்ல… ஓராயிரம்‌. அத்தனையும்‌ காலத்தை வென்று நிற்கும்‌ கருத்துப்‌ பெட்டகம்‌.

எண்ணும்‌ எணணங்களில்‌ வாய்மை, எடுக்கும்‌ காரியங்களில்‌ நேர்மை, பேசும்‌ பேச்சுகளில்‌ வலிமை… அவரது அகச்சிந்தனைகளும்‌, புறச்செயல்களும்‌ உலகையே திரும்பிப்‌ பார்க்க வைத்தன.

பாரத தேசத்தை பாம்பாட்டிகள்‌ தேசம்‌ என இகழ்ந்துரைத்த மேலைநாட்டவர்களின்‌ நாவை, தனது கம்பீரமான தோற்றத்தாலும்‌, கருத்து செறிந்த
பேச்சாற்றலாலும்‌ அடக்கி, புகழ்ந்துரைக்கச்‌ செய்தார்‌.

உலகிலுள்ள பிற நாடுகளில்‌, கொடுமைப்படுத்தப்பட்டவர்களுக்கும்‌, நாட்டைவிட்டு விரட்டி அடிக்கப்பட்டவர்களுக்கும்‌ புகலிடம்‌ கொடுத்த புண்ணிய பூமி பாரததேசம்‌ என நமது தேசத்தின்‌ புனிதத்தையும், புகழையும்‌ உலகுக்கு பறைசாற்றினார்.

பிரச்சினைகளையும், தோல்விகளையும்‌ கண்டு பயந்து ஓடாமல்,‌தைரியத்துடன்‌ எதிர்த்து நின்றால்‌, அவை‌ நம்மை விட்டு ஓடிவிடும்‌. பயந்து நின்றால்‌, அவை‌ நம்மைத்‌ துரத்திக்‌ கொண்டே இருக்கும் என்றார். அவரது எளிய செய்திகளில்‌ கனம்‌ இருந்தன.

“உயிர் போகும்‌ நிலை வந்தாலும்‌, தைரியத்தை விடாதே! நீ சாதிக்கப்‌பிறந்தவன்‌, துணிந்து நில்‌. எதையும்‌ வெல்‌” – தைரியத்தை ஊட்டி இளைஞர்களுக்கு வழிகாட்டினார்‌.

நன்மை செய்வது தான்‌ வாழ்வு, நன்மை செய்யாமல்‌ இருப்பது சாவு என நன்மையின்‌ நன்மை பற்றிக்‌ கூறி, ஏழை எளியோருக்காக இதயமே நின்று, மூளை குழம்பி, பைத்தியம்‌ பிடித்து விடுமெனத்‌ தோன்றும்‌ வரையிலும்‌ உணர்ச்சி கொள்ளுங்கள்‌, உணர்ச்சி கொள்ளுங்கள்‌ என இளைஞர்களை ஊக்கப்படுத்தினார்‌.

பணத்தால்‌ பயனில்லை; பெயரால்‌ பயனில்லை, புகழால்‌ பயனில்லை; அன்பு ஒன்றுதான்‌ பயன்‌ தருவது என இளைஞர்கள்‌ மனதில்‌ அன்பைப்‌ பாய்ச்சினார்‌. பணம்‌, பெயர்‌, புகழ்‌ எல்லாமே வெறும்‌ குப்பை என்றார்‌.

தான்‌ விரும்பும்‌ இளைஞன்‌, இரும்பைப்‌ போன்ற தசையும்‌, எஃகை ஒத்த நரம்புகளும்‌, இடி எதனால்‌ ஆக்கப்படுகிறதோ அதே பொருளால்‌ செய்யப்பட்ட மனமும்‌ உடையவர்களாக இருக்க வேண்டும்‌ என விரும்பினார்‌.

உலகில்‌ உள்ள மதத்தலைவர்கள்‌ அனைவரும்‌ அவரவர்‌ மதங்களின்‌ உயர்வைப்‌ பற்றி பேசிக்‌ கொண்டிருக்க, விவேகானந்தர்‌ மட்டும்‌ அனைத்து மதங்களுக்கும்‌ இடையே இருக்க வேண்டிய ஒற்றுமை பற்றி பேசி உலகுக்கு புதியதொரு திசையைக்‌ காட்டினார்‌.

தத்துவமோ, அறவுரையோ ஏழைகளுக்குத்‌ தேவையில்லை. பசியைத்‌ தீர்க்கும்‌ உணவு தான்‌ அவர்களுக்குத்‌ தேவை என ஏழை எளிய மக்களுக்காக உரக்கக்‌ குரல்‌ கொடுத்தார்‌.

’நமது தேசத்தின்‌ முன்னேற்றம்‌, இளமையும்‌, வேகமும்‌ உள்ள இளைஞர்களின்‌ கடினமான உழைப்பால்தான்‌ சாத்தியம்‌; ஒவ்வொரு இளைஞனும்‌ சுயமாக சிந்தித்து, சொந்தமாக உழைத்து முன்னேற வேண்டும்.

மற்றவர்களைக்‌ காப்பியடிப்பது கோழைத்தனமான பலவீனம்‌; ஒவ்வொரு இளைஞனின்‌ வளர்ச்சியும்‌ தனக்கே உரித்தான தனித்தன்மையுடன்‌ இருக்க வேண்டும்’‌ என இளைஞர்களுக்கு அறிவுரைக் கூறி வழிகாட்டினார்‌.

இயற்கையின் கொடையான உலகத்தை, சுயநலம்‌, வன்முறை, ஊழல்‌ பேராசை மூலம்‌ மனிதன்‌ நரகமாகி விட்டான்‌ என வேதனைப்பட்டார்‌.

வாழ்க்கையில்‌ வெற்றி இலக்கை எட்டிப்பிடிக்க, ஒவ்வொருவரும்‌ உண்மையை விடாமல்‌ பிடித்துக்‌ கொள்ள வேண்டும்‌; உண்மைக்குப்‌ புறம்பான
விஷயங்கள்‌ அனைத்திலும்‌ எச்சரிக்கையாக இருக்க வேண்டும்‌; நம்‌ தேசத்தில்‌ பிறந்த புழு கூட உண்மைக்காக உயிர்‌ விட வேண்டும்‌.

உண்மையைப்‌ பிரச்சாரம்‌ செய்து கொண்டே கடமை என்னும்‌ களத்தில்‌ உயிர்‌ துறப்பதுதான்‌ சிறந்தது என உண்மைத்‌ தேடலின்‌ அவசியத்தை வலியுறுத்தினார்‌.

1893-ம்‌ ஆண்டு, அமெரிக்கா, சிகாகோ நகர்‌ சர்வசமய மாநாட்டில்‌, இந்து மதத்தின்‌ பிரதிநிதியாகக்‌ கலந்து கொண்டு, அவர்‌ ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க சொற்பொழிவு, சர்வதேச அரங்கில்‌, நமது தேசத்தின்‌ அருமையையும்‌, பெருமையையும்‌ உலகறியச்‌ செய்தது.

125 ஆண்டுகள்‌ கடந்தும்‌, அவரது சொற்பொழிவின்‌ ஆழமான கருத்துகள்‌ இன்றும்‌ பேசப்பபட்டக்‌ கொண்டும்‌, பின்பற்றப்பட்டிக்‌ கொண்ரும்‌ உயிர்ப்புடன்‌ இருக்கின்றன.

“இனவாதம்‌, மதச்சார்பு இவற்றால்‌ உருவான கொடூர விளைவுகள்‌, அழகிய இந்த உலகை நெடுங்காலமாக இறுகப்பற்றி, வன்முறையை நிரப்பி, ரத்த வெள்ளத்தால்‌ சிவக்க வைத்து விட்டது; அனைத்து விதமான மதவெறிகளையும்‌, வெறித்தனமான கொள்கைகளையும்‌, துயரங்களையும்‌, இந்த மாநாட்டின்‌ குரல்‌ அழிக்கும்‌” என கர்ஜித்தார்‌.

உலகை அச்சுறுத்திக்‌ கொண்டிருக்கும்‌, மதவெறி, இனவெறியை அழிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி தனது மாநாட்டுச் சொற்பொழிவை நிறைவு செய்தார்‌.

ஒரு ஆன்மிக ஞானியாக, அறிவுச்‌ சிகரமாக, தளராத மனவவிமையுடையவராக, இயலாது ஏதுமில்லையென்ற தன்னம்பிக்கை உடையவராக, எழுந்து நில்‌, எதையும்‌ வெல்‌ என்ற வீரனாக, சமூக சிந்தனையாளராக உயர்ந்து நின்றார்‌ விவேகானந்தர்‌.

விவேகானந்தரின்‌ சிறப்பியல்களும்‌, தனித்‌தன்மையும்‌ அனைத்துத்‌ தரப்பினரின்‌ கவனத்தையும்‌ கவர்ந்தது.

ஒருமுறை, ராமேஸ்வரத்துக்கு வந்த விவேகானந்தரை வரவேற்க, ராமேஸ்வரம்‌ பாம்பன்‌ பாலம்‌ சென்ற ராமநாதபுரம்‌ மன்னர்‌ பாஸ்கர்‌ சேதுபதி, படகு மூலம்‌ வந்து இறங்கிய விவேகானந்தரின்‌ பாதங்கள்‌ தரையில் படுவதற்கு முன்னரே, தன்‌ தலைமேல்‌ அவர்‌ பாதம்‌ படவேண்டும்‌ என்று தனது தலையைத்‌ தரையோடு தாழ்த்தி வரவேற்றார்.

பிறகு விவேகானந்தர்‌ ஏறி வந்த சாரட் வண்டியின்‌ குதிரைகளை அவிழ்த்துவிட்டு, தானே சாரட் வண்டியை இழுத்து மரியாதை செலுத்தினார்‌ என்றால்‌, மன்னருக்கும்‌ மன்னராக விவேகானந்தர்‌ உயர்ந்து விளங்கினார்‌ என்பதை நாம் உணர்ந்து கொள்ளமுடியும்.

விவேகானந்தர்‌ பற்றி பேசிய காந்தி, “மறைந்த மகான்‌ விவேகானந்தரிடம்‌ தமக்கு அத்தியந்த மரியாதையும்‌, ஈடுபாடும்‌ உண்டு. அவர் எழுதியுள்ள பல புத்தகங்களை நான்‌ ஆழ்ந்து படித்தறிந்துள்ளேன்‌.

எனது குறிக்கோள்கள்‌ யாவுமே அந்த மாமனிதனின்‌ லட்சியங்களுக்கு பல்வேறு கூறுகளில்‌ ஒத்ததாக அமைந்து உள்ளது எனக்‌ கண்டேன்‌.

இன்று மட்டும்‌ விவேகானந்தர்‌ உயிரோடிருந்திருந்தால்‌, ஆன்மிகம்‌ இழைந்த தேசிய விழிப்புக்கு நாங்களிருவரும்‌ கைகோர்த்துப் பாடுபட்டிருப்போம்‌.

எனினும்‌ அன்னாரது தெய்வீகம்‌ நம்மிடையே நிலவி வருகிறது. அவரது எழுச்சிமிகு பேச்சுகள்‌ நம்‌ அனைவருக்கும்‌ உந்துதல்‌ அளித்து வருகிறது‌”.

உண்மையில்‌ இன்றைய இந்தியா விவேகானந்தரால்‌ உருவாக்கப்பட்டது என நேதாஜி அவர்களும்‌, என்னுடைய கருத்தின்படி இந்திய விடுதலைப்‌ போராட்டத்தை துவக்கிய மாமனிதர்களில்‌ விவேகானந்தரும்‌ ஒருவர்‌ என நமது தேசத்தின்‌ முதல்‌ பிரதமர்‌ ஐவஹர்லால்‌ நேரு அவர்களும்‌ விவேகானந்தருக்கு புகழாரம்‌ சூட்டினார். ‌

நமது தேசத்து இளைஞர்களின்‌ எழுச்சிக்கு வித்திட்டவர்‌ விவேகானந்தர்‌. அதனால்‌தான்‌ அவரது பிறந்த நாள்‌, தேசிய இளைஞர்‌ தினமாகக்‌
கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில்‌, இந்திய தேசத்து இளைஞர்‌ ஒவ்வொருவரும்‌, விவேகானந்தர்‌ காட்டிய வழியில்‌, அவர்‌ விரும்பியது போல, தன்னம்பிக்கையுடனும்‌ தைரியத்துடனும்‌ தனித்தன்மையுடனும்‌ நமது தேசத்தின்‌ வளர்ச்சிக்கும்‌ முன்னேற்றத்திற்கும்‌ அயராது உழைக்க உறுதி மேற்கொள்ள வேண்டும்‌.

இது தான்‌ நமது வீரத் துறவி விவேகானந்தருக்கு நாம்‌ செலுத்தும்‌ உண்மையான மரியாதை.

– நா.பெருமாள்‌ – மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ (பணி நிறைவு)

  • நன்றி: இந்து தமிழ் திசை
Comments (0)
Add Comment