அரிமா நம்பி-10: எங்கே அந்த விக்ரம் பிரபு?

‘பரபரன்னு தீப்பிடிக்கிற மாதிரியான திரைக்கதையோட ஒரு படம் பார்க்கணும்’ என்று விரும்புபவர்களிடம் எப்போதும் ஒரு பட்டியல் இருக்கும். அதில், தமிழின் மிக முக்கியமான கமர்ஷியல் திரைப்படங்கள் இடம்பெற்றிருக்கும்.

அவையனைத்தும் தியேட்டர்களில் வெளியான காலத்தில் ரசிகர்களுக்கு உற்சாகத்தையும் குதூகலத்தையும் அள்ளித் தந்திருக்கும்.

ஆண்டுகள் பல ஆனாலும், அதைப் பார்த்த ரசிகர்களின் மனதில் அந்த நினைவுகள் நீங்காமலிருக்கும்.

மீண்டும் அந்தப் படைப்பைப் பார்க்கையில், அந்த தருணங்கள் உயிர் பெறும். விக்ரம் பிரபு, பிரியா ஆனந்த் நடிப்பில், ஆனந்த் சங்கர் இயக்கத்தில் வெளியான ‘அரிமா நம்பி’ அப்படியொரு படமே! இன்றோடு அது வெளியாகிப் பத்தாண்டுகள் ஆகின்றன.

ஈர்க்கும் ஆக்‌ஷன் படங்கள்!

‘நச்சுன்னு ஒரு ஆக்‌ஷன் படம்’ என்றால் அதிகளவு சண்டைக்காட்சிகள் இருக்க வேண்டும் எனும் எண்ணம் பரவலாக உண்டு. ‘படத்துல எத்தனை சண்டை’ என்பதே தூர்தர்ஷனில் படம் பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்த வேளைகளில் நான் எதிர்கொண்ட கேள்வியாக இருந்திருக்கிறது.

காலப்போக்கில் ஆக்‌ஷன் படத்திற்கான அளவுகோல் அது இல்லை என்பது மெல்லப் புரிந்தது. இந்த வகையறா படங்களில் ஹாலிவுட்டை காப்பியடித்து சண்டைக் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

ஓடும் பைக்கில் நின்றவாறே நாயகன் வருவது போன்ற காட்சியை விஎஃப்எக்ஸ் உதவியில்லாமல் ‘உல்டா’ பண்ண முயற்சித்ததும் இங்கு நிகழ்ந்திருக்கிறது.

அதெல்லாம் பழைய கதை. ஆனால், அப்படிப்பட்ட படங்கள் குறித்த நினைவுகள் எப்போதும் நம் நினைவில் பசுமையாக இருக்கும்.

ஷங்கரின் ‘இந்தியன்’ படத்தில் ‘ஜெண்டில்மேன்’ அளவுக்குச் சண்டைக்காட்சிகள் கிடையாது. ஆனால், அந்த படத்தின் திரைக்கதை சரவெடியாக நீளும். ‘கேப்டன் பிரபாகரன்’, ‘புலன் விசாரணை’ உட்பட விஜயகாந்த் நடித்த பல படங்கள் முழுநீள ஆக்‌ஷன் படங்கள் தாம்.

அந்தக் காலத்தில், அவருக்கிருந்த அதிகப்படியான இளம் ரசிகர்களின் எண்ணிக்கைக்கு அதுவுமொரு காரணம். அவ்வாறு நோக்கினால், தொண்ணூறுகளில் இருந்த பல நாயகர்கள் நல்லதொரு ஆக்‌ஷன் படத்தில் நடிக்க வேண்டுமென்றே விரும்பினார்கள்.

சரத்குமாரும் ஆனந்த்ராஜும் நாயகர்களானபோது, அது போன்ற இடங்களைப் பெற முனைந்தார்கள். அதுவே சட்டென்று இளைய தலைமுறையை ஈர்க்குமென்றும், எதிர்காலத்தில் அவர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடிக்க வழி வகுக்கும் என்றும் நம்பினார்கள்.

ஜோஷியின் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் தொண்ணூறுகளில் வெளியான ‘ஏர்போர்ட்’, அந்தக் காலத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான ஆக்‌ஷன் படம். 2000களில் அப்படிப்பட்ட ஆக்‌ஷன் படங்களின் வரவு வெகுவாகக் குறைந்துவிட்டது.

முன்பே சொன்னது போல, சண்டைக்காட்சிகளின் எண்ணிக்கையை வைத்து மட்டும் அதனை முடிவு செய்துவிட முடியாது.

அந்த வகையில், 2014இல் வெளியான ‘அரிமா நம்பி’ ஒரு அற்புதமான அனுபவத்தை ரசிகர்களுக்குத் தந்த ஆக்‌ஷன் படம்.

அதற்கு முன்பாக ஏ.ஆர்.முருகதாஸின் ‘துப்பாக்கி’ படத்தில் பணியாற்றிய அனுபவமே இயக்குனர் ஆனந்த் சங்கருக்கு அந்த வாய்ப்பைத் தந்திருந்தது.

விக்ரம் பிரபுவின் முத்திரை!

‘கும்கி’ படத்தில் அறிமுகமாகி ‘இவன் வேற மாதிரி’ படத்திலேயே ஆக்‌ஷன் ஹீரோ அந்தஸ்தை பெற்றுவிட்டார் விக்ரம் பிரபு. முதல் படத்தில் கிராமப்புறத்தானாகத் தெரிந்தவர், அடுத்த படத்தில் அதற்கு நேரெதிராக மெட்ரோ நகர இளைஞனாக உருமாறியிருந்தார்.

‘அரிமா நம்பி’யில் அவர் ஏற்ற அர்ஜுன் கிருஷ்ணா பாத்திரமும், பிரியா ஆனந்தின் அனாமிகா பாத்திரமும் ரொம்பவே ‘க்ளிஷே’வாக தெரிபவை. ஆனாலும், இருவருக்குமான காட்சிகள் ரொம்பவே புத்துணர்ச்சியைத் தந்தன.

அவர்களது காதலை விட, அவர்களைத் துரத்தும் பிரச்சனையே இருவருக்கும் இடையிலான நெருக்கத்தை அதிகப்படுத்துவது போன்று காட்சிகளை அமைத்திருந்தார் ஆனந்த் சங்கர்.

அதனால், விறுவிறுவென்று நகரும் திரைக்கதையோடு இளமையின் உத்வேகமும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டது.

நடிகர் பிரபுவின் தோற்றம் எந்தளவுக்கு சாந்தம், குறும்பு, வெகுளித்தனத்தை வெளிப்படுத்துமோ, அதற்கு நேரெதிராக முரட்டுத்தனம், அலட்சியம் என்று ‘டோண்ட் கேர்’ மனோபாவத்தை விதைத்தது அவரது மகன் விக்ரம்பிரபுவின் தோற்றம்.

2கே கிட்ஸ்களுக்கு அது பிடித்துப்போனது. அவர் தேர்ந்தெடுத்த திரைக்கதைகள், ஆக்‌ஷன் ஹீரோ என்ற முத்திரையைக் குத்தும் அளவுக்கான நிலையை உருவாக்கின.

ஆனால், ‘சிகரம் தொடு’, ‘துப்பாக்கி முனை’, ‘டாணாக்காரன்’ போன்ற வெகுசில படங்களே அந்த ‘ஆக்‌ஷன் ஹீரோ’ இமேஜுக்கு தீனி போட்டன.

அந்த வகையில், ‘அரிமா நம்பி’யில் கிடைத்த புகழை விக்ரம் பிரபு தக்கவைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.

‘அரிமா நம்பி’யின் முக்கியச் சிறப்புகளில் ஒன்று, அதில் நிறைந்திருந்த இசை. ‘யாரோ யார் அவள்’ உள்ளிட்ட நான்கு பாடல்கள் அப்போது பெற்ற வெற்றி அதற்கான உதாரணம்.

அது மட்டுமல்லாமல், பின்னணி இசையிலும் வேகம் கூட்டி புத்துணர்ச்சி ஊட்டியிருந்தார் இசையமைப்பாளர் ட்ரம்ஸ் சிவமணி. முதன்முறையாக அவர் இசையமைத்த படம் இது.

ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகரைக் கொண்டாட வைத்த படங்களில் இதுவும் ஒன்று. அவர் எத்தனையோ இயக்குனர்களோடு ஒன்றிணைந்தாலும், ஆக்‌ஷன் படங்களில் மட்டுமே அவரது பணி அமர்க்களப்படும். இதிலும் அப்படியே!

வெகு கூர்மையாகக் காட்சிகளை வெட்டி, எவ்விதக் குழப்பமும் இன்றி மிகச்சீராகத் திரையில் கதை சொல்ல உதவியது புவன் ஸ்ரீனிவாசனின் படத்தொகுப்பு.

இதுவே தமிழில் அவர் பணியாற்றிய முதல் படம். இவர்களைப் போன்று அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் காட்டிய ஈடுபாடே இப்படம் மக்களின் கவனத்தைக் கவரக் காரணம்.

இயக்குனர் ஆனந்த் சங்கர் வெளிநாடுகளில் கல்வி பயின்ற அனுபவம் கொண்டவர். முருகதாஸிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். அதுவே, ‘பான் இந்தியா’ முத்திரையுடன் கூடிய படங்களையே அவர் தருவார் என்ற எதிர்பார்ப்பை உண்டுபண்ணியது.

‘அரிமா நம்பி’ வெளியானபோது, அக்கருத்து உண்மையானது.

ஹாலிவுட் படங்களின் தாக்கம் அந்தப் படத்தில் ரொம்பவே அதிகமாக இருந்தது.

ஆனால், அது எந்த வகையிலும் அபத்தமாகத் தென்படவில்லை என்பதுதான் ஆனந்த் சங்கரின் புத்திசாலித்தனம். அவர் இயக்கிய ‘எனிமி’ கூட அப்படிப்பட்ட ஒரு படைப்புதான்.

சிகரம் தொடு!

‘அரிமா நம்பி’க்குப் பிறகு விக்ரம் பிரபுவின் நடிப்பில் ‘சிகரம் தொடு’ வெளியானது. அது வெகு எளிமையான ஒரு ஆக்‌ஷன் கதை. ஆனால், ‘அரிமா நம்பி’யின் பிரமாண்டம் அதனைச் சிறிய படமாக நினைக்க வைத்தது.

அரிமா நம்பி ரசிகர்களிடம் ஏற்படுத்திய தாக்கம் என்னவென்பதை அப்போது நன்கு உணர முடிந்தது.

ஆனந்த் சங்கர்

இன்றும் தொலைக்காட்சியில் ‘அரிமா நம்பி’ ஒளிபரப்பாகும்போது, அதனைக் காண கணிசமான பார்வையாளர்கள் தயாராக இருக்கின்றனர். பாடல்கள், காட்சிகள் என்று அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பார்த்துவிடுபவர்களும் உண்டு.

அதற்குக் காரணம் அதில் இடம்பெற்ற நடிப்புக்கலைஞர்கள். வில்லனாக வரும் ஜே.டி.சக்ரவர்த்தி முதல் யோக் ஜேப்பி, அருள்தாஸ் என்று பலரும் ஒன்றாக வருவது திரையில் புதிதாகத் தெரிந்தது. லேகா வாஷிங்டன் ஏற்ற பாத்திரமும் அதிலொன்று.

வழக்கமாக நகைச்சுவை, குணசித்திர வேடங்களில் வரும் எம்.எஸ்.பாஸ்கர் கூட இதில் சீரியசாக தோன்றி நம்மை ஆச்சர்யப்படுத்தியிருந்தார்.

‘எங்கே அந்த விக்ரம் பிரபு’ என்று கேட்க வைத்திருந்தார். இது போன்றதொரு காட்சியனுபவம் விக்ரம்பிரபுவின் பின்னாளைய படங்களில் கிடைக்கவில்லை. அவர் சமீபத்தில் நடித்த ’பாயும் ஒளி நீ எனக்கு’ படமும் இவ்வரிசையில் சேரும்.

திரையில் வெகு இயல்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் தோன்றும் திறன் விக்ரம் பிரபுவிடம் நிறையவே உண்டு. வெறுமனே தோற்றம் மட்டுமே அதற்குக் காரணம் கிடையாது.

பொருத்தமான பாத்திரங்கள், கதைக்களங்கள், காட்சிகள், நேர்த்தியான காட்சியாக்கம் அனைத்தும் ஒன்று சேர்ந்து அந்த மாயாஜாலத்தை நிகழ்த்தும்.

எங்கு, எப்போது, எதனால் அதனை விக்ரம் பிரபு தவறவிட்டார் என்று தெரியவில்லை அல்லது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்வதுதான் நல்லது என்ற முடிவில் தவறான கதைகளைத் தேடிச் சென்றாரா என்றும் தெரியவில்லை.

‘அரிமா நம்பி’யை மீண்டும் ஒருமுறை பார்த்தாலே, தன் பழைய பாதைக்கு அவரால் திரும்பிவிட முடியும்.

முழுக்க ஒரு மெட்ரோ நகரத்தில் நடக்கும் கதையாக இருந்தாலும், கிராமங்களில் உள்ளவர்களுக்கும் ‘அரிமா நம்பி’ நிச்சயம் பிடிக்கும்.

பிரமாண்ட படத்தில் இடம்பெற்ற புகழைக் கொட்டும். பட்ஜெட் தாண்டி மிகச்சிறப்பான திரைக்கதையும் சாதாரண மனிதர்களை ஈர்க்கும் இயல்புத் தன்மையும் நிறைந்த திரைக்கதைகளே அதற்குப் போதும்.

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment