கோடிகளைக் கொட்டி அதிமுகவுக்கு விளம்பரம் செய்த திமுக!

அ.தி.மு.க. தலைவரை கதாநாயகனாக சித்தரித்து, தமிழக மக்கள் மனதில் அவரை அரியணை ஏற்றி வைக்க, கோடிகளைக் கொட்டி தி.மு.க. சினிமாப்படம் எடுக்கும் என்பதை கற்பனையிலும் நினைத்து பார்க்க முடியுமா?

ஆனால் அந்த அதிசயம் நிகழ்ந்தேறியுள்ளது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதியே அந்த படத்தை தயாரித்திருப்பதுதான் ஹைலைட்.

உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் தயாரித்து அவர் நடித்துள்ள படம் மாமன்னன்.

ஆனால் கதையின் நாயகன் மாமன்னனாக நடித்திருப்பவர் வைகைபுயல் வடிவேலு.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை தெய்வமாக பூஜிக்கும் முன்னாள் சபாநாயகர் தனபாலின் வாழ்க்கை சரிதத்தில் இருந்து உருவப்பட்ட சில சம்வங்கள்தான் மாமன்னன் படத்தின் கதை என பகிரப்பட்ட கருத்துக்கள் கிட்டத்தட்ட உண்மை என்றாகி விட்டது.

தனபாலே அதனை ஒப்புக் கொண்டுவிட்டார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவித்த கொடுமைகளை தனது படங்களில் பதிவு செய்து வருபவர் மாரி செல்வராஜ்.

நெல்லை மாவட்டத்தில் காலம்காலமாக நிகழும் ஜாதி வன்மத்தை பரியேறும் பெருமாளில் சொன்ன மாரி செல்வராஜ், கொங்கு மண்டலத்தில் நடந்த அவலத்தை மாமன்னன் படத்தில் தோலுரித்துள்ளார்.

இதுதான் படத்தின் கதை

சேலம் மாவட்டம் காசிபுரம் தனித்தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் மாமன்னன் (வடிவேலு). அவர் சமத்துவ சமூக நீதி மக்கள் கழகத்தை சேர்ந்தவர். அவரது கட்சியின் மாவட்டச் செயலாளர் ரத்னவேலு (பகத் ஃபாசில்).

ஜாதி கண்ணோட்டத்துடன் செயல்படும் ரத்னவேலு, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தனது முன்னால் அமர்ந்து பேச அனுமதிப்பதில்லை. எம்.எல்.ஏ. மாமன்னன் கூட அதற்கு விதி விலக்கு அல்ல.

ஊருக்கு மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும், ரத்னவேலுவின் முன் மாமன்னன், ஒரு கைப்பாவை.

மாவட்டச் செயலாளர் ரத்னவேலு வீட்டில் பஞ்சாயத்துக் கூட்டம் நடக்கும் போது, அவர் முன்னால் மாமன்னன் உட்கார்ந்து விடுகிறார். கோபம் கொள்ளும் ரத்னவேலு, மாமன்னனைத் தாக்குகிறார்.

அப்போது மாமன்னன் மகன் அதிவீரனுக்கும், ரத்னவேலுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பகையாகிறது.

அதன்பின் கட்சிக்குள் நேரிடும் பிரச்சினையால், ஆளும்கட்சியில் இருந்து விலகி எதிர்க்கட்சியில் சேர்ந்து விடுகிறார் ரத்னவேலு.

மாமன்னனை ஒழித்துக்கட்ட நினைக்கிறார். முடியவில்லை.
அது மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாமன்னன், தமிழக சபாநாயகராக, கட்சித் தலைமையால் உயர்ந்த இடத்தில் அமர்த்தப்படுகிறார்.
இது, தனபாலின் கதை.

முன்னாள் சபாநாயகர் தனபால் தாழ்த்தப்பட்ட பிரிவான அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர். 1980-களில் சேலம் மாவட்டம் சங்ககிரி தனித் தொகுதியில் இருந்து பலமுறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

அந்த சமயத்தில் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தார். ராசிபுரம் அப்போது பொதுத் தொகுதியாக இருந்தது. 

ராசிபுரம் தனித்தொகுதியாக மாறியதும் அவரை அந்தத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக நிறுத்தினார் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா. அமோக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தார் தனபால்.

அவரது வளர்ச்சி சிலரது கண்களை உறுத்தியது. ’தனபால் கட்சிக்காரர்களை மதிப்பதில்லை.. வீட்டுக்குப்போனால் சாப்பாடு தரமட்டார். காபியும் கொடுக்க மாட்டார்’ என அப்போது ஜெயலலிதாவுக்கு ஏராளமான புகார் கடிதங்கள் சென்றன.

அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, தனபாலை தனது போயஸ் தோட்டத்து வீட்டுக்கு நேரில் அழைத்து, இது குறித்து விசாரித்தார்.
அவர் அளித்த தன்னிலை விளக்கம் ஜெயலலிதாவை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

என்ன சொன்னார் தனபால்?

’அம்மா.. உங்களுக்கு வந்த புகார்களில் எள்ளளவும் உண்மை கிடையாது. நான் அருந்ததியர் ஜாதியைச் சேர்ந்தவன் என்பதால் என் வீட்டில் யாரும் கை நனைப்பதில்லை’’ என சொல்லி விட்டார்.

தனபாலை உடனடியாக உணவு அமைச்சர் ஆக்கினார் ஜெயலலிதா.

முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சட்டசபைக்குள் நுழைந்ததும் சபாநாயகருக்கு வணக்கம் சொல்வது மரபு.

அவ்வாறு முதல் மரியாதை செய்யும் வகையில் பின்னாட்களில், தனபாலை சபாநாயகர் ஆக்கி பெருமைப்படுத்தினார் ஜெயலலிதா.

என்ன சொல்கிறார் தனபால்?

ஆக, தனபாலில் வாழ்க்கையை சினிமாவாக எடுத்து, அவரை அ.தி.மு.க பெருமை படுத்தியதை உலகுக்கு காட்டியுள்ளார் உதயநிதி.

’மாமன்னன் கதை உங்கள் சொந்தக் கதை என தமிழ்நாடு முழுவதும் பேசப்படுகிறதே? என தனபாலிடம் கேட்டபோது அவர் மறுக்கவில்லை.

“மாமன்னன் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. அம்மா ஜெயலிலதாவின் விசுவாசி நான். அ.தி.மு.க. அமைப்பு செயலாளர், அமைச்சர், சபாநாயகர் என பல உயரங்களுக்கு என்னை கொண்டு சென்றவர் அம்மா.

எனது சாயலில் மாமன்னன் இருப்பதாக சொன்னார்கள். அப்படி என்றால், இது அம்மாவுக்கு கிடைத்த வெற்றி என்றுதான் சொல்வேன்’ என்பது தனபால் பதிலாக உள்ளது.

குவியும் பாராட்டு

மாமன்னன் திரைப்படம் தமிழக அரசியலிலும் பேசுபொருள் ஆகி விட்டதால் பல தலைவர்கள் அந்த படத்தை சிலாகித்த வண்ணம் உள்ளனர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டபோது,

“அந்த படத்தை நான் பார்க்கவில்லை. பார்க்கும் ஆவலும் இல்லை.

எங்கள் கட்சிக்காரர் எடுத்திருந்தால் அதை பார்த்து கருத்து சொல்லி இருப்பேன்” என்றார்.

700 தியேட்டர்களில் மாமன்னன் ரிலீஸ் ஆகி உள்ளது. நல்ல வசூல் பார்த்து வருகிறது.

விமர்சனங்களும் தயாரிப்பாளர் உதயநிதியை சந்தோஷம் கொள்ளச் செய்துள்ளது.

இதனால் மாரி செல்வராஜுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மினி கூப்பர் காரை பரிசாக வழங்கியுள்ளார், உதயநிதி.

– பி.எம்.எம்.

Comments (0)
Add Comment