ஆந்திர மாநிலத்தில் பிறந்த தென்னிந்தியத் திரைப்பட குணச்சித்திர நடிகராவார். நடிகராக மட்டுமல்லாது திரைப்படவுலகில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பங்காற்றியவர்.
இவர் ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள, நுஸ்வித் நகரில் 1918 ஜூலை 3-ம் நாள் பிறந்தார். சென்னை இந்துக் கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார்.
இவர் 1949-ம் ஆண்டு மன தேசம் என்ற தெலுங்கு படத்தில் சிறுவேடத்தில் அறிமுகமானார். 1951 இல் இவர் மந்திரவாதியாக பாதாள பைரவி படத்தில் நடித்தபிறகு புகழ்பெற்ற நடிகராக ஆனார்.
இந்திய அரசு எஸ்.வி. ரங்காராவை கௌரவப்படுத்தும் விதத்தில் அவரது அஞ்சல் தலையை 2013-ல் வெளியிட்டது.
நடிப்பு என்பதே மிகைசார்ந்த விஷயம் என்றிருந்த ஒரு காலத்தில், ‘மிக இயல்பாக நடிக்க இவரை எப்படி அனுமதித்திருப்பார்கள்?’ என்ற கேள்வி எழுகிறது.
’சீர் மிக வாழ்வது’ என்பதுபோல, ’சீர் மிக நடிப்பை’ நிகழ்த்திக் காட்டியவர். கமல் ஹாசன் சொன்னார்… “நான் சந்திக்க விரும்பும் நபர்களில் காந்தி, பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் எஸ்.வி.ரங்காராவும் அடக்கம்.”
தன் வாழ்நாளில் முதுமையைப் பார்த்தறியாத ஒருவர் திரைப் படங்களில் இருபத்தைந்து வருடங்கள். 1950களில், 1960களில், 1970களின் முன்பகுதியில்) நிறைய வயதான, முதிய கதாப் பாத்திரங்கள் செய்திருக்கிறார் என்பது விந்தை.
எழுபது வயது மனிதராக சினிமா காட்டிய எஸ்.வி.ரங்காராவ் அறுபது வயதை தன் வாழ்நாளில் கண்டதில்லை. அவர் பிறந்த வருடம் 1919 என்று எடுத்துக்கொண்டால் 55 வயது. 1974-ம் வருடம், ஜூலை 18-ம் தேதி ரங்காராவ் மறைந்தார்.
தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்தவர். தெலுங்கு மக்கள் இவருக்கு ‘விஸ்வநாத சக்ரவர்த்தி’ என பட்டம் அளித்தார்கள். அந்தப் பட்டம் தமிழ் பட டைட்டிலில் யாரும் பார்த்திருக்க முடியாது. அந்தக்காலத்தில் பட்டதாரி நடிகர் எஸ்.வி.ரங்காராவ் பி.எஸ்.ஸி படித்துள்ளார்.
நாடகமேடையில் ஆங்கில நாடகங்களில் நடித்த சேக்ஸ்பியர். நாடகங்களில் நடித்திருந்தாலும், திரைப்படங்களில் புராண கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட நாடக செயற்கைத்தனம் இல்லாமல் ரொம்ப இயல்பாக நடித்து அளப்பரிய சாதனை செய்தார். ஒரு தெலுங்கு நடிகர் தமிழ் படங்களில் செய்த சாதனை அசாதாரணமானது.
ஆஜானுபாகுவான ரங்காராவ் ஒரு காட்சியில் இருந்தால் எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு விடுவார்.
அந்தக்கால குணச்சித்திர நடிகர்கள் எஸ்.வி.ரங்காராவ், டி.எஸ்.பாலையா, எஸ்.வி.சுப்பையா மூவருமே முதுமையைக் காணாமலேயே மறைந்தார்கள்.
இவர்களுக்கெல்லாம் சீனியரான எம்.ஆர்.ராதா மட்டும் முதுமையை எதிர்கொண்டு விட்டு, 72 வயதில் மறைந்தார்.
பாலையாவுக்கு 58 வயது. சுப்பையாவுக்கு 57 வயது. விநோதம் என்னவென்றால், படங்களில் ‘பெருசு’களாக இவர்கள் நடித்த காலத்தில், இளம் வாலிபர்களாக நடித்த கதாநாயகர்கள் எல்லோரும் முதுமையைப் பார்த்துவிட்டுத்தான் இறந்தார்கள், 52 வயதில் இறந்த முத்துராமன் தவிர.
டி.வி சேனல்களில் எவ்வளவோ நடிகர்களை பலரும் மிமிக்ரி செய்வதைப் பார்க்க முடியும்.
மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஒருவர்கூட இதுவரை நடிகர் ரங்காராவை இமிடேட் செய்ததே கிடையாது. ரங்காராவின் தனித்துவத்துக்கு இதுகூட உதாரணம்.
தெலுங்கில் இவர் இயக்கிய இரண்டு படங்கள், ‘நந்தி விருது’ பெற்றிருக்கின்றன. மேலும் சில தெலுங்குப்படங்களையும் இயக்கியிருக்கிறார்.
‘நர்த்தன சாலா’ என்ற படத்தில் கீசகனாக நடித்ததற்காக, இந்தோனேஷிய திரைப்பட விழாவில் விருது வாங்கியிருக்கிறார்.
மற்றபடி இந்திய அரசாங்க கெளரவம் எதுவும் ரங்காராவுக்குக் கிடைத்ததில்லை. உலகின் மிகச்சிறந்த, அபூர்வ நடிகர்களில் ஒருவர், எஸ்.வி.ரங்காராவ்.
– நன்றி: முகநூல் பதிவு