போர் தொழில் படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பு
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் நடிப்பில் வெளியான பரபரப்பான சைக்கோ திரில்லர் படம் ‘போர் தொழில்’.
ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் திரையரங்குகளை திருவிழாக்கோலமாக மாற்றியிருக்கிறது.
இன்று வரையிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகத் திரையரங்குகளை ஆக்கிரமித்திருக்கும் இப்படத்தின் வெற்றி விழா, சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
திங்க் மியூசிக் சந்தோஷ் பேசுகையில், “ஒரு நாள் மிட் நைட் அசோக் செல்வன் போன் செய்தார். ‘பிரதர் நான் போர் தொழில் என்று ஒரு படம் செய்கிறேன்.
படத்தில் ஒரே ஒரு பாடல் தான். ஆனால் நீங்கள் இந்தப் படத்துடன் இணைய வேண்டும்’ என்றார். டிரெய்லர் பார்த்தவுடனே இந்தப்படம் நல்ல படமாக இருக்குமெனத் தோன்றியது.
பொதுவாக அறிமுக இயக்குநர் படங்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறோம்.
இந்த வருடம் ‘டாடா’, ‘குட் நைட்’ படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் இணைந்தது மகிழ்ச்சி. அசோக் செல்வனுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி” என்றார்.
நடிகர் ஹரீஷ் பேசுகையில், “படம் ரிலீஸுக்கு அப்புறம் என்னோட ஃப்ரண்ட்ஸ் என்னைப் பார்த்துப் பயப்பட ஆரம்பித்து விட்டார்கள்.
நான் நடித்ததில் மிக வித்தியாசமான கேரக்டர் இது தான். என் பெற்றோருக்குப் பிடித்த படம் இது தான்.
என்னைப் போன்ற புதுமுகத்துக்கு திறமையை மதித்து இம்மாதிரி கேரக்டர் தந்ததற்கு நன்றி. இந்தப்படத்தில் நான் நிறையக் கற்றுக்கொண்டேன்” என்றார்.
நடிகர் அசோக் செல்வன் பேசுகையில், “இது சக்ஸஸ் மீட் என்பதை விட தேங்ஸ் மீட் என்று தான் சொல்ல வேண்டும். மக்கள் இப்படத்தை தங்கள் படமாகக் கொண்டாடினார்கள்.
ஊடகங்களுக்கு ரெண்டு நாள் முன்னரே படத்தைப் போட்டுக்காட்டினோம்.
யாராவது டிவிஸ்ட்டை உடைத்து விடுவார்களோ..! என்ற பயம் இருந்தது. ஆனால் ஒருவர் கூட டிவிஸ்ட்டை உடைக்காமல், பாஸிட்டிவான விமர்சனம் தந்தார்கள்” என்றார்.
நடிகர் சரத்குமார் பேசுகையில், “விக்னேஷ் ஒரு நல்ல இயக்குநராக வருவார் என்று முன்பே சொல்லியிருந்தேன். அதை விடப்பெரிய இயக்குநராக வந்து விட்டார்.
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குநர் அனைவரையும் செதுக்கி இருந்தார். தனக்குத் தேவையான கதாபாத்திரத்தை அப்படியே கொண்டு வந்துள்ளார்.
கண்டிப்பாக இது ஒரு புதிய சாதனை படைக்கும். விக்னேஷ் நமக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம். அசோக் ஒரு நல்ல நடிகர் மற்றும் நடிகை நிகிலா அருமையாகத் தனது கதாபாத்திரத்தை நடித்துள்ளார்.
இயக்குநர் விக்னேஷ் ராஜா பேசுகையில், “என்னோட முதல் நன்றி தயாரிப்பாளர்களுக்கு தான். இந்தகதையை கேட்டு இப்படத்தை தயாரித்ததற்கு நன்றி.
அப்ளாஸ் படம் ஒப்பந்தமானவுடன் படத்தை கமர்ஷியல் ஆக்குகிறோம் என கெடுக்காமல், நீங்கள் நினைத்ததை.. எழுதியதை… எடுங்கள் என்றார்கள். அறிமுக இயக்குநருக்கு இது எவ்வளவு பெரிய வரமென்பது உங்களுக்கு புரியும். யுவராஜ் பம்பரமாக சுழன்று வேலை செய்தார்.
இந்தப் படத்தில் உழைத்த அத்தனை பேரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். படத்தை 2010 ல் நடப்பதாக எடுத்தோம். அதற்கான சிஜி படம் முழுக்க இருக்கிறது. உதவி இயக்குநர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள் எல்லோருக்கும் நன்றி.
அசோக் செல்வன் காலேஜ் படிக்கும் போதிருந்து தெரியும், அப்போதே யாராவது குறும்படம் எடுத்தால் ஓடிப்போய் நடிப்பான். அப்போது அவன் ஏற்படுத்திய நெட்வொர்க் இப்போது எல்லோரும் இயக்குநர்களாக இருக்கிறார்கள்.
இன்னும் பல இயக்குநர்களை அறிமுகப்படுத்துவான். சரத்குமார் சாரை நன்றாக நடிக்க வைத்துள்ளேன் என்கிறார்கள்.
ஆனால் 150 படத்தில் நடித்தவருக்கு என்ன சொல்ல முடியும்… இந்தப் படத்தில் செய்தது எல்லாமே அவரே செயத்தது தான். என்னை விட அவருக்கு தான் படத்தின் மீது நம்பிக்கை இருந்தது.
சரத்பாபு சார் முதலில் நடிப்பாரா ? அவருக்கு புரியுமா? என்று பயமாக இருந்தது. ஆனால் அவர் மிக அப்டேட்டாக இருந்தார்.
அவர் கேட்ட கேள்வியால் படத்தில் சில பகுதிகளை மாற்றி எழுதினோம். அவர் படம் பார்க்க முடியாதது வருத்தம்.
இறுதியாக ஊடகங்களுக்கு ரெண்டு நாள் முன்னரே படத்தை போட்டுக்காட்டலாம் என்ற போது… யாராவது டிவிஸ்ட்டை உடைத்து விட்டால்..! என்ற பயம் வந்தது.
சக்தி சார் அப்படி செய்ய மாட்டார்கள் என்றார். அதேபோல் ஒருவர் கூட டிவிஸ்ட்டை உடைக்காமல், படம் பிரீமியர் ஆனவுடனே இணையத்தில் படத்தை பற்றி புகழ்ந்து எழுத ஆரம்பித்து விட்டார்கள்.
விளம்பரம் செய்யாத ஒரு படம், பத்திரிகை விமர்சனங்களால்.. ரசிகர்களால் ஓடும் என்பதற்கு இந்தப்படம் உதாரணம்”.