வழக்கில் சிக்கிய நிலையில் சிசிச்சையில் இருக்கும் இலாகா இல்லாமல் தமிழ்நாடு அமைச்சரவையில் நீடிக்கும் செந்தில் பாலாஜி விஷயத்தில் சட்டென்று தலையிட்டு அதிரடி முடிவு எடுத்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
மாலை நேரத்தில் பதவி நீக்கம் குறித்த ஆளுநரின் அறிவிப்பு உடனடியாகப் பலதரப்பட்ட எதிர்வினைகளைச் சந்தித்தது.
தமிழ்நாடு முதல்வர் “ஆளுநரின் அறிவிப்பு சட்டத்திற்குப் புறம்பானது. சட்டப்படி இதை எதிர்கொள்வோம்’’ என்று சொல்ல, எதிர்க்கட்சிகள் கடுமையாக ஆளுநரைக் கண்டித்தன.
ஊடகங்கள் பரபரப்பாக இது குறித்து விவாதித்தன.
ஆனால் இதெல்லாம் நடந்து ஐந்து மணி நேரத்திற்குள் மனது அறிவிப்பை நிறுத்தி வைத்திருக்கிறார் ஆளுநர் ரவி.
உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
முதலில் ஏன் அறிவித்தார் ஆளுநர்? பிறகு ஏன் அவரே மாற்றினார்?
அப்படி என்றால் உள்துறை அமைச்சகத்திடம் முறையான அனுமதியைப் பெறாமல் இந்த அறிவிப்பை வெளியிட்டு விட்டாரா ஆளுநர் ரவி? அதனால் தானே மீண்டும் அவரை அறிவிப்பிலிருந்து பின்வாங்க வைத்திருக்கிறது?
இதையடுத்து தமிழ்நாடு முதல்வர் தலைமையில் இது குறித்த ஆலோசனை நடந்திருக்கிறது. அதையடுத்து ஆளுநரின் இரண்டு அறிவிப்புக் கடிதங்களுக்கும் மறுக்கிற விதமாக ஆளுநருக்குப் பதில் அளித்திருக்கிறார் தமிழ்நாடு முதல்வர்.
“ஆளுநர் தவறாக முடிவெடுத்து விட்டார்’’ என்று மூத்த வழக்கறிஞரான விஜயன் போன்றவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
ஆனால் தமிழக பா.ஜ.க தலைவரான அண்ணாமலை “ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, முன்னாள் அமைச்சர்களான விஜயபாஸ்கர், செந்தில் பாலாஜி இருவரையும் அமைச்சரவையிலிருந்து ஆளுநர் தலையிட்டு நீக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருப்பதைத் தனது செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
அப்போது மட்டும் ஆளுநரின் தலையீட்டை அவர் வற்புறுத்தவில்லையா என்றும் கேட்டிருக்கிறார் அண்ணாமலை.
‘’ஆளுநரின் நடவடிக்கைகள் ஏற்புடையது அல்ல. செந்தில் பாலாஜி விஷயத்தில் ‘எடுத்தேன்.. கவிழ்த்தேன்’ என்று முடிவு எடுத்திருக்கிறார் ஆளுநர், குற்றம் சாட்டப்பட்டிருப்பதாலேயே ஒருவர் மீது நடவடிக்கை எடுத்துவிட முடியாது.
இதற்கான உரிய விளக்கத்துடன் ஆளுநருக்கு தமிழ்நாடு முதல்வர் கடிதம் எழுதியிருக்கிறார்’’ என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார் தமிழ்நாடு நிதியமைச்சரான தங்கம் தென்னரசு.
எப்படியோ – அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடந்ததில் துவங்கி, அதிகாரிகள் தாக்கப்பட்டது, கைது செய்யப்பட்டது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது வரை தொடர்ந்து செய்திகளில் அடிப்பட்டுக் கொண்டிருக்கிறார் இலாகா இல்லாத அமைச்சரான செந்தில் பாலாஜி.