யானைகள் பற்றிய ஆச்சரிய தகவல்கள்!

இயற்கையின் தலைசிறந்த படைப்பு யானை என்பார் பிரிட்டிஷ் கவிஞர் ஜான் டோன். ஆம், பார்க்க பார்க்க அலுக்காத ஜீவன் யானை.

யானைகள் பற்றி பேச எழுத எவ்வளவோ உள்ளன. அத்தனையும் சுவாரஸ்யமானவை. அவற்றில் அடிப்படையான கொண்ட சில தகவல்களை  பார்க்கலாம். 

உலகில் பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் யானைகள் இருந்தாலும், அவை அனைத்தும் இரண்டு வகையை சேர்ந்தவை. ஒன்று ஆசிய யானைகள்; மற்றொன்று ஆஃப்ரிக்க யானைகள்.

பெண் ஆசிய யானைகளுக்கு தந்தம் இருக்காது. யானை பிறக்கும் போது சராசரியாக 200 பவுண்டுகள் எடை இருக்கும். இது 30 பிறந்த குழந்தைகளின் எடைக்குச் சமமானது.

யானைகளுக்கு கண் இமைகள் உள்ளன. ஆஃப்ரிக்க யானைகள்தான் நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கு. டைனோசர் எல்லாம் நாம் நினைவில் வேண்டுமானால் வாழலாம். இப்போது நிலத்தில் வாழும் விலங்குகளில் யானைகள்தான் பிரம்மாண்டமானவை.

யானைகளுக்குப் பிடிக்காத ஒரு உயிரினம் ‘தேனீ’. மனிதனின் மொத்த உடலில் உள்ள சதையைவிட யானையின் தும்பிக்கையில் அதிக சதை உள்ளது.

யானையின் தந்தம் ஒரு முறை உடைந்தால் மீண்டும் வளராது. பொதுவாக மனிதர்கள் வலது கை பழக்கம் உடையவர்களாக இருந்தாலும், இடது கை பழக்கம் உடையவர்களும் இருக்கிறார்கள் தானே… அது போல யானைகளையும் நாம் அடையாளப்படுத்தலாம். அதாவது, எந்த பக்க தந்தத்தை அது அதிகம் பயன்படுத்துகிறது என்பதை பொறுத்து அதனை அடையாளப்படுத்த முடியும்.

உலக வனவிலங்கு நிதியத்தின் கணக்குப்படி, உலகில் இப்போது 4,15,000 ஆஃப்ரிக்க யானைகள் உள்ளன. 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. எண்ணிக்கையில் பார்ப்பதற்கு அதிகமாக தெரிந்தாலும், இவை அருகிவரும் விலங்கினமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் வேட்டையாடுதல் தான்.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 12 ம் தேதி யானைகளை பாதுகாக்கும் நோக்கில், உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. பார்க்க பார்க்க வியக்க வைக்கும் பேருயிர் யானைகள் பற்றிய 50 ஆச்சரியமான தகவல்களை பார்க்கலாம்.

மா, கரி, வேழம், அத்தி, அருகு, ஆம்பல், ஆனை, யானை, இபம், இம்மடி என தமிழ் இலக்கியங்களில் 50க்கும் மேற்பட்ட புனைப் பெயர்களால் யானை அழைக்கப்படுகின்றன.

யானை இனம் சுமார் 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மெரிதீரியம் என்ற சிறு பன்றி போன்ற விலங்கிலிருந்து பரிணமித்தது. நம்முடன் வாழும் யானைகள் பரிணமித்து சுமார் 30 இலட்சம் ஆண்டுகல் ஆகியிருக்கலாம் என தொல்லுயிரியலாளர்கள் கருதுகின்றனர்.

காட்டு யானைகள் தமது வாழ்க்கையின் அதிக நேரத்தை உணவு தேடி அலைவதில் செலவிடும். ஒரு நாளில் சுமார் 18 மணி நேரத்தை இதற்காக செலவிடும்.

நாள் ஒன்றுக்கு 100 முதல் 300 கிலோ தாவரங்களை உண்ணும். 100 முதல் 150 லிட்டர் தண்ணீர் யானைக்கு தேவைப்படுகிறது.

தரைவாழ் விலங்குகளில் ஆப்பிரிக்க யானை உருவத்தில் பெரியதாக உள்ளது. முழு வளர்ச்சியடைந்த ஆப்பிரிக்க ஆண் யானை 7 ஆயிரம் கிலோ எடை இருக்கும். அதிகபட்சம் 13 அடி இருக்கும்.

தற்போது யானைக் குடும்பத்தில் ஆசிய யானை, ஆப்பிரிக்க புதர்க் காட்டு யானை, அடர் காட்டு யானை ஆகிய 3 இனங்கள் உள்ளன. ஆசிய யானை இனத்தில் இந்திய யானை, இலங்கை யானை, சுமத்திரா யானை, போர்னியோ யானை ஆகிய 4 சிறப்பினங்கள் உள்ளன.

யானையின் நிறம் கருப்பாக இருப்பதாகத் தெரிந்தாலும், உண்மையில் கருஞ்சாம்பல் நிறமுடையவை. யானையால் ஓடவோ, பாயவோ, குதிக்கவோ இயலாது. வேகமான நடையே அதன் ஓட்டம். அதிகபட்சமாக மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் நடக்க முடியும். சாதாரணமாக மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நடக்கும்.

யானைகளின் தந்தம் என்பது மேல் தாடையின் முன் உள்ள இரு வெட்டுப் பற்களே.
ஆப்பிரிக்க யானைகள் ஆண், பெண் இரண்டுக்கும் தந்தங்கள் நீண்டு வளரும். இந்தியா, சுமத்திரா, போர்னியோ யானைகளில் ஆண் யானைகளுக்கு மட்டும் தந்தம் நீண்டு வளரும். இலங்கையில் இருபால் யானைகளுக்கும் தந்தம் வெளியே நீண்டு வளர்வதில்லை.

தந்தங்கள் கொம்பு என தவறாக கருதப்படுகிறது. எதிரிகளுடனும், மற்ற ஆண் யானைகளுடன் சண்டையிடும் ஒரு ஆயுதமாக தந்தங்கள் உள்ளன. யானையின் தந்தங்களுக்காக அதிகளவில் யானைகள் வேட்டையாடப்படுகின்றன.

யானையின் பெரிய காதுகள் கூர்மையான கேட்புத் திறன் கொண்டவை. பூச்சி, கொசுக்களை விரட்டவும், மென்மையான கழுத்துப் பகுதியை வெப்பம் தாக்கவாறு காத்திடவும் விசிறிக் கொண்டே இருக்கிறது.

யானைகளுக்கு பார்வை சக்தி குறைவே. சுமார் 50 அடிகளுக்கு அப்பால் எதுவும் தெளிவாக தெரியாது. யானையின் மூக்கும் மேல் உதடும் தான் தும்பிக்கை. சுமார் 10 ஆயிரம் தசை வளையங்களால் அமைந்திருக்கும் தும்பிக்கை யானைக்கு கை போன்றது.

இதன் மூலம் சிறு இலைகளை கூட எடுக்க முடியும். வெப்பத்திலிருந்தும், பூச்சிகளிடமிருந்தும் காப்பாற்றிக் கொள்ளும் வகையில் மண்ணில் புரள்கின்றன. சேற்றை வாரிப் பூசிக் கொள்கின்றன. தண்ணீரில் குளிக்கின்றன.

யானை தன் தலையிலே மண்னள்ளிப் போட்டுக் கொள்வது என்பது நாம் நினைப்பது போல இழிவானது அல்ல. வெப்பத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளும் செயல் அது. ஆசிய, ஆப்பிரிக்க யானைகள் இரண்டும் மொத்தம் 26 பற்களை பெற்றுள்ளன. மனிதர்களைப் போல யானைகளுக்கு சுவையுணர்வு இல்லை. மணம், மென்மை, சாறு, அளாவு, பசி என்ற அளவில் உணவுகளை விரும்புகிறது.

கோபத்தில் யானை ஓடும் போது வால் சற்று நிமிர்ந்து கொள்ளும். அதன் மூலம் யானை கோபத்தில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். யானையின் மோப்பத்திறன் மிகக் கூர்மையாக இருப்பதால், காற்றின் திசையிலிருந்து மனிதன், மற்ற விலங்குகள். உணவு, தண்ணீர் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளும்.

யானைகள் பல விதமான ஒலிகளை ஏற்படுத்துகின்றன. பிளிறுதல், கணைத்தல், இறுமுதல், கீச்சிடுதல், உறுமுதல் மற்றும் அகவொலி என சத்தங்களால் பல வித உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.

யானைகள் கூட்டமாக நாடோடிகளாக வாழும் இயல்பு கொண்டது. 15 முதல் 50 வரையிலான யானைகள் கூட்டமாக வாழும் பழக்கம் உள்ளவை. யானைகள் கூட்டத்திற்கு ஒரு முதிர்ந்த பெண் யானை தலைமை தாங்கி வழி நடத்தும்.
ஆண் யானைகள் 15, 16 வயதுக்கு மேல் கூட்டத்தை விட்டு விலகுகின்றன. உள்ளினப் பெருக்கம் ஏற்படாது தடுக்க இந்த நிலைப்பாடு.

பெண் யானை 15 வயதில் இனப்பெருக்கத்திற்கு தகுதி பெறுகிறது. 18 முதல் 22 மாதங்கள் யானையின் சினைக்காலம். அரிதாக இரண்டு குட்டிகள் போடலாம்.

பிறந்த யானைக் குட்டி 90 முதல் 120 கிலோ வரை இருக்கும். பிறந்து 15 நிமிடத்தில் எழுந்து நின்று பால் அருந்தும் திறன் கொண்டது. 4 வருடங்கள் வரை குட்டிகள் தாய்ப்பால் குடித்துக் கொண்டே மாற்ற தீவணங்களையும் எடுத்துக் கொள்ளும்.
யானைகள் நன்றாக நீச்சலடிக்கும் திறமை கொண்டவை. ஆறு, கடல் ஆகியவற்றை கடந்து நீந்திச் செல்ல முடியும். யானைகள் பல வேளைகளில் கீழே படுத்து உறங்கும்.

யானைகளுக்கு மதம் பிடிக்கிறது என்பது தவறான சொல்லாடல். இது உடலியங்கியல் இயல்பான ஒரு கட்டமே.
கன்னத்திற்கு மேலே இருக்கும் சுரப்பியிலிருந்து சுரக்கும் திரவமே மதநீர். இது யானைகளின் இனப்பெருக்க உணர்வுகளை வெளிப்படுத்த உதவுகிறது.

ஒரு யானைக் கூட்டம் நிரந்தரமாக ஒரே இடத்தில் தங்கி வாழும் பண்புடையதல்ல.
யானைகள் தங்களுக்கென ஒரு மேய்ச்சல் பகுதியை தெரிவு செய்து கொண்டு வலசைப் பாதையாக பயன்படுத்தும்.

காடழிப்பு, யானைகளின் வலசைப் பாதைகள் உள்ளிட்ட காரணங்களில் யானைகளுக்கு இடையூறு ஏற்படுகின்றன. அண்மை காலமாக கிராமங்களுக்குள் உணவு, தண்ணீர் தேடி வரும் யானைகளால் பயிர் மற்றும் உயிர் சேதங்கள் அதிகரித்து வருகின்றன.

யானைக்கும் அடி சறுக்கும் என்பது தவறானது. மலைப்பங்கான இடங்களில் இடறாது செல்வதில் யானைக்கு நிகர் யானை தான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்புருந்தே யானைகளை வைத்து மனிதர்கள் வேலை வாங்கியுள்ளனர்.

போர் செய்தல், மரம் தூக்குதல், கோவில் கட்டுமானம், விளை நிலங்களென யானைகளும் மனிதரோடு கடுமையாக உழைத்துள்ளது. காட்டு யானைகளை பிடித்து கும்கி யானைகள் மற்றும் வளர்ப்பு யானைகளாக மாற்றும் பழக்கம் பல ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது.

ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகளை பிடிக்க பழக்கப்படுத்தப்பட்ட கும்கி யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. முதுமலை, ஆனைமலை ஆகிய இடங்களில் வளர்ப்பு யானைகள் முகாம்களில் வனத் துறையினரால் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மின் வேலிகள், இரயில் விபத்துகள் உள்ளிட்டவை யானைகள் உயிர்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்துபவையாக உள்ளன. தமிழ்நாட்டில் கோவை வனக் கோட்டம் அதிக மனித – யானை மோதல் நடைபெறும் பகுதியாக இருந்து வருகிறது. அழிந்து வரும் பேருயிர்களை காப்பது, காடுகளையும், எதிர்கால சந்ததியினரையும் காக்க உதவும்.

Comments (0)
Add Comment