மகளிர் கால்பந்துப் போட்டி: தமிழக அணி சாம்பியன்!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் 27 ஆவது மகளிர் தேசிய கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்று வந்தன. இதில் அரையிறுதி போட்டியின்போது ரயில்வேஸ் அணியை தமிழ்நாடு 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி  பெற்றது.

இன்னொரு அரையிறுதிச் சுற்றில் அரியானா அணி ஒடிசாவை எதிர்கொண்டது. இந்த போட்டி 1-1 என்ற கணக்கில் டையில் முடிந்த நிலையில் பெனால்டி ஷூட்டில் அரியானா அணி 2-0 என்ற கணக்கில் ஒடிசாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில் நேற்று தமிழ்நாடு மற்றும் அரியானா அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டி பரபரப்பாக நடைபெற்றது.

இதில் 2-1 என்ற கோல் கணக்கில் அரியானாவை வீழ்த்தி தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. முன்னதாக 2018-ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போட்டியில் வென்று தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளீட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்த வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது என்றும்,

உங்களின் அர்ப்பணிப்பு, திறமை மற்றும் குழு செயல்பாடு நம்மைப் பெருமைப்படுத்தியுள்ளது என்றும் இதுபோன்று தொடர்ந்து உயர்ந்து நம் மாநிலத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Comments (0)
Add Comment