இந்த நூலும் புழுதியில் எறியப்பட்ட வீணை தான்!

‘காகித மலர்கள்’ சிறுகதைத் தொகுப்பு எழுதிய ஆதவன் ‘புழுதியில் வீணை’ எனும் நூலினை நாடக வடிவில் 1984-ல் எழுதியுள்ளார். அவரின் மறைவுக்குப் பிறகு 1988 ஆம் ஆண்டு இந்நூல் வெளிவந்துள்ளது.

பாரதியின் புதுவை வாழ்வின் இன்னல்களையும், எழுச்சியையும், பாரதி பாடல்களையே, பெரிதும் வசனமாக்கி, அதை நாடக வடிவில்
அமைக்க ஆதவன் எடுத்த முயற்சிகள் அச்சு வடிவில அவரின் வாழ்நாளில் அவர்‌ காணாது போனது வருந்தத்தக்கது.

கோவை தியாகு நூலகம் 2022 ஆம் ஆண்டில் மறுபதிப்பு செய்து வெளியிட்டுள்ளது. அந்நூலகமும் போதிய கவனிப்பாரற்று இம்மாதம் மூடப்பட்டு விட்டது. அங்கு எஞ்சிய நூல்களில் இருந்து எனக்குக் கிடைத்த நன்முத்து இந்நூல்.

இந்நூலுக்கு அவர் முன்னுரையாக எழுதியுள்ள 6 கட்டுரைகள் பாரதி வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றமாக திகழ்கின்றது.

இவ்வளவு ஞானம் வைக்கப் பெற்ற ஆதவன் 45:வயதில் மறைந்தது தமிழின் துரதிர்ஷ்டமே.

ஆழ்ந்திருக்கும் கவி உள்ளம் கண்ட தெளிவு அவர் எழுத்தில் மிளிர்கின்றது. அவர் கதை சொல்லி அல்ல அவர்.. “கருத்து சொல்லி”.

தேசபக்தராக இருந்து வேதாந்தியாகப் பழுத்ததாக பாரதியை வர்ணித்த இராஜாஜிக்கு மறு மொழியாக வ.ரா “பாரதியை வேதாந்த சிமிழில் போட்டு அடைக்க வேண்டாம்” எனக் காரமாக பதிலளித்த செய்திகளை அடித்தளமாக வைத்துக் கொண்டு இந்நாடகத்தையும், அதற்கு முன்னுரையாக 6 கட்டுரைகளையும் எழுதி, பாரதி வாழ்வை மிக ஆழமாக ஆதவன் ஆய்ந்துள்ளார்.

பாரதி எனும் நாணயத்தின் தேசபக்தி, வேதாந்தம் எனும் இரு பக்கங்களையும் அவரின் எழுத்தின் வழியே ஆதவன் நுட்பமாக கவனித்து, சிறப்பாக இந்நூலினை படைத்துள்ளார்.

முதுகலைத் துறைக்கு பாடப்புத்தகமாக வைக்கப்பட வேண்டிய தகுதி இந்நூலுக்கு முழுமையாக உள்ளது.

பல்கலைக் கழகங்கள் கவனிக்குமா? குறைந்தபட்சம் பாரதியார் பல்கலைக் கழகமேனும் இவ்வேண்டுகோளுக்கு செவி சாய்க்குமா? இந்நூலும் புழுதியில் எறியப்பட்ட மற்றொரு வீணை தான்.

-ஆதிரன்

Comments (0)
Add Comment