தி.மு.க. கூட்டணியில் நீடிக்குமா வி.சி.க.?

மராட்டிய மாநிலத்தில் 1970 களில் உருவான ’தலித் பேந்தர்ஸ் ஆஃப் இந்தியா’ எனும் கட்சி தலித் மக்களிடேயே பெரும் செல்வாக்கு பெற்றிருந்தது.

அது போன்றதொரு அமைப்பு மதுரையை களமாகக்கொண்டு மலைச்சாமி என்பவரால் 1982 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. ‘தலித் பேந்தர்ஸ்’ என அந்த இயக்கத்துக்கு பெயர் சூட்டப்பட்டது.

மலைச்சாமி 1989 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.

அப்போது தொல்.திருமாவளவன், மதுரையில் தடயவியல் அறிவியல் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

மலைச்சாமிக்கு அவர் நினைவேந்தல் கூட்டம் நடத்தினார்.

அந்தக் கூட்டத்தில் தலித் பேந்தர்ஸ் இயக்கத்தின் தலைவராக திருமாவளவன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்த இயக்கத்தின் பெயரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என மாற்றினார்.

தோல்வியில் முடிந்த துவக்கம்

1996 ஆம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகிய ஜி.கே.மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தார்.

அப்போது நடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் த.மா.கா. வாகை சூடியது. 99 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சிறுசிறு கட்சிகளை சேர்த்துக் கொண்டு மூப்பனார் தனி அணி அமைத்தார்.

அந்த சிறு கட்சிகளில் ஒன்றுதான் விடுதலைச் சிறுத்தைகள்.

முதன் முதலில் அப்போதுதான் சிறுத்தைகள் தேர்தலில் போட்டியிட்டனர். அந்தக் கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டன.

தேர்தலில் போட்டியிடுவதற்காக திருமாவளவன் அரசு வேலையை ராஜினாமா செய்தார். சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் தோற்றுப் போனார். பெரம்பலூரில் நின்ற தடா.பெரியசாமிக்கும் தோல்வி.

முதல் தேர்தலே தோல்வியாக முடிந்ததால் ஏற்பட்ட விரக்தியோ என்னவோ, அதன்பின் கூட்டணிகளை சர்வ சாதாரணமாக மாற்றிக்கொண்டே இருந்தார் திருமா.

2001 ஆம் நடந்த  ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் சேர்ந்த சிறுத்தைகளுக்கு 8 இடங்கள் ஒதுக்கினார் கருணாநிதி.

மங்களூர் தொகுதியில் திருமாவளவன் மட்டும் வாகை சூட, முதல் வெற்றியை சுவைத்தது சிறுத்தைகள் கட்சி.

2006 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. அணியில் இணைந்தார்.

2016 சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி எனும் பெயரில் திருமா, விஜயகாந்த், வைகோ, வாசன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனியாக களம் கண்டன. ஆனால், இந்தக் கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

இப்போது தி.மு.க. கூட்டணியில் இருக்கிறது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக அணியில் இரண்டு இடங்கள் கொடுத்தார்கள்.

இரண்டிலும் வெற்றி. 2021 சட்டசபைத் தேர்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கினார் ஸ்டாலின். நான்கில் சிறுத்தைகள் வென்றனர்.

மக்களவைத் தேர்தல் கைக்கெட்டும் தூரத்தில் வந்து கொண்டிருக்கிறது.

தி.மு.க.அணியில் கமல் கட்சி சேர்வது உறுதியாகிவிட்டது.

பா.ம.க.வும் தி.மு.க. அணியில் இணைந்தால் விடுதலைச் சிறுத்தைகள் பாடு திண்டாட்டாமாகிவிடும்.

சமரசம் செய்து கொண்டு தி.மு.க. அணியில் நீடிக்குமா? அல்லது அ.தி.மு.க. அணியில் சேருமா? என்பது தொல்.திருமாவளவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

– பி.எம்.எம்.

Comments (0)
Add Comment