சில படங்கள் பார்ப்பவர் மனதில் சில தடங்களை விட்டுச் செல்லும். அதே தாக்கம், அதே படத்தை ‘ரீமேக்’ செய்தாலோ அல்லது அடுத்த பாகங்களை உருவாக்கினாலோ கூட கிடைக்காது. அந்த பயத்தில்தான், பலர் அம்முயற்சிகளை மேற்கொள்வதில்லை.
ஆனாலும் அரண்மனை 2 & 3, கலகலப்பு 2 என்று தனது இயக்கத்தில் வெளியான படங்களின் அடுத்தடுத்த பாகங்களை வெளியிட சுந்தர்.சி தயங்கியதே இல்லை.
இதோ, அவர் முதன்முதலாக நாயகனாக நடித்த ‘தலைநகரம்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. வி.இசட்.துரை இப்படத்தை எழுதி இயக்கித் தயாரித்துள்ளார்.
முதல் பாகத்தில் இருந்த வடிவேலு இதில் கிடையாது. அது மட்டுமல்லாமல் துருப்பிடித்த ஆயுதத்தைக் கையில் தொட்டது போன்ற உணர்வைத் திரையில் நிரப்பிய ‘தொட்டி ஜெயா’ எனும் கேங்க்ஸ்டர் படம் தந்தவர் இயக்குனர் துரை.
சுந்தர்.சி உடன் இணைந்து அவர் தந்திருக்கும் ‘தலைநகரம் 2’ எப்படிப்பட்ட அனுபவத்தைப் பார்வையாளர்களுக்குத் தருகிறது?
ஐய்யோ.. ஐய்யோ..!
அதோடு, முதல் பாகம் முடிவடையும். இதில், அந்த ரைட் உயிர் தப்பி வாழ்வதாகக் காட்டப்படுகிறது.
மாலிக் பாய் (தம்பி ராமையா) என்பவருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழிலைச் செய்து வருகிறார் ரைட். பிரிந்துபோன தனது மனைவியின் நினைவாக அவர் வளர்க்கும் நாய் சிலரால் கடத்தப்படுகிறது.
அதனைக் கடத்தியவர்கள் தென்சென்னையின் பிரபல ரவுடியான நஞ்சுண்டனின் (பிரபாகர்) ஆட்கள். அதன் தொடர்ச்சியாக, அவர்களில் சிலரைத் துவைத்தெடுக்கிறார் ரைட்.
சரி, அவர்கள் ஏன் ரைட் வளர்க்கும் நாயைக் கடத்த வேண்டும்? நஞ்சுண்டன் செய்த ஒரு குற்றத்தில் ரைட்டை மாட்டிவிடவா வேண்டாமா என்ற விவாதத்தினால் எழுந்த விவகாரம் அது.
சரி, அப்படியொரு யோசனை எழ என்ன காரணம்? தனது எதிரியான வம்சியின் கேர்ள்ப்ரெண்டை கடத்தி வந்து பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியது நஞ்சுண்டன் செய்த குற்றம்.
இந்த விஷயத்தில், ரைட் மீது வம்சியின் சந்தேகம் விழும் வகையில் காய் நகர்த்துகின்றனர் நஞ்சுண்டனின் ஆட்கள். அதேநேரத்தில், மாலிக் பாய் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்படுகிறார்.
வடசென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி மாறனின் கையாளான மெய்ப்பனிடம் ஒரு நில ஆவணத்தை அடகு வைத்து மாலிக் பெற்ற பணத்தில் கள்ளநோட்டுகள் கலக்கப்பட்டிருக்கின்றன.
அதனைக் காரணம் காட்டி அவரை போலீசார் விசாரிக்கின்றனர். உண்மையை அறியும் ரைட், மெய்யப்பனின் ஆட்களை போலீசில் சரணடைந்துவிடும்படி எச்சரிக்கிறார்.
இதையடுத்து, ஒரேநேரத்தில் வம்சி, மாறன், நஞ்சுண்டன் என்று மூன்று ரவுடிகளோடு மோதும் சூழலுக்கு ஆளாகிறார் ரைட். அது, அவரது உயிரைப் பறிக்கும் நிலையில் நிறுத்துகிறது.
அதன்பிறகு ரவுடியிச பாதைக்கு ரைட் திரும்பினாரா இல்லையா என்று சொல்கிறது ‘தலைநகரம் 2’.
வடிவேலுவின் காமெடி வசனங்களில் இந்த ‘ஐய்யோ.. ஐய்யோ..’ ரொம்பவே பிரபலம்.
இளகிய மனதுடையவர்கள் இப்படத்தைப் பார்க்க நேர்ந்தால், தியேட்டரில் இந்த வசனத்தை அடிக்கடி சொல்ல வேண்டியிருக்கும்.
அந்த அளவுக்கு தொடக்கம் முதல் இறுதிவரை ரத்தமும் சதையுமான கதை இதில் காணக் கிடைக்கிறது.
அழகான நாயகி!
பெரிதாகச் சிரிக்காமல், சீரியசான முகத்துடன் படம் முழுக்க ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருவது எளிது. ஆனால், ரசிகர்கள் ரசிப்பார்களா என்பது கேள்விக்குறியே. ‘தலைநகரம்’ படத்தில் அதனைச் சாதித்தார் சுந்தர்.சி.
இதில் மீண்டும் ஒருமுறை அதனைச் செய்து பார்த்திருக்கிறார். உண்மையைச் சொன்னால், அதைவிட இதில் பல மடங்கு நடிப்பில் முன்னேறியிருக்கிறார். என்ன, இடுங்கிப்போன கண்களை கேமிராவுக்கு காட்டத்தான் கூச்சப்பட்டிருக்கிறார்.
நாயகி பாலக் லால்வானிக்கு இதில் போல்டான வேடம். அதனை லாவகமாகக் கையாண்டாலும், அவரது கவர்ச்சி அளவுக்கு நடிப்பு நம்மைக் கவரவில்லை.
மற்றபடி அவர் அழகை ரசித்துக் கொண்டே இருக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு ‘அசத்துறா’ பாடலில் அசத்தியிருக்கிறார்.
தம்பி ராமையாவும் அவரது மகளாக வரும் ஐராவும் நகைச்சுவை, செண்டிமெண்ட் திரையில் படர உதவியிருக்கின்றனர்.
பாகுபலி பிரபாகர், விஷால் ராஜன், ஜெய்ஸ் ஜோஸ் மற்றும் காளையன் சத்யா, டான்ஸ் மாஸ்டர் விஜி சதீஷ் உள்ளிட்ட மூன்று பெண்கள் என்று இதில் வில்லத்தனம் காட்ட எக்கச்சக்கமான ஆட்கள் உண்டு.
அவை மிகச்சரியாக வடிவமைக்கப்பட்டிருப்பதால், சுந்தர்.சியின் ஹீரோயிசம் நன்றாகவே ‘வொர்க் அவுட்’ ஆகியிருக்கிறது.
ஒளிப்பதிவாளர் இ.கிருஷ்ணசாமியும் படத்தொகுப்பாளர் சுதர்சனும் தங்களது கடின உழைப்பை இதில் கொட்டியிருக்கின்றனர்.
கதாபாத்திர அறிமுகங்களின்போது காலமும் இடங்களும் கலைத்து போடப்பட்டிருப்பதைக் குழப்பமின்றி திரையில் வார்த்திருக்கின்றனர்.
கிப்ரானின் இசையில் ‘அசத்துறா அசத்துறா’ பாடல் உடனடியாகக் கவரும். மற்ற பாடல்கள் காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கின்றன. அதனைச் சரிக்கட்ட, பின்னணி இசையில் பரபரப்பை நிறைத்திருக்கிறார்.
ஒரு இயக்குனராக, தயாரிப்பாளர்களில் ஒருவராக வி.இசட்.துரை இதில் பெரும் ரிஸ்கை கையாண்டிருக்கிறார். இன்றைய இளம் தலைமுறைக்குப் பிடித்தமான ஒரு ஆக்ஷன் படத்தைத் தந்திருக்கிறார்.
திசை மாறாத திரைக்கதை!
‘தலைநகரம்’ முதல் பாகம் போன்று இதில் நகைச்சுவைக்கு இடமில்லை. அதேபோல, பாலக் லால்வானியின் ஒருதலைக் காதலுக்கும் கொஞ்சம் ‘கத்திரி’ போட்டிருக்கலாம். அது பின்பாதியில் நமக்கு அயர்ச்சியை அள்ளித் தருகிறது.
மற்றபடி, எடுத்துக்கொண்ட ‘கேங்ஸ்டர்’, ‘ஆக்ஷன்’ வகைமைக்கேற்ற காட்சிகளை அடுக்கியிருக்கிறார் இயக்குனர்.
துளியும் கதையின் ஆதார மையத்தில் இருந்து விலகாமல் இலக்கு நோக்கி நகர்கிறது திரைக்கதை.
என்ன, முதல் படத்தில் ‘கத்தியைத் தூக்கியவனுக்கு கத்தியால் சாவு’ என்ற பயம் காட்டப்பட்டிருக்கும். இதில், அது சுத்தமாக இல்லை. போலவே, காவல்துறையின் கெடுபிடிகளும் திரைக்கதையில் தென்படவில்லை.
இந்த படத்தின் முடிவும் கூட சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால், ராம்கோபால் வர்மாவின் ‘சர்கார்’ பட வரிசை, டி உள்ளிட்ட பல படங்களை இயக்குனர் துரை பயங்கரமாக ரசித்திருக்கிறார் என்பது நன்கு புலப்படுகிறது.
‘ஏன் இவ்ளோ கொலவெறீ..’ என்று கேட்கும் அளவுக்கு படத்தில் வன்முறை ரொம்பவே அதிகம்.
அதுவும் கடைசி 15 நிமிடக் காட்சிகள் ரொம்பவே அருவெருப்பூட்டுகின்றன.
அந்த இடங்களை கொஞ்சம் நாசூக்காக தாண்ட தவறியிருக்கிறார் இயக்குனர்.
இரண்டாம் பாதியை மிகநேர்த்தியாகச் செதுக்கத் தவறியிருக்கிறார். அது போன்ற குறைகளைக் கவனிக்க விரும்பவில்லை என்றால், ஒரு நல்ல கேங்க்ஸ்டர் படம் பார்த்த திருப்தியை ‘தலைநகரம் 2’ தரும்.
‘என்ன ஒரே ரத்த வாடையா இருக்கு’ என்று மூக்கை பிடிப்பவர்கள், இப்படம் ஓடும் தியேட்டர் பக்கமே தலையைத் திருப்பக் கூடாது!
– உதய் பாடகலிங்கம்