கலை இலக்கிய உன்னதம் குறித்து அஃக் எனும் இதழை சேலத்திலிருந்து தன் சொந்தச் செலவில் நடத்திக் காட்டியவர் பரந்தாமன்.
இலக்கிய உலகின் எந்த சந்நிதானத்துக்கும் கட்டுப்படாமல் தனிமனிதராகத் தன் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசியும் விமர்சித்தும் இயங்கியதாலேயே தோற்கடிக்கப்பட்டவர்.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முந்தைய தமிழகத்தில் வெளியிடப்பட்ட மணிக்கொடி, கிராம ஊழியன், கலா மோகினி, இலக்கிய வட்டம், தேனீ, சரஸ்வதி, சாந்தி போன்ற இதழ்களை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு இதழுக்குமென்று தனித்தனியான குழுக்கள் இருந்தன.
எழுபதுகளில் வெளிவந்த எழுத்து, நடை, கசடதபற பிரக்ஞை போன்ற சிற்றிதழ்கள் ஒரு குழுவால் அல்லது கும்பலால்தான் நடத்தப்பட்டன.
“முன்பின் பார்க்கிற புத்தியுடன் பலர்கூடி ஆளுக்குச் சொற்பம் என்று பகிர்ந்துகொண்டு நடத்தப்பட்டவைதான் இவை.
நான் ஒருவன்தான் தனித்து நின்று ஒண்டியாய்ப் பத்திரிகை நடத்திக் காட்டியவன்” என்று தன்னைப் பற்றிப் பேசிக்கொண்டார் அஃக் இதழாசிரியர் பரந்தாமன்.
இவர் தனியனாக நின்று தனது சொத்துக்களைக் கூட இழந்து அஃக் இதழை நடத்தினார்.
இத்தகைய இலக்கியத் தீவிரம் கொண்ட அஃக் பரந்தாமன் இறுதியில் அவரது அஃக் இதழால் வளர்த்தெடுக்கப்பட்டவர்களாலேயே கைவிடப்பட்டு, வறுமையில் விழுந்து இறுதியில் சித்தப்பிரமையில் சாகும் நிலை ஏற்பட்டதிலிருந்தே தமிழ் இலக்கிய உலகத்தின் கோர முகத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.
இவரது அஃக் இதழ்களைத் தொகுத்து நூலாகக் கொண்டு வருவதில்கூட யாரும் அக்கறைப் படவில்லை.
அஃக் இதழோடு சம்பந்தமே படாத நான்தான் அக்கறை எடுத்து என்னால் மதிக்கப்படும் பதிப்பாளரான சந்தியா நடராஜனிடம் சொல்லி (இதனால் சந்தியா நடராஜன் எதிர் கொண்ட பிரச்சினைகள் கொஞ்ச நஞ்சமல்ல) அதனை ஒரு தொகுதியாகக் கொண்டு வந்தேன்.
70-களில் வெளிவந்த ‘கசடதபற’ போன்றவற்றை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு பத்திரிகையும் ஒவ்வொரு குழுவிற்குத் தீனி போட்டவைதான்.
இப்படிச் சிறுபத்திரிகைகளின் குழுச் சண்டைகளால் சலித்துப் போனதால் அஃக் இதழின் ஆசிரியர் பரந்தாமன் 1971இல் ஒரு பிரகடனத்தை வெளியிட்டார்.
தனது அஃக் பத்திரிகை, “ஒரு குழுவுக்காக, கும்பலுக்காக கூட்டத்துக்காகப் போடப்பட்ட மேடை அல்ல.
ஒரு கலை இலக்கியத்திற்காகப் போடப்பட்ட மேடை” என்று சொன்னார்.
ஆனால் 1972 ஜூன் மாதத்தில் தொடங்கி 1980 ஜுன் மாதத்தில் நின்று விடுகிற அஃக் இதழை எட்டாண்டுகளில் 22 இதழ்கள் கலைத்தரமான அமைப்புடன் நடத்தி முடித்த பிறகு, அஃக் பரந்தாமன் எழுதுகிறார்:
“சிற்றேடுகளை வாசிப்பதும், சிற்றேடுகளை வாசிக்கிறவர்களே சிற்றேடுகளில் எழுதுவதுமான நச்சுவட்டம் உடைந்து சிதறுவது அத்தியாவசியமாகி, இவர்களால் முன்வைக்கப்பட்ட கோணங்களைவிட, கோணல்களே அதிகமென்பது நிரூபணமாகி விட்டது.
வெளிவட்டத்திலிருக்கிற சாமான்யர்களைவிட உள்வட்டத்திலிருக்கிற மேதாவிகள் பயங்கரமானவர்கள் என்பது ருஜுவாகி விட்டது. இப்படி சாமான்யர்களைவிட கேடுகெட்டு போய்விட்ட இவர்கள் எந்த விதத்தில், எப்படி intellectuals?” (அஃக் – ஜுன் – செப் – 1980)
இப்படி வெளிப்படையாகக் கேள்வி கேட்காத, சமூகப் பிரச்சினைகள் குறித்து வாயே திறக்காத சந்தர்ப்பவாத இலக்கியவாதிகளை மட்டுமே கொண்டாடும் தமிழ் இலக்கிய உலகில் அஃக் பரந்தாமன் ஒரு அபூர்வ இலக்கியவாதி.
இப்படி உண்மையுடனும் உத்தமத்துடனும் வாழத்துடிக்கும் இலக்கியவாதிகளுக்கு
உத்தரவாதமளிக்கும் ஒரு தமிழ் இலக்கிய உலகை உருவாக்க உழைப்போம். இதுவே இளைய சக்திகளிடம் நான் முன் வைக்கும் விண்ணப்பம்.
– எழுத்தாளர் இந்திரன்
நன்றி: அகவிதழ் முகநூல்