ஒரு நல்ல ஐடியாவையோ அல்லது கதைச் சுருக்கத்தையோ கேட்டுவிட்டு ஒரு படத்தில் பங்கேற்பது எந்த அளவுக்குச் சரியானது.
சில திரைக்கதைகளை உற்றுநோக்கினால், இந்தக் கேள்விக்கான அவசியம் புரியும். ஏனென்றால், அந்த கதைக்கு நியாயம் செய்கிற மாதிரி அனைத்து காட்சிகளும் இருப்பது ஒரு மாபெரும் சவால்.
அதனாலேயே, முழு திரைக்கதையையும் ‘பைண்டிங்’ செய்துகொண்டு திரிகிற இயக்குனர்களுக்கு இன்று மதிப்பு அதிகமாகிவிட்டது.
விக்ரம் பிரபு, வாணி போஜன், விவேக் பிரசன்னா, ஆனந்த், டாலி தனஞ்ஜெயா நடித்த ‘பாயும் ஒளி நீ எனக்கு’ பார்த்தபோது அந்த எண்ணம் மனதில் விஸ்வரூபமெடுக்கிறது.
அதற்குக் காரணம் என்ன?
இருள் என்பது குறைந்த ஒளி!
தனது நண்பன் (விவேக் பிரசன்னா) உடன் சேர்ந்து சிறிய ஐடி நிறுவனமொன்றை நடத்தி வருகிறார் அரவிந்த் (விக்ரம் பிரபு).
அவருக்கு ஒரு குறைபாடு உண்டு. கண்ணில் உள்ள ஐரிஸ் சுருங்கி விரியும் தன்மையை இழந்த காரணத்தால், அதிக ஒளி இருக்குமிடங்களில் மட்டுமே அரவிந்தினால் தெளிவாகப் பார்க்க முடியும்; இருளில் பார்க்க இயலாது.
இந்தக் குறை வெளியே தெரியாதவாறு அரவிந்தை மற்றவர்கள் போலவே வளர்க்கிறார் அவரது சித்தப்பா (ஆனந்த்).
தங்கையின் திருமணத்திற்காக, ஒரு ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தை நாடுகிறார் அரவிந்த். அங்கு, தன் மனதுக்குப் பிடித்த பெண்ணை (வாணி போஜன்) சந்திக்கிறார்.
வேலை, காதல், குடும்பம் என்று எல்லாவற்றிலும் சுமூகமான விஷயங்களையே எதிர்கொள்ளும் அரவிந்த், ஒருகட்டத்தில் அபாயத்தில் சிக்குகிறார். திடீரென்று அவரைச் சிலர் கடத்திச் செல்கின்றனர். அவர்களிடம் இருந்து தப்பித்தாலும், ஏதோ ஒரு காரணத்தால் சித்தப்பா பதைபதைக்கிறார்.
ஒரு போலீஸ் அதிகாரியிடம் விஷயத்தைத் தெரிவிக்கிறார். அடுத்த சில நாட்களில், சித்தப்பா மர்ம நபர்களால் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்படுகிறார்.
அவர் இருக்குமிடம் வரை சென்றும், அரவிந்தினால் அக்கொடுமையைத் தடுக்க முடியவில்லை. காரணம், அவரது கண் பார்வைக் குறைபாடு.
இதையடுத்து, மனதில் இருக்கும் கோபத்தையும் ஆற்றாமையையும் தவிர்க்க முடியாமல் தவிக்கும் அரவிந்த், சித்தப்பாவைக் கொலை செய்த கும்பலைச் சேர்ந்த ஒருவனை நேருக்கு நேராக எதிர்கொள்கிறார்.
அதன் தொடர்ச்சியாக, தன்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்களுக்கான காரணத்தை அறிகிறார்.
இந்தக் கதையோடு, ஆனைமலையார் (வேல.ராமமூர்த்தி) என்ற மீனவ சமுதாயத் தலைவரின் அரசியல் வாழ்வும் அவரிடம் விசுவாசமாக வேலை செய்யும் ஜீவனின் (தனஞ்ஜெயா) பழி வாங்கும் எண்ணமும் திரையில் காட்டப்படுகிறது.
அவர்களுக்கும் அரவிந்துக்கும் என்ன சம்பந்தம் என்பதுதான் கதையின் ஆதார முடிச்சு. அது அவிழும்போது படமும் முடிந்துவிடுகிறது.
‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் மிகப்பெரிய பலவீனமே அதுதான்.
இருள் என்பது குறைந்த ஒளி என்றார் பாரதி. அவரது பாடலைக் கொண்டே தலைப்பிடப்பட்டிருக்கும் இப்படம், ஒளியை மிகக்குறைந்த அளவில் உள்வாங்கிக்கொள்ளும் ஒருவனை நாயகனாகக் காட்டியிருக்கிறது. அது மட்டுமே இப்படத்தின் பலம்.
நல்ல தொடக்கம்!
விக்ரம் பிரபுவுக்கு இதில் வித்தியாசமான வேடம். அதில் சந்தேகமில்லை. அவரும் அதற்கேற்பத் திரையில் தோன்றியிருக்கிறார். ஆனால், சண்டைக்காட்சிகளில் தான் ஏற்ற கதாபாத்திரத்தின் குறைபாட்டை மறந்து போயிருக்கிறார்.
நாயகனைச் சீண்டி, பின்னர் மன்னிப்பு கேட்டு, மெல்லப் பழகி, பிறகு காதல் புரியும் பெண் என்று இதில் வாணி போஜனுக்கு வழக்கமான நாயகி பாத்திரம்.
கதையில் நாயகிக்கு முக்கியத்துவம் கிடையாதா என்று யாரும் விமர்சித்துவிடாதபடி, இடைவேளைக்குப் பிறகு சில காட்சிகளில் விக்ரம் பிரபுவுடன் திரிகிறார்.
மற்றபடி, இப்படமும் அவரது நடிப்புக் கணக்கில் சேர்ந்திருக்கிறது. அவ்வளவுதான்.
இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு இணையான இடத்தைப் பெற்றிருக்கிறார் ‘டாலி’ தனஞ்ஜெயா. கன்னடத்தில் முன்னணி நாயகனாக இருக்கும் இவர், இதில் வில்லனாக தோன்றியிருக்கிறார்.
அதற்காகவே, அவர் தோன்றும் காட்சிகளில் ஏகப்பட்ட பில்டப். ஆனால், அதனை நியாயம் செய்யும்விதமாக அவருக்கான காட்சிகள் அமைக்கப்படவில்லை.
வேல.ராமமுர்த்தி, விவேக் பிரசன்னா என்று அரிதாகத் தென்படும் கலைஞர்களோடு, நீண்ட நாட்கள் கழித்து ‘தலைவாசல்’ ஆனந்தும் இதில் நடித்திருக்கிறார்.
ஸ்ரீதரின் ஒளிப்பதிவில் சண்டைக்காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன.
நாயகனுக்கு எப்படிப்பட்ட பார்வை என்பதை உணர்த்தும் காட்சிக்கோணங்கள் அருமை. ஆனால், இடைவேளைக்குப் பிறகு அந்த நுட்பத்தையே மறந்துவிட்டது படக்குழு.
படத்தொகுப்பாளர் சி.எஸ்.பிரேம்குமார் தானும் குழம்பி நம்மையும் குழப்பியிருக்கிறார். விக்ரம் பிரபுவுக்கு ஆனந்த் அப்பாவா சித்தப்பாவா என்ற குழப்பம் திரைக்கதையில் நிலவுகிறது. அது தீர்ந்துவிடாதபடி காட்சிகள் நகர்வதை அவர் கண்டுகொள்ளவே இல்லை.
மிக முக்கியமாக, இந்த திரைக்கதையில் கால இடைவெளி முக்கியமானது. அதைவிட நாயகன், வில்லன் தரப்புக்கான மோதலும் அதற்கான காரணமும் மிக முக்கியமானது.
அதனைக் கோடிட்டுக் காட்டும் எந்த விஷயத்தையும் இப்படம் கைக்கொள்ளவில்லை. ‘அதெல்லாம் ஸ்கிரீன்பிளே சஸ்பென்ஸ்’ என்று நினைத்திருந்தால், ‘ஸாரி’ என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
மஹதி ஸ்வர சாகரின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். ஆனால், கதை என்னாச்சு என்று தெரிந்துகொள்ள அவை தடையாகவே இருக்கின்றன. பின்னணி இசையில் அந்தக் குறையை ஈடுகட்டியிருக்கிறார் இசையமைப்பாளர்.
தறி கெட்டலையும் திரைக்கதைக்குப் பரபரப்பூட்ட உதவியிருக்கிறது பின்னணி இசை.
‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தில் நாயகன் எதிர்கொள்ளும் குறைபாடுக்கு ஏற்ப, மொத்த திரைக்கதையையும் வடிவமைக்கத் தவறியிருக்கிறார் இயக்குனர். நல்ல தொடக்கம் அமைந்தும் அதனைப் பயன்படுத்தத் தவறியிருக்கிறார்.
கிலி ஏற்படுத்தும் திரைக்கதை!
ஹீரோ, வில்லன் இருவரையும் அடுத்தடுத்து காண்பித்து, இவர்களுக்கு நடுவே என்ன தொடர்பிழை இருக்கிறது என்று காட்ட மெனக்கெட்டிருக்கிறார் புதுமுக இயக்குனர் கார்த்திக் அத்வைத்.
ஆனால், அதில் பாதிக்கிணறு மட்டுமே தாண்டியிருக்கிறார். சரத்குமாரின் ‘மகாபிரபு’ படத்திலும் இது போன்றதொரு விஷயத்தைக் கையாண்டிருப்பார் இயக்குனர் ஏ.வெங்கடேஷ்.
ஆனால், அதில் நாயகனும் வில்லனும் நேருக்கு நேர் சந்திக்கும் காட்சி உக்கிரமாக இருக்கும். இதில் அந்த மேஜிக் நிகழவில்லை. அதனால், சவசவ என்று செல்லும் இரண்டாம் பாதியும் கிளைமேக்ஸும் நமக்கு ‘கிலி’ தருகின்றன.
கதையைப் பார்வையாளர்கள் உணரும் வரை ஒரு ‘சஸ்பென்ஸ்’ தொடர்வது நல்ல விஷயம்.
ஆனால், இந்த படத்தில் அதனை கிளைமேக்ஸ் வரை நகர்த்த மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர். அதுவே படத்தின் ஆதாரத்தைச் சரித்திருக்கிறது. படப்பிடிப்புக்கு முன்னதாகவே சரி செய்திருக்க வேண்டிய விஷயம் அது.
‘டாணாக்காரன்’, ‘பொன்னியின் செல்வன் 1 & 2’ படங்களில் பாந்தமாகத் தன் பாத்திரங்களோடு ஒன்றி நடித்த விக்ரம் பிரபுவுக்கு மீண்டும் ஒரு சறுக்கல் இந்தப் படம்.
அதற்காக, அவர் கதை தேர்வு செய்யும் முறையைக் குறை சொல்லிவிட முடியாது.
ஆனால், ஒரு ரசிகனின் பார்வையில் அவர் தனக்கான கதைகளைத் தேர்வு செய்வதில்லையோ என்ற எண்ணத்தை அதிகமாக்குகிறது அவரது பட வரிசை.
நடிப்பு, கதை, காட்சியாக்கம் என்று அனைத்திலும் வித்தியாசமாகச் சிந்திக்கத் தெரிந்தும் சமகால ரசிகர்களின் நாடித்துடிப்பு தெரியாவிட்டால் ‘போயோ போச்..’ அதற்கு உதாரணமாகியிருக்கிறது ‘பாயும் ஒளி நீ எனக்கு’..
– உதய் பாடகங்கம்