காவல்துறையினருக்கு டிஜிபி உத்தரவு
சிகிச்சையின் போது நோயாளிக்கு மரணம் ஏற்பட்டால் மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யும் நடைமுறைக்கு, தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சிகிச்சையின்போது நோயாளிக்கு மரணம் ஏற்பட்டால் அது மருத்துவரின் கவனக்குறைவு அல்லது அலட்சியம் காரணமாக ஏற்பட்டது என்றும்,
எனவே, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புகாரை குடும்ப உறுப்பினர்கள் காவல் நிலையத்தில் அளிக்கும்போது நிலைய அதிகாரி உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தகைய சூழ்நிலைகளில் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி வழக்குப் பதிவு செய்யும் முன் நீதிமன்றத்தின் வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும்,
எனவே இதுபோன்ற வழக்குகளில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யும் வழக்கமான நடைமுறைக்கு தடை விதிப்பதாகவும் காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.