கைம்பெண்களின் இரண்டாவது வாழ்க்கை!

ஜுன் 23 – சர்வதேச கைம்பெண்கள் தினம்

ஒரு பெண் தனது கணவனை இழந்துவிட்டால் அவரை கைம்பெண் அல்லது விதவை என்கிறோம். அதன்பிறகு அவரது வாழ்வே அஸ்தமித்துவிட்டதாக உணர்கிறோம். இதுவே பொதுவான மனநிலையாக உள்ளது.

இதைக் காட்டிலும் அப்பெண்ணுக்குச் செய்யக்கூடிய கொடுமை வேறில்லை. இருபத்தோராம் நூற்றாண்டிலும் இந்த மனப்பாங்கு மாறவில்லை.

மதுரா, வாரணாசி, விருந்தாவன் போன்ற இடங்களில் பெருமளவில் கைம்பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதே அதற்குச் சாட்சியமாக விளங்குகிறது.

‘விதவை என்று சொல்லும்போது ஒரு ஒற்று கூட இருக்காது; கைம்பெண் என்றால் இரண்டு ஒற்றுகள் இருக்கும்’ என்று தனது எழுத்து வன்மையை வெளிப்படுத்தினார் கலைஞர் மு.கருணாநிதி.

அதாவது, பொட்டிழந்த பெண் விதவை என்ற வாதத்திற்குப் பதிலாக இரண்டு பொட்டுகள் உடையவர் என்ற பொருளில் அப்பதிலைத் தந்தார்.

அப்படியொரு சிந்தனை பிறந்தபிறகும் கைம்பெண்கள் மறுவாழ்வு குறித்து உரக்கப் பேச வேண்டிய நிலை நீடிப்பது வருத்தத்திற்குரியது.

கணவனை இழந்தவர்கள்!

ஒருகாலத்தில் கணவனை இழந்தவர்களுக்கு இன்னொரு வாழ்வே கிடையாது என்ற சூழல் நிலவியது.

உடன்கட்டை ஏறுதல் போன்ற பழக்கங்கள் முடிவுக்கு வர பல நூற்றாண்டுகள் ஆயின.

அதன்பிறகும், அந்த பெண்களை இந்தச் சமூகத்தின் பார்வையில் இருந்து விலக்கி வைப்பது ஒரு மரபாகச் செயல்படுத்தப்பட்டது.

வீட்டுக்குள் பெண்களைப் பூட்டி வைத்த காலகட்டத்தில், இல்லத்தரசிகளுக்கும் சிறுமிகளுக்கும் கிடைத்த சுதந்திரத்தில் துளி கூட கணவரை இழந்த கைம்பெண்களுக்கு வழங்கப்படவில்லை.

வெள்ளையுடை உடுத்துவது தொடங்கி தலைமுடியை மழிப்பது வரை பல கொடுமைகளுக்கு ஆளானார்கள்.

பண்டைய காலத்தில் போரில் மடிந்த வீரனின் மனைவி வேறொருவரை மணம் முடிப்பது வழக்கமாக இருந்தது.

பெரும்பாலும் கணவரின் உடன்பிறந்தவர்கள் அல்லது சகோதர உறவு முறை கொண்டவர்களில் ஒருவர் அப்பெண்ணை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்வர்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவின் பல பகுதிகளில் இந்த வழக்கம் உண்டு; அது இன்றும் தொடர்கிறது.

கைம்பெண்களுக்கு மறுமணம் செய்து வைக்கும் போக்கு சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது.

அதற்கு நாடகம், கதை, கவிதை, திரைப்படங்கள் போன்ற கலைகளின் பங்கு மிக அதிகம்.

எம்.ஆர்.ராதாவின் ‘ரத்தக்கண்ணீர்’ தொடங்கி விசுவின் ‘மணல்கயிறு’, ‘சகலகலா சம்பந்தி’ உட்படப் பல படங்கள் அப்படிப்பட்ட கருத்தியலைப் பேசியதற்காகவே பெரிதும் சிலாகிக்கப்பட்டன.

கணவனை இழந்த பெண்கள் மீண்டும் பழைய நிலையை அடையும் முன்பாக கடினமான வலிகளைக் கடக்க வேண்டியிருக்கும். ஒரு பெண்ணின் வாழ்வில் அந்த தருணம் ரொம்பவே கடினமானது.

தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களிடம் இருந்து அவர் முற்றிலுமாக விலகி நிற்பார். இல்லற வாழ்வில் ஈடுபட்டவர்களை விட, இவர்கள் பல மடங்கு பொருளாதார ரீதியிலான சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

ஆனால், அவர்களுக்குத் தேவையான உதவிகளைக் குடும்பத்தினரும் சுற்றத்தினரும் அரசும் செய்து தரும்போது அந்நிலை அடியோடு மாறும்.

படிப்படியாக, யாராவது ஒரு ஆணை அல்லது ஒரு நபரைச் சார்ந்து வாழ வேண்டுமென்ற நிலையிலிருந்து விடுபட்டு அவர்கள் சுதந்திரமான, பலமிக்க, சுயாதீனமான வாழ்வை மேற்கொள்வார்கள். மறுமணம் போலவே, அதுவும் அவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கையாக அமையும்.

இந்தியாவில் கைம்பெண்கள் நிலை!

2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் இருந்த கைம்பெண்கள் எண்ணிக்கை 4,32,61,278. அப்போதிருந்த பெண்களின் எண்ணிக்கையில் இது 7.37% .

ஐக்கிய நாடுகள் சபை கணக்கின்படி உலகளவில் தற்போது 11.5 கோடி கைம்பெண்கள் உள்ளனர்.

அதில் இந்தியாவில் இருப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் 4.2 கோடி இருக்குமென்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.

விருந்தாவன் போன்ற இடங்களில் சுமார் 20,000க்கும் மேற்பட்ட விதவைகள் வாழ்கின்றனர்.

இவர்களின் பெரும்பாலானோர் உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து அனுப்பப்பட்டவர்கள்.

கணவன் இறந்தபிறகு, அந்த ஆடவரின் குடும்பத்தினரே அப்பெண்ணை அங்கே விட்டுச் சென்றுவிடுகின்றனர். அதன்பிறகு அவர் என்னவானார், எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்றுகூட எவரும் கவலைப்படுவதில்லை.

தமிழ்நாட்டிலோ அல்லது வேறு தென்மாநிலங்களிலோ இது போன்ற நிலைமை இல்லை. சுமார் எழுபதாண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலையோடு ஒப்பிடுகையில், இன்று கைம்பெண்கள் வாழ்வு பெருமளவில் மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

கல்வியறிவு மேம்பட்டிருப்பதால், கைம்பெண்கள் கணவரின் குடும்பத்தினரையோ அல்லது தங்கள் குடும்பத்தினரையோ சார்ந்தியங்க வேண்டிய சூழல் இல்லை. தங்களுக்கென்று ஒரு வேலை, வாழ்க்கை என்றிருக்கின்றனர்.

ஆனாலும் மறுமணத்தைத் தேர்ந்தெடுக்கப் பெரும்பாலானோர் முன்வருவதில்லை. அது திருப்திகரமான சூழலைத் தராது என்ற எண்ணம் பொதுவில் நிலவுவதே அதற்குக் காரணம்.

அது மட்டுமல்லாமல், அந்தப் பெண்ணின் வருகையே அவரது கணவரின் உயிரைப் பறித்ததாக நம்புவது இன்றும் இருக்கிறது.

வெளிப்படையான பேச்சில் அதனைக் காண முடியாவிட்டாலும், அது நெஞ்சத்தின் ஆழத்தில் இருப்பதை அப்பெண்களால் உணர முடியும்.

பொருளாதார வாழ்வை ஓரளவு சமாளிக்கும் கைம்பெண்கள் கூட, சமூகத்தில் எதிர்ப்படும் மனிதர்களைச் சந்திக்கப் பல கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

ஆடை அணிகலன்களைப் பயன்படுத்துவது, பொதுவிடங்களில் நடமாடுவது, விழாக்களில் கலந்துகொள்வது, முக்கியமான முடிவுகளை மேற்கொள்வது, சொத்துரிமையில் பங்கு கேட்பது போன்றவற்றைச் சாதாரண பெண்களைப் போல அவர்களால் கைக்கொள்ள முடியாது.

என்ன மாற்றங்களை மேற்கொண்டாலும் அது சமூகத்தில் விமர்சனங்களுக்கு உள்ளாகும். பசி, தூக்கம் போன்றவையே எட்டாக்கனி என வாழ்வை மேற்கொண்டிருந்த காலமொன்று உண்டு.

அதில் பெரும் மாற்றம் விளைந்தபோதும் பாலியல் இன்பம் சார்ந்த அவர்களது விருப்பங்கள் இன்றும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளன. அதனாலேயே கைம்பெண்களைக் கீழ்த்தரமாக நோக்கும் போக்கும் நிலவுகிறது.

இரண்டாம் திருமணம் என்பது வெகுசிலருக்கே வாய்ப்பதால், பல பெண்களின் சமூக மதிப்பு சாதாரண பெண்களுக்கு இணையானதாக இருப்பதில்லை. இன்று கைம்பெண்ணுக்கான அடையாளங்களும் வரையறைகளும் உடைத்தெறியப்பட்டு, அந்த நிலை வெகுவாக மாறியுள்ளது.

அதேநேரத்தில் சரியான கல்வியோ, பொருளாதார வசதிகளோ இல்லாத நிலையில் அன்றாட வாழ்வுக்கே கஷ்டப்படும் பெண்களும் உள்ளனர்.

கூட்டுக்குடும்பமாக வாழ்வது குறைந்தபோது, கைம்பெண்கள் உண்மையிலேயே ஆதரவற்றவர்களாக மாறிப் போயினர். அரசின் நலத்திட்டங்களும் சுயதொழில் வாய்ப்புகளும் மட்டுமே அவர்களுக்கான ஆதரவாக விளங்குகின்றன.

ஒரு தாயின் கஷ்டம்!

பிரிட்டனைச் சேர்ந்த ராஜிந்தர் லூம்பா என்பவர் கைம்பெண்கள் மறுவாழ்வுக்கான காரியங்களைத் தனது லூம்பா அறக்கட்டளை மூலமாகச் செயல்படுத்தி வந்தார்.

அதற்குக் காரணம், சிறுவயதில் தனது தாய் பட்ட கஷ்டங்களை அவர் நேரில் கண்டது. 1954ஆம் ஆண்டு தனது 37வது வயதில் அந்த பெண்மணி கணவனை இழந்தார். ராஜிந்தரை வளர்க்கச் சிரமப்பட்டார்.

அதனை வேறொரு பெண் அனுபவிக்கக் கூடாது எனும் நோக்கில் 2005ஆம் ஆண்டு கைம்பெண்கள் தினத்தை அனுசரிக்குமாறு அழைப்பு விடுத்தது லூம்பா அறக்கட்டளை.

அதற்கடுத்த ஐந்தாண்டுகளில் ஐ.நா.வே அதனைச் செயல்படுத்தும் அளவுக்கு அந்த முன்னெடுப்புகள் அமைந்தன.

சர்வதேச கைம்பெண்கள் தினத்தன்று, அவர்களை நம்மில் ஒருவராகக் கருதும் போக்கு பரவலாக வேண்டும். அவர்களது மகிழ்ச்சியான வாழ்வுக்காக நம்மால் இயன்றதைச் செய்ய முன்வர வேண்டும்.

இன்றும் கீழான நிலையில் இருக்கும் கைம்பெண்களை நாமிருக்கும் தளத்தில் இருத்த முனையும் முன்னெடுப்புகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

அந்த வகையில், 2023ஆம் ஆண்டு சர்வதேச கைம்பெண்கள் தினத்தின் நோக்கமாக ‘பாலின சமத்துவத்திற்கான கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம்’ என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.

கைம்பெண்கள் மறுவாழ்வு என்பது அரசு செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் மட்டுமல்ல; ஒவ்வொரு தனிமனிதரும் அதற்கான முன்னெடுப்புகளில் இறங்கினால் மட்டுமே ‘கைம்பெண்’ எனும் வார்த்தையே அர்த்தமற்றுப் போகும்.

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment