ராம்சரண் – உபாசனா தம்பதியருக்கு திரையுலகினர் வாழ்த்து!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மெகா பவர் ஸ்டார் ராம்சரண் – உபாசனா கொனிடேலா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

இவர்களுக்கு தெலுங்கு திரையுலகினர் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகினரும் உலகமெங்கும் உள்ள ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட திருமதி உபாசனா ராம்சரணுக்கு இன்று அதிகாலை பெண் குழந்தை பிறந்தது.

இந்த நல்ல செய்தியால் மெகா ஸ்டார் குடும்பத்தினர், அவரது நண்பர்கள், நலம் விரும்பிகள், ரசிகர்கள் என அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அப்பல்லோ மருத்துவமனையின் டாக்டர் சுமனா மனோகர், ”இன்று அதிகாலை உபாசனாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை மற்றும் தாய் இருவரும் நலமாக உள்ளனர்.

அவர்கள் விரைவில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவர். தற்போது டாக்டர் ரூமா சின்ஹா உபாசனாவை தொடர்ந்து பரிசோதித்து, ஆலோசனை வழங்கிவருகிறார்” என்றார்.

மெகா ஸ்டார் சிரஞ்சீவி பேத்தி பிறந்த மகிழ்ச்சியை செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், “ராம்சரண் – உபாசனா தம்பதியருக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை 1:49க்கு மகள் பிறந்திருக்கிறார். எங்கள் குடும்பம் மகிழ்ச்சியில் உள்ளது. இந்த பெண் குழந்தை எங்களுக்கு மிகவும் முக்கியம்.

ராம்சரண் மற்றும் உபாசனாவை பெற்றோர்களாக காண நாங்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தோம். பல ஆண்டுகளுக்குப் பிறகு எங்களது வேண்டுகோளை இறைவன் நிறைவேற்றி வைத்திருக்கிறார்.

ராம் சரண் தந்தையானதும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள், நலம் விரும்பிகள் என அனைவரும் அன்பையும், வாழ்த்தையும் பொழிந்து வருகிறார்கள். எங்களின் மகிழ்ச்சியை தங்களுடையதாக உணர்கிறார்கள்.

இவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக. வாழ்த்தியதற்கும், அன்பை பகிர்ந்துகொண்டதற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.

Comments (0)
Add Comment