ஜானகி அம்மாவிடம் இருந்த கொடைத் தன்மை!

– நடிகை சச்சு

அன்னை ஜானகி – 100 : சிறப்புப் பதிவு 

ஜானகி அம்மா அவர்களுடன் நான் நெருக்கமாகப் பழகவில்லையென்றாலும் எனக்கு தெரிந்த சில நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நாங்கள் எல்லோரும் எனது அக்கா ‘மாடி’ லெட்சுமியுடன் மயிலாப்பூரில் வசித்து வந்தோம். பாபநாசம் சிவன் அவர்களுடைய சகோதரர் மகளான ஜானகி அவர்கள் மந்தைவெளியில் வசித்து வந்தார்.

அந்த சமயத்தில் எனது சகோதரி ‘மாடி’ லெட்சுமி இயக்குநர் கே.சுப்ரமணியத்தின் மகள் பத்மா சுப்ரமணியம் நடத்திய ‘நிருத்யோதயா’ நடனப் பள்ளியில் நடனம் பயின்றார். அப்போதுதான் என் அக்காவிற்கு ஜானகி அம்மா அவர்களுடன் பழக்கம் ஏற்பட்டது.

அப்போது எனக்கு ஐந்து வயதுதான் என்பதால் என் வீட்டில் உள்ளவர்கள் சொல்லிதான் ஜானகி அவர்களைப் பற்றி எனக்குத் தெரியும்.

‘நாம்’ படத்தில் ஜானகியும் எம்.ஜி.ஆரும் ஜோடியாக நடித்தார்கள்.

அப்போது அந்த ஷுட்டிங்கிற்கு இயக்குநர் காசிலிங்கம் என்னை அழைத்துச் சென்று எம்.ஜி.ஆர் மற்றும் ஜானகி அம்மாவிடம் அறிமுகப்படுத்தினார்.

அப்போது எம்.ஜி.ஆர் என்னை தூக்கி அவரது மடியில் உட்கார வைத்துக் கொண்டார்.

எம்.ஜி.ஆரையும் ஜானகி அவர்களையும் முதன்முறையாக சந்திக்கும் வாய்ப்பு அப்போது தான் கிடைத்தது.

ஆனால், நான் சிறுமியாக இருந்ததால் அவர்களைப் பற்றிய விவரம் அப்போது எனக்கு தெரியவில்லை.

வளர்ந்த பின்னர் தான் அவர்களுடைய படங்களை நான் திரையில் பார்த்தேன். இருவருமே மிகச் சிறந்த கலைத்தாயின் பிள்ளைகள்.

ஜானகி அம்மாவும் எம்.வி.ராஜம்மாவும் சகோதரிகளாகத்தான் பழகி வந்தார்கள். ஜானகி அம்மாவின் குரலும் தோற்றமும் பார்ப்பதற்கு மிக கம்பீரமாக இருக்கும்.

எம்.ஜி.ஆர் அண்ணனை திருமணம் செய்து கொண்டபிறகு, கணவரையும் குடும்பத்தையும் பார்த்துக் கொள்வதைத் தான் தன் தலையாய கடமையாக நினைத்த ஜானகி அம்மா படங்களில் நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார்.

எம்.ஜி.ஆர் அண்ணனைப் போலவே ஜானகி அம்மாவும் கொடைத்தன்மை மிக்கவர். பண்டிகை நாட்களில் அ.தி.மு.க அலுவலகத்திற்குச் சென்று ஜானகி அம்மாவைச் சந்தித்திருக்கிறேன். நான் கதாநாயகியாக நடித்தபோது அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டேன்.

என் மீது மிகுந்த பாசத்துடன் இருப்பார் ஜானகி அம்மா. நான் சிறுமியாக இருந்தபோது ஜானகி அவர்கள் எங்களது வீட்டிற்கு வந்ததெல்லாம் நினைவில் இருக்கிறது. அவர் என்னை எங்கு சந்தித்தாலும் எனது அக்காவைப் பற்றி விசாரிப்பார்.

ஒருமுறை எனது அக்காவைச் சந்தித்த எம்.ஜி.ஆர் அண்ணன், அரசியலுக்கு வந்துவிடு என அழைத்தார்.

எனது அக்காவின் பேச்சை பலமுறை கேட்டிருப்பதால், “நீ  நன்றாகப் பேசுகிறாய். எனது ரசிகர் மன்றங்களில் பேசு..” என்றார்.

இப்படித்தான் எனது அக்கா மாடி லெட்சுமியை அரசியலில் அறிமுகப்படுத்தினார் எம்.ஜி.ஆர் அண்ணன்.

கலைஞர்களிடம் மட்டுமல்லாமல் அனைவரிடமும் மிகுந்த அக்கறை காட்டி உதவினார்கள் எம்.ஜி.ஆர் அண்ணனும் ஜானகி அம்மாவும்.

எம்.ஜி.ஆர் அண்ணன் உடல்நலம் சரியில்லாதபோது அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று பார்த்தேன்.

அப்போது எம்.ஜி.ஆர் அண்ணனின் உடல்நிலை குறித்து ஜானகி அம்மாவிடம் விசாரித்து அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு வந்தேன்.

தன்னைச் சுற்றியுள்ள எல்லோருமே நல்லா இருக்க வேண்டும் என்று நினைக்கிறவர் ஜானகி அம்மா.

தன்னுடைய குடும்பத்தினரையும், எம்.ஜி.ஆரின் அண்ணன் குடும்பத்தினரையும் நன்றாக கவனித்துக் கொண்டவர் அவர்.

“ஜானகி எனக்கு உற்ற துணையாக இருப்பதால் தான் நான் சினிமாவிலும் அரசியலிலும் கோலோச்ச முடிகிறது” என எம்.ஜி.ஆர் அண்ணன் அடிக்கடி சொல்லியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர் அண்ணனைச் சந்திக்க ராமாபுரம் தோட்டத்திற்கு வருபவர்கள், அண்ணனைச் சந்திக்க முடியாமல் போகும் சமயத்தில் ஜானகி அம்மையாரைச் சந்தித்து தங்களது கோரிக்கைகளை சொல்லுவார்கள்.

அந்த அளவுக்கு எம்.ஜி.ஆரை நம்பியவர்கள் எல்லோரும் ஜானகி அம்மாவையும் நம்பினார்கள்.

ஜானகி அம்மாவிடம் சொல்லும் கோரிக்கைகள் எம்.ஜி.ஆரிடம் கொண்டு செல்லப்பட்டு, அது நிறைவேற்றப்படும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருந்தது.

ஜானகி அம்மா முதல்வராக இருந்தபோது என்னால் சந்திக்க இயலவில்லை. மிகக் குறுகிய காலம் அரசியலில் இருந்தாலும் எம்.ஜி.ஆர் அண்ணனைப் போலவே ஜானகி அம்மாவும் கொடைத் தன்மை உடையவராகவே விளங்கினார்.

சினிமா உலகில் அவர்களைப் போன்று ஒரே குடும்பமாக பழகக்கூடியவர்களை வேறு எங்கும் பார்க்க முடியாது.

தோட்டத்திற்கு யார் சென்றாலும் உணவருந்தாமல் அனுப்ப மாட்டார்கள்.

ராமாபுரம் தோட்டத்தில் நாள் முழுவதும் சமையல் பணி நடந்து கொண்டே இருக்கும். வருபவர்களுக்கெல்லாம் உணவளிப்பார்கள்.

எம்.ஜி.ஆர் அண்ணனும் ஜானகி அம்மாவும் யாரையும் உணவருந்தாமல் அனுப்பியதே இல்லை. அந்த அளவிற்கு கொடைத் தன்மை உடையவர்களாகவே இருந்தனர் எம்.ஜி.ஆர் அண்ணனும் ஜானகி அம்மாவும்.

அன்னை ஜானகி – 100

நூற்றாண்டுச் சிறப்பு மலர்

வெளியீடு: மெரினா புக்ஸ்

தரணி காம்ப்ளெக்ஸ்,
1A, திருநாத முதலி நகர்,
திருப்பத்தூர். – 635 601

அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டுச் சிறப்பு மலரைப் பெற கீழே உள்ள இணைப்பைத் தொடுக…

https://marinabooks.com/detailed?id=1499-0326-2509-9479

Comments (0)
Add Comment