இசையில் வசமாகா இதயம் எது?

ஜுன் 21 – உலக இசை தினம்

இசைக்கு வசமாகாத இதயம் இந்த உலகில் எங்கிருக்கிறது? இந்தக் கேள்வி எழும்போதெல்லாம், அதனைப் பாடலாகவே பாடிய டி.எம்.சௌந்தரராஜன் நினைவுக்கு வருவார்.

இறைவனே இசையாக மாறியதாக அதில் உருகியிருப்பார் டி.எம்.எஸ். கடவுள் பக்தி இல்லாத ஒருவர் இவ்வரிகளை ஒப்புக்கொள்ள மாட்டார். ஆனாலும், நயத்துடன் பாடியிருப்பதை ரசிக்காமலும் இருக்க மாட்டார். அதுதான் இசையின் மகத்துவம்.

இசை நம் வாழ்வுடன் இரண்டறக் கலந்திருக்கிறது. ’பிறந்தால் தாலாட்டு, இறந்தால் ஒப்பாரி’ என்ற க்ளிஷே வார்த்தைகளில் அதனை விளக்கத் தேவையில்லை.

ஏனென்றால், நம்மில் பலரும் தினமும் சில நிமிடங்களாவது இசையை ரசித்துக் கேட்பவர்கள்தான். குறைந்தபட்சமாக நம் செவிகளைக் கையிலெடுத்து இசை ஒலிக்கும் திசையில் மிதக்க விடுபவர்கள் தான்.

காலை முதல் இரவு வரை

காலையில் எழும்போது அலாரம் அடிப்பதைக் கேட்டிருக்கிறீர்களா?

அதற்கு ஒப்பான லயத்துடன் பறவைகள் விளிப்பதைக் கேட்டிருக்கிறீர்களா?

இரண்டுமே நம் தூக்கத்தைக் கலைக்கும் வல்லமை கொண்டவை தான்.

ஆனாலும், இரண்டாவதற்கு ஆற்றல் அதிகம். காரணம், அதில் மிகுந்திருக்கும் இசை நயம்.

அதனைக் கேட்டபிறகு, மனதில் ஒரேநேரத்தில் அமைதியும் உற்சாகமும் பெருகும் ஒன்றுக்கொன்று எவ்வித உரசலும் இல்லாமல். அப்புறம் வீட்டுச் சத்தம், சிக்னல் முனுமுனுப்புகள், அலுவலக எதிர்க்கணைகள், புளியங்கொட்டை டீத்தூள், வியர்த்து வடிந்த டிபன்பாக்ஸ், பெட்ரோல் இல்லா பைக், அன்றன்றைய சச்சரவுகள் என டைரியில் குறிப்பிட எத்தனையோ விஷயங்கள் இருந்தும் அத்தனையையும் ‘ஆஃபாயில்’ போல வாரிச் சுருட்டி உள்ளே தள்ளிவிட்டு ஏப்பம் விடும் ஆற்றலைத் தரும் அந்தக் கூவல். அதற்கு ஈடிணை வேறேது?

சில வீடுகளில் காலையில் பக்திப் பாடல்கள் ஒலிக்கும். அவரவர் மதம் சார்ந்து அது அமையும்.

அனைத்து மதப் பாடல்களையும் கேட்க வேண்டுமென்றால் அகில இந்திய வானொலியை ‘ஆன்’ செய்யலாம்.

உடற்பயிற்சி செய்யும்போது மட்டுமல்ல, சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகளை ஆற்றும்போதும் பின்னணியில் இசையை ஒலிக்க விடலாம். அது நம் வேலைப்பளுவைப் பாதியாகக் குறைத்துவிடும்.

உணவுண்ணும் வேளைகளில் டிவி பார்ப்பதைவிட மொபைலிலோ, கம்ப்யூட்டரிலோ அல்லது டிவிடி பிளேயரிலோ அல்லது உங்கள் கைவசமிருக்கும் ஆடியோ சாதனங்களின் வழியே பாடல்களை வீடெங்கும் பாவச் செய்யலாம்.

அதனால் உணவின் மீதான விருப்பம் கூடுவதோடு, கவனம் திசை திரும்பாமல் இருக்க உதவும்.

இல்லை, இசை மீதுதான் முழுக்கவனமும் இருக்க வேண்டுமென்று விரும்புபவர்கள் உண்டபிறகு மனதுக்குப் பிடித்த பாடலை ஒலிக்கவிட்டபடி ஹாயாக கண்களை மூடி ரசிக்கலாம்.

இரவில் படுக்கச் செல்லும் முன் டிவியோ, மொபைலோ சலிக்கும் வரை பார்ப்பதைவிடச் சிறந்தது இசை கேட்கும் வழக்கம்.

உறங்கச் செல்லும் முன்பாக இசை கேட்கும் வழக்கம் இருப்பவர்களுக்காகவே, இன்றும் இசை சார்ந்தியங்கும் டிவி சேனல்கள், பண்பலை வானொலிகள் நல்ல வருவாயை ஈட்டி வருகின்றன.

யாருக்கு வேண்டும் இசை?

‘என்ன செய்தால் மனம் அமைதியாகும்’ என்று வாழ்வில் தடுமாறுபவர்களுக்கு அவசியம் தேவை இசை. அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எனது மன நலத்தைக் காக்க விரும்புகிறேன் என்பவர்களுக்கும் கூட இசை தேவைதான்.

இன்றைய சூழலில், சம்பந்தமே இல்லாமல் நம் மனதில் கீறல்கள் விழ ஆயிரம் சந்தர்ப்பங்கள் வாய்க்கின்றன.

அவற்றை வாசலுக்கு வெளியே கழற்றிவைத்துவிட்டு, உடல் முழுக்க நீரால் கழுவிச் சுத்தப்படுத்தியபின்னும் மனதில் ஒட்டிக்கொண்டு நாசிகளுக்குள் புகத் துடிப்பவற்றை அப்படியே அறுத்தெறியும் நுட்பம் இசைக்குத்தான் தெரியும்.

இன்றைய சூழலில், ஒவ்வொருவரும் ஸ்பைடர்மேன் நாயகன் போல தங்களை அமிழ்த்தும் வலைகளை அறுத்தெறியத்தான் துடித்துக் கொண்டிருக்கின்றனர்.

குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் இசை பிடிக்கும். தூங்காத குழந்தைகளைப் பாட்டுப் பாடி தூங்க வைக்க முடியவில்லை என்றால், ‘ம்ம்…ம்…ம்..’ என்ற சத்தத்தை ஒரே ஸ்தாயியில் முனுமுனுத்தால் போதும்.

அந்தக் குழந்தை தூங்கியிருக்கும். ஏனென்றால் அக்கறையும் பாசமும் கலந்த நமது சத்தம் கூட குழந்தைகளுக்கு இசையாகத்தான் தெரியும்.

ஒருகாலத்தில் ரேடியோ, டேப் ரிக்கார்டர், டிவி என்று அனைத்தும் ஆண்களுக்கான சாதனங்களாக இருந்தன. இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது.

பணிக்குச் செல்லும் பெண்களில் பல பேர் தங்கள் காதுகளோடு ஹெட்போன்களை ஒட்டவைத்து நீண்டநாட்களாகிவிட்டன.

சீரியலையோ, சிரிப்பையோ பார்க்கும் பெண்கள் கண்களைத் திறந்தவாறிருந்தால், இசை விரும்பியாகத் திகழ்பவர்கள் கண்கள் மூடியவாறு தமக்குப் பிடித்த பாடலின் மார்பில் சாய்ந்திருப்பார்கள்.

அடுத்த பாடலுக்குத் தாவும் இடைவெளியில் மட்டுமே, அவர்களது கண்கள் திறந்து மூடும்.

பயண நேரம் என்றில்லை, வீடுகளிலும் அலுவலகங்களிலும் கூட இசைக்கென்று நேரம் ஒதுக்கும் பெண்களின் எண்ணிக்கை இன்று பெருகிவிட்டது.

தங்களையும் இந்த உலகத்தையும் மறக்கச் செய்யும் மாயாஜாலம் அதிலிருப்பதாக அவர்கள் உணரலாம்.

ரொம்பவும் நீட்டி முழக்க வேண்டாம். இசை ஒலிக்கும் ஏதேனும் ஒரு வீட்டை உற்றுக் கவனியுங்கள்.

அங்கு சண்டையோ, கூச்சலோ, குழப்பமோ குறைவாக இருக்கும். இது கற்பனையில் உதித்த கணிப்பு என்பவர்கள் உங்கள் வீடுகளில் இந்த நொடியில் இருந்து பரிட்சித்துப் பார்க்கலாம்.

எங்கும் நிறைந்திருக்கும் இசையின் மீது கூடுதலாக நம் கவனம் குவிய வேண்டுமென்ற நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 21ஆம் தேதியன்று ‘உலக இசை தினம்’ கொண்டாடப்படுகிறது.

இசைக்கும் இசைப்போருக்கும் அன்று மரியாதை செய்வது நம் கடமையாக உள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜேக் லேங் என்பவரே இந்த இசை தினத்திற்கு தொடக்கப்புள்ளி என்கின்றனர்.

இன்னொரு சாரார் ஜோயல் கோயன் என்பவரே இதற்குக் காரணம் என்கின்றனர். இருவரில் எவர் அதனைத் தொடங்கியிருந்தாலும், இசைக்கு மரியாதை செய்யும் அந்த எண்ணத்திற்குத் தலை வணங்க வேண்டும்.

இசைப்போமா, இசைவோமா?

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், எதிர்பாலினத்தவர் இசைக்கலையைச் சார்ந்திருந்தால் ஈர்ப்பு இன்னும் கூடுதலாகும்.

ஏதேனும் ஒரு விஷயத்தில் ஒன்றும்போது, நம் ஆன்மா பெருஞ்சிலிர்ப்போடு விஸ்வரூபம் பெறுமே? அது இசை எனும்போது இன்னும் எளிதாகிவிடுகிறது.

உள்ளிருக்கும் ஆர்வத்தைப் பொறுத்து, கிடைக்கும் சூழல்களையும் வாய்ப்புகளையும் பொறுத்து ஒருவர் தனக்கான இசையை இசைத்துப் பார்க்கலாம்.

முடியாதபோது இசையோடு இசைந்து போவதன் பக்கம் கவனத்தைத் திருப்பலாம்.

அதேநேரத்தில், அடுத்த தலைமுறையிடம் இசை குறித்த ஆர்வத்தை விதைப்பது இந்த விஷயத்தில் நல்லதொரு தீர்வாக இருக்கும். கருவில் இருக்கும்போதே அதனைத் தொடங்கினால் இன்னும் நல்லது.

ரொம்பவும் மெனக்கெட வேண்டாம். தாய் நல்ல இசையைக் கேட்டால், அது அப்படியே குழந்தைகளுக்கும் வாய்க்கும். இசையின் மீதான விருப்பத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.

பிடித்தமான இசையைக் கேட்டு வயிற்றிலிருக்கும் கரு உற்சாகம் கொள்ள ஆறேழு மாதங்களாவது ஆகும். அது போன்ற தருணங்களில், அக்கருவின் ஆடலே அந்த இசையை ஆமோதிக்கிறது என்பதனை உணர்த்தும்.

இசை என்பது நாளும் பொழுதும் நம்மோடு இருப்பது. திரையிசைதான் இன்று நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கிறது. அதில் தவறேதும் இல்லை.

கர்நாடக மற்றும் மேற்கத்திய இசை வடிவங்கள், நாட்டுப்புறப் பாடல்கள், பக்திப் பாமாலைகள் என்று பல விதங்களில் இசை நம்மை ஆற்றுப்படுத்துகிறது. அவரவர் விருப்பங்களுக்கேற்ப இசையைக் கேட்கலாம்; ரசிக்கலாம். இதில் உயர்வு, தாழ்வு பாராட்ட எதுவுமில்லை.

ஏனென்றால், இசை என்பது இயற்கையாக விளைவது. காட்டு மூங்கிலில் வண்டுகள் இட்ட துளைக்குள் காற்று புகும்போது எழும் ஒலியை எவரால் குறைத்து மதிப்பிட முடியும்?

அப்படிப் பார்த்தால், இந்த உலகில் எத்தனையோ இசைத்துணுக்குகள் பல ஆயிரம் ஆண்டுகளாக நிறைந்து கிடக்கின்றன.

இசைக்கலைஞர்கள் அவற்றைத் தேடி எடுத்துத் தருபவர்கள் தான். ரசிகர்கள் என்பவர்கள் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்பவர்கள்.

அள்ளி அள்ளிக் கொடுத்தும் தீராமல், பருகப் பருக தாகம் குறையாமல் பார்த்துக் கொள்கிற இந்த இசையை புவியை இயங்கச் செய்யும் ஆதி அமுதம் எனலாமா?

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment