ஆபாசமும், கொச்சையும் பொதுவெளிப் பேச்சில் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அது தொடர்பாக எழும் விவாதங்களைத் தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
தேசிய அளவில் மகளிர் உரிமை சார்ந்த பொறுப்பில் இருக்கிறவரான குஷ்பு பற்றி தி.மு.க.வின் பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய கொச்சையான பேச்சுக்குப் பலத்த கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார் குஷ்பு.
இதன் பலனாக தி.மு.க.வை விட்டு நீக்கப்பட்டிருக்கிறார் அந்தப் பேச்சாளர். இது தி.மு.க.வுக்கு மட்டும் பொருந்தக் கூடிய குற்றச்சாட்டு அல்ல. பொதுவுடமைக் கட்சியைப் போல ஒரு சில கட்சிகளைத் தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள பல அரசியல் கட்சிகளுக்கும் இந்தக் குற்றச்சாட்டு பொருந்தும்.
இதில் மாநிலக் கட்சிகள், தேசியக் கட்சிகள் என்கிற பாகுபாடெல்லாம் இல்லை.
வெற்றி கொண்டான், தீப்பொறி ஆறுமுகம் போன்று இம்மாதிரிப் பேச்சுகளுக்கென்றே பெயர் போன பேச்சாளர்கள் இருந்திருக்கிறார்கள்.
அவர்களுடைய கூட்டத்திற்குப் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவதும் தமிழ்நாட்டில் சாதாரணமான ஒன்றாகவே இருந்திருக்கிறது.
கட்சியில் மூன்றாம் கட்டத்தில் இருப்பவர்கள் எல்லாம் இப்படிப் பேசுவார்கள் என்கிற எண்ணத்தைத் தகர்க்கிற விதத்தில் இப்போது கட்சியில் உயர் பொறுப்பில் இருப்பவர்களே மிக்க் கொச்சையாகப் பேசுகிறார்கள்.
பிறகு சாவகாசமாக அதற்கு வருத்தம் தெரிவிக்கிறார்கள். சிலர் அதைக் கூடச் செய்வதில்லை.
கடந்த தேர்தலின்போது மக்களைப் பார்த்துப் பணிந்து கும்பிடு போட்டு வாக்குக் கேட்ட அதே அரசியல்வாதிகள் தான் மக்களின் வாக்குகளால் அமைச்சரான பிறகு அதே மக்களைத் தூரத்தில் நிறுத்தி அதிகாரத் தொனியில் பேசுகிறார்கள்.
நன்கு படித்த அமைச்சர்களும் கூட இப்படிப் பேசுகிறார்கள். இந்த நிலைமை உணர்த்துவது ஒன்றைத் தான்.
அதிகாரத்திற்குப் போய் அமர்கிறவர்களில் பெரும்பாலானவர்கள் பெரும் நிலச்சுவான்தார் மாதிரியே நடந்து கொள்கிறார்கள். அவர்களுடைய மனங்களில் கெட்டி தட்டிப் போயிருக்கிறது நிலபிரபுத்துவ எச்சம்.
ஏற்கனவே பதற்றங்கள் தொற்றுவியாதியைப் போல பரவும் சூழலுக்கு இடையில் மேலும் பதற்றத்தை உருவாக்குகின்றன இத்தகைய தூண்டுதலான பேச்சுகள்.
அப்படிப் பேசுகிறவர்கள் யாராக இருக்கட்டும், எந்தப் பொறுப்பிலும் இருக்கிறவர் ஆகட்டும். அவர்களுடைய பேச்சு எந்தக் கலவரத்தையும், வீண் பதற்றத்தையும் உருவாக்க வழிவகுத்துவிடக் கூடாது.
சாதி, மதம், அரசியலின் பெயரால் – யாரும் வேறு யாரையும் சீண்டுகிற வேலைகளில் இந்தச் சந்தர்ப்பங்களில் இறங்குவது ஆரோக்கியமானது அல்ல.
அதிலும் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டிய நேரமிது. எந்த மதம் சார்ந்தவர்கள் மீதும் வெறுப்பை விதைக்க அனுமதிக்கக் கூடாது.
நம் மக்களிடம் இயல்பாக இருக்கிற மதம் கடந்த நேசத்தைச் சிலர் திட்டமிட்டு பிளவு ஏற்படுத்த அனுமதிக்கக் கூடாது.
அதனால் தான் திரும்பவும் சொல்ல வேண்டியிருக்கிறது – யாராக இருந்தாலும் பொதுவெளியில் ‘நா’ காக்க! இல்லை என்றால் இழுக்குப்படுவது அவர்கள் மட்டுமல்ல, அவர்கள் சார்ந்திருக்கிற இயக்கங்களும் தான் என்பதை மறக்கக் கூடாது.