பெரிய வெற்றிகள், பெரிய இடைவெளிகள் என்று எதனை எதிர்கொண்டாலும் சீர்மையுடனும் நிதானத்துடனும் பயணிப்பது ஒருவகை வரம் தான். ஏனென்றால் அதீத எதிர்பார்ப்பே சில நேரங்களில் நம் பணியின் மீது சுமையை ஏற்றிவிடும்.
திரைத்துறையில் வெற்றியாளராகத் திகழ்ந்துவரும் ஜெயம் ரவி அப்படியொரு வரம் பெற்றவர்.
அதேநேரத்தில், சமகால நட்சத்திரங்களைப் போல பிரமாண்டமாகக் கொண்டாடப்படாமல் இருப்பதற்கு அதுவே காரணம் என்ற எதிர்மறை விமர்சனங்களும் கூட உண்டு.
அது அவரிடத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று கூடத் தெரியாது. ஏனென்றால், அவற்றை அறிய முடியாத அளவுக்குப் பொதுவெளியில் அவரது இருப்பு இருந்து வருகிறது.
ரவி திரையில் நாயகனாக அறிமுகமாகி இன்றோடு 21 ஆண்டுகள் முடிவடைந்திருக்கின்றன.
நாயகன் உருவாகிறான்!
‘தாவணிக் கனவுகள்’ படத்தில் இடம்பெற்ற ‘ஒரு நாயகன் உருவாகிறான்’ என்ற பாடல் போல எந்தவொரு நபரும் திரையில் கால் பதித்திட முடியாது.
கேமிரா முன் தோன்றுவதற்கு முன்பாக, எப்படி நம்மை மக்கள் எதிர்கொள்ளப் போகின்றனர் என்ற சிந்தனையுடன் ஒருவர் தன்னைத்தானே புடம் போட்டுக்கொள்ள வேண்டும்.
ஒரு திரைப்படத்தில் நடிக்க என்னென்ன தேவையோ, அதையெல்லாம் தேடித் தேடிக் கற்றுக்கொள்ள வேண்டும்.
அப்படி நடனம், சண்டைப் பயிற்சி, நடிப்பு என்று ஒவ்வொன்றையும் படிப்படியாகத் தெரிந்து கொண்டவர் ரவி.
அத்தனையும் வெறுமனே கற்றல் என்றளவில் இருந்துவிடக் கூடாது என்று ‘ஸ்பாட்’ அனுபவம் பெறுவதற்காக ‘ஆளவந்தான்’ படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்ததும் உண்டு.
மேற்சொன்ன எல்லாவற்றையும் செய்துவிட்டுத்தான் ஒருவர் ஹீரோ ஆக வேண்டுமென்பதில்லை. ஆனால் இந்தித் திரையுலகில் அமீர்கான், ஹ்ரித்திக் ரோஷன் போன்றவர்கள் இந்த முறையை அச்சுப் பிசகாமல் பின்பற்றியவர்கள் தான்.
தான் கற்றுக் கொண்டதும் திரைத்துறை இயங்கும் விதமும் எந்த அளவுக்கு நேர்க்கோட்டில் பொருந்துகிறது என்பதைச் சம்பந்தப்பட்டவர் அறிந்துகொள்வதற்கான வழி அது.
எல்லாவற்றுக்கும் மேலாகத் தந்தையே திரைத்துறையில் இருந்த காரணத்தால் பிராக்டிகலாக என்னென்ன பிரச்சனைகள் எல்லாம் வரும் என்பதை நன்கறிந்தவர் ரவி.
உழைப்பும் விடாமுயற்சியும் பொறுமையும் மட்டுமே ஒரு நடிகனுக்குத் தேவை என்ற பாலபாடம் அவருக்குத் தொடர்ந்து போதிக்கப்பட்டது. அதனாலேயே ரவியை நடிகனாக்க வேண்டுமென்ற அவரது தந்தை எடிட்டர் மோகனின் முடிவுக்கு முதல் படத்திலேயே நல்ல பலன் கிடைத்தது.
ஜெயம் தந்த அனுபவம்!
நன்கு நினைவிருக்கிறது. நடிகர் நடிகைகள் முகங்கள் இல்லாமல் வெறுமனே ஒரு அறிவிப்பு போல வெளியானது ‘ஜெயம்’ பட போஸ்டர்.
அதுவொரு அமெச்சூர் முயற்சி என்பதாக அப்போது தெரிந்தது.
ஆனால், ஒரு புதுமுகத்தை மக்களிடம் கொண்டுசேர்க்க அதுவே நல்ல உத்தி என்று பின்பு புரிந்தது.
ஏனென்றால் பள்ளி, கல்லூரி விடுமுறைக் காலத்தில் அந்த போஸ்டர் வெளியானது.
அந்த போஸ்டரை கடந்து வந்த மக்கள், தியேட்டரில் ‘போய்ய்யா.. போ..’ என்று சதா வெட்கத்துடன் ஆத்திரப்பட்டதைக் கண்டு கிறுகிறுத்துப் போய்விட்டனர்.
அதுவரை சார்லி, தாமு, விவேக் போன்றவர்களே நாயகர்களின் குழுவில் இடம்பெற்ற வழக்கத்தை மாற்றி சுமன் ஷெட்டி உட்பட சில பொடியன்களோடு சுற்றித் திரிந்தார் ரவி.
அதுவே, அப்படம் பதின்பருவத்தினரின் காதல் வாழ்வைப் பேசுவதற்கு நியாயம் சேர்த்தது.
ரமேஷ் கன்னா, செந்தில் போன்றவர்களை சீரியசாக நடிக்க வைத்திருந்தார் மோகன் ராஜா.
தெலுங்குப் படத்தின் ரீமேக் என்று அடையாளம் காணும்விதமாக ஷகீலாவின் காட்சிகள் இருந்தன.
ராஜீவ், ராதாரவி, நிழல்கள் ரவி, இளவரசு, நளினி, பிரகதி போன்ற குணசித்திர நடிகர் நடிகைகளை மீறி தனது வில்லத்தனத்தால் மிரட்டியிருந்தார் கோபிசந்த்.
நாயகனாக நடித்து பெரிய வரவேற்பைப் பெற முடியாத சூழலில் அவர் வில்லனாகத் தோன்றிய படம் அது.
பல காட்சிகள் செங்கோட்டை, திருநெல்வேலி அருகே படமாக்கப்பட்டன.
அனைத்துக்கும் மேலாக ரத்னவேலுவின் ஒளிப்பதிவும், ஆர்.பி.பட்நாயக்கின் பாடல்களும் சேர்ந்து ‘ஜெயம்’ படத்தின் மீது திருவிழா சாயத்தைப் பூசின.
ரவியின் பாத்திரம் கூட நகைச்சுவை, ஆக்ஷன், சென்டிமெண்ட் என்று பல உணர்வுகளை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டிருந்தது.
எல்லாம் ஒன்றுசேர்ந்து ஒரு எதிரபாராத விருந்தை ரசிகர்களுக்குத் தந்தது. அதனாலேயே, வழக்கமான தெலுங்கு ரீமேக் என்றிருந்த திரைத்துறை விற்பன்னர்களும் கூட ‘ஜெயம்’ வெற்றியைக் கண்டு மிரண்டுவிட்டனர்.
ரவியின் பெருந்தன்மை!
‘ஜெயம்’ மாபெரும் வெற்றிக்குப் பிறகும் உடனடியாக எந்தப் படத்திலும் ரவி நடிக்கவில்லை. மீண்டும் தந்தையின் தயாரிப்பில், சகோதரரின் இயக்கத்தில் ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படத்தில்தான் கவனம் செலுத்தினார்.
தாஸ், மழை, இதயத் திருடன் போன்றவை போதிய வரவேற்பைப் பெறாதபோது உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் என்று தொடர்ந்து வெற்றிப் படங்களைத் தமிழில் பிரதியெடுத்தது ரவியின் குடும்பம்.
அந்தக் காரணத்தாலேயே ‘ரீமேக் நாயகன்’ என்று கூட அவருக்கு அடைமொழி தரப்பட்டது.
அந்தப் படங்களில் வேறு நாயகர்களின் நடிப்பைப் பார்த்து தன்னைத் திரையில் வெளிப்படுத்திக் கொண்டார் ரவி. அதில் அவருக்கு வருத்தம் ஏதுமில்லை.
சித்தார்த்தின் ‘காதலில் சொதப்புவது எப்படி’ பட புரோமோஷன்களின்போது அதனை வெளிப்படையாகவே பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
நுவ்வொஸ்தானேண்டே நாவொத்தண்டேனா, பொம்மரிலு படங்களில் இருந்த சித்தார்த்தின் நடிப்பைத் தான் அப்படியே பின்பற்றியதாகச் சொன்னபோது சித்தார்த் விழிகள் விரித்து வியந்தார்.
இப்படியான பாராட்டுகள் தன்னம்பிக்கைக் குறைவுள்ள ஒருவரிடமிருந்தோ, மிகையான ஈகோவை சுமப்பவரிடமிருந்தோ நிச்சயம் வெளிப்படாது. அந்த பெருந்தன்மையை அரிதாகவே திரைத்துறையில் உணர முடியும்.
2009ல் வெளியான ‘பேராண்மை’க்குப் பிறகு, தனது படங்களின் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் பெரும் மாற்றத்தைக் கைக்கொண்டார் ஜெயம் ரவி.
ஒரு சாதாரண மனிதனின் கோபமும் ஆற்றாமையும் சொல்லவியலா வேதனைகளும் அப்படங்களில் நிறைந்திருந்தன.
தில்லாலங்கடி, நிமிர்ந்து நில், தனி ஒருவன், பூலோகம், அடங்க மறு, கோமாளி என்று அந்த வரிசை நீண்டது.
அவற்றில் சில படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஆனாலும் அப்படிப்பட்ட கதைகளை அடையாளம் காண்பதில் அவர் சுணங்கவில்லை. சமீபத்தில் வந்த ‘அகிலன்’ கூட அதில் அடங்கும்.
காட்சிகளின் தன்மைக்கேற்ப நடிப்புத் திறமையைக் கொட்டுவது ஒருபுறம் என்றால், படம் முழுக்க ஒரு பாத்திரம் உண்மையாக வாழ்வது போன்ற உணர்வைப் பார்வையாளர்களிடம் உருவாக்குவது இன்னொரு வகையான திறமை. ஜெயம் ரவியிடம் அத்திறமை அதிகம்.
‘கோமாளி’, ‘தனி ஒருவன்’ போன்ற படங்கள் ‘எவர்க்ரீன் பேவரைட்’ லிஸ்டில் இடம்பெறவும் அதுவே காரணம். ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வெளிப்பட்ட கம்பீரம், அவர் மீதான எதிர்மறை விமர்சனங்களுக்கான பதிலடி.
‘ஜெயம்’ படத்தில் நடித்ததை வைத்துப் பார்த்தால், ரவியின் நடிப்பு வாழ்க்கைக்கு வயது 21. ஆனால், இதுவரை 28 படங்களில் மட்டுமே அவர் நடித்திருக்கிறார் ரவி (குழந்தை நட்சத்திரமாக நடித்தவை, கௌரவமாகத் தலைகாட்டியவை தவிர்த்த எண்ணிக்கை இது).
அதாகப்பட்டது, ஆண்டுக்கு இரண்டு என்ற அளவில் கூட அவர் தன் படங்களின் எண்ணிக்கையை வகுத்துக்கொள்ளவில்லை.
அவரது தனிப்பட்ட ரசிகர்களுக்கு வருத்தம் தரும் விஷயம் அது.
அதேநேரத்தில், வெற்றியையும் திருப்தியையும் தரும் படங்களுக்காகக் காத்திருக்கும் அவரது விருப்பத்தைப் புறந்தள்ளக் கூடாது.
தோல்விப் படங்களாக இருந்தாலும் கூட, அவற்றில் ரவியின் பங்களிப்பு குறைவாக இருக்காது. தான் பார்க்கும் பணியில் நூறு சதவீதம் முழுமையாக ஈடுபட வேண்டும் என்ற பாடம் அதில் உண்டு.
ஆனால், அவர் படம் வெற்றி என்று தெரிந்தால் குடும்பங்கள் தியேட்டர்களுக்கு படையெடுக்கும்.
அதனாலேயே, குடும்பத்தோடு பார்ப்பதில் அசூயை ஏற்படுத்தாத திரைக்கதைகளாகத் தேடித் தேடி நடிக்க வேண்டியிருக்கிறது.
இந்த பொறுப்புணர்வு, திரையில் புத்திமதி சொல்வதற்கு இணையான வரவேற்பைப் பெற வேண்டியது. இது போன்ற கட்டுப்பாடுகளை மீறித்தான் ரவி சாதிக்க வேண்டியிருக்கிறது.
வாழ்த்துகள் ரவி, இனிவரும் நாட்களிலும் உங்களோடு ‘ஜெயம்’ ஒட்டியிருக்கட்டும்!