ஆதிபுருஷ் – கிராபிக் நாவல் பாதிப்புகள்!

ராமாயணம், மகாபாரதம் கதைகளை இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாட்டினரும் கூட திரைப்படமாக, தொலைக்காட்சித் தொடராக உருவாக்கியுள்ளனர்.

தங்களுக்குப் பிடித்தமான வகையில் ராமனையும் சீதையையும் காட்சிப்படுத்தியிருந்தனர்.

தமிழிலும் ராமாயணம், சம்பூர்ண ராமாயணம் என்ற பெயரில் அக்கதை திரைப்படங்களாகியுள்ளன.

லவகுசா உட்படத் தெலுங்கில் இருந்து தமிழில் ‘டப்’ செய்யப்பட்ட படங்களையும் சேர்த்தால் அந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகும். அது போதாதென்று தூர்தர்ஷனில் தொடராகவும் வெளிவந்திருக்கிறது.

அதே ராமாயணத்தை விஎஃப்எக்ஸ் உதவியோடு இன்றைய தலைமுறையினருக்குப் பிடித்தமான வகையில் பேண்டஸியாக மாற்றினால் எப்படியிருக்கும் என்று யோசனையுடன் ‘ஆதிபுருஷ்’ தந்திருக்கிறார் இயக்குனர் ஓம் ரவுத்.

படம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடுகிறது. அதுவரை பொறுமையாக தியேட்டரில் உட்கார்ந்திருக்க முடிகிறதா?

கதையைச் சொல்ல வேண்டுமா?

ராமாயணக் கதையை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துச் சொல்லத் தெரியாவிட்டாலும், மேலோட்டமாக அது குறித்த தகவல்கள் நம்மில் பலருக்குத் தெரியும்.

அதனை மனதில் கொண்டே தசரதனின் குடும்பம், ராமனும் லட்சுமணனும் வளர்ந்தவிதம், சீதை உடனான ராமனின் திருமணம், 14 ஆண்டு கால வனவாசம் உள்ளிட்ட தகவல்கள் முன்கதையாகச் சொல்லப்படுகிறது.

ராவணன் சாகா வரம் வேண்டி பிரம்மனை நோக்கித் தவம் செய்யும் காட்சியில் இருந்து ‘ஆதிபுருஷ்’ திரைக்கதை தொடங்குகிறது.

அடுத்ததாக, காட்டில் வசிக்கும் சீதைக்குப் பாதுகாப்பு தரும் நோக்கோடு லட்சுமணன் சத்திய ரேகை வரைவது காட்டப்படுகிறது.

அப்போது மாயப்பிசாசுகள் அவர்களைத் தாக்க வர, ‘ராமன் எங்கிருக்கிறாரோ’ என்று சீதை கவலைப்பட, அதன் தொடர்ச்சியாக ராமனின் அறிமுகம் திரையில் நிகழ்கிறது.

நீருக்கடியில் ஆழத்தில் மூச்சைப் பிடித்துக்கொண்டு தவம் செய்யும் ராமன், ஆகாயத்தில் படையாக நிற்கும் மாயப்பிசாசுகளைக் கண்டு மேலே வருகிறார். அவற்றைத் தன் அம்புகளால் துடைத்தெறிகிறார்.

இந்தக் காட்சியைப் பார்த்தவுடன், ஒரு கிராபிக் நாவலைக் கையிலெடுத்து புரட்டிப் பார்த்த உணர்வு நிச்சயம் ஏற்படும்.

அதன்பிறகும் தொடர்ந்து படத்தைப் பார்க்க முடிவெடுத்தால், ராமாயணத்தை கிராபிக் நாவலாக மாற்ற உத்தேசித்த இயக்குனரின் பார்வையை ஆதரிப்பதாக அர்த்தம்.

படத்தில் ராமாயணக் கதையையோ, அதிலுள்ள காட்சிகளையோ மாற்றவில்லை. மாறாக, அதில் இடம்பெறும் வனத்தையும் மலையையும் ஆற்றையும் கடலையும் இலங்கைப் பேரரசையும் வேறொன்றாக மாற்றியிருக்கிறார். கூடவே ராவணனைப் பேரசுரனாகக் காட்டியிருக்கிறார்.

மாயமானை ராமன் துரத்திச் சென்றபின்னர், சீதையைக் கவர்ந்து செல்கிறார் ராவணன்.

அதற்கு மூக்கறுபட்ட சூர்ப்பனகையின் சூழ்ச்சி காரணமாக இருக்கிறது.

இதெல்லாம் விதியின் வழி நடக்கிறது என்றிருக்கும் ராமன் எப்படி இலங்கை சென்று சீதையை மீட்டு வருகிறார் என்பதோடு படம் முடிவடைகிறது.

இதற்கு மேலும் இந்தக் கதையை விரிவாகச் சொல்ல வேண்டுமா எனும் தொனியிலேயே, காட்சிக்கு விருந்தாகும் நிகழ்வுகளை மட்டும் திரையில் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

அதனால், இதுவரை ராமாயணக் கதைகளில் எந்தக் காட்சிகளை எல்லாம் திரையில் குறைவாகப் பார்த்தோமோ அவையெல்லாம் இதில் மிக விரிவாக இடம்பெற்றுள்ளன.

எங்கும் விஎஃப்எக்ஸ் மயம்!

சில மாதங்களுக்கு முன் ஆதிபுருஷ் டீசர் வந்தபோது, சமூகவலைதளங்களில் ஒரே கிண்டல்மயம். ஆனால், திரைப்படத்தைப் பார்க்கையில் நிலைமை அந்த அளவுக்கு மோசமில்லை.

ஓரளவுக்கு நேர்த்தியாகவே விஎஃப்எக்ஸ் குழுவினரின் உழைப்பு அமைந்துள்ளது. என்ன, பல இடங்களில் இருண்மையை நிரப்பி இக்கட்டில் இருந்து தப்பித்திருக்கின்றனர்.

அதேநேரத்தில் அவதார், ஸ்டார்வார்ஸ் உள்ளிட்ட சில படங்களின் பாதிப்போடு இந்தியாவின் ‘மார்வெல் ஹீரோ’ ரேஞ்சுக்கு ராமனைக் காட்ட முயன்றிருப்பதுதான் நம்மைக் கொஞ்சம் சோதனைக்கு உள்ளாகியிருக்கிறது.

விஎஃப்எக்ஸ் மயம் என்று சொல்லும் அளவுக்குத் திரையில் அதன் பங்கு நிறைந்திருக்கிறது. அதற்காக, பிரபாஸை ஆஜானுபாகுவான தோற்றத்தில் காட்டவும் அதனைப் பயன்படுத்த வேண்டுமா என்ன?

இன்றைய தலைமுறையினரைக் கவரும் வகையில் விஎஃப்எக்ஸ் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறதோ, அதற்கிணையாகப் படத்தின் பின்னணி இசையும் இன்றைய ஆக்‌ஷன் படங்களுக்குச் சவால்விடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு புராணக் கதையைத் திரையில் பார்க்கிறோம் என்ற மெல்லுணர்வைப் படரவிடாமல் அழுத்தித் தரையில் புதைக்கும் வேலையை அது ரொம்பவே இலகுவாகச் செய்துவிடுகிறது.

அதற்கான கிரெடிட் பின்னணி இசை தந்திருக்கும் சஞ்சித் மற்றும் அங்கித் பல்காரா இணைக்குச் சென்று சேர வேண்டும்.

அஜய் – அதுல் இணை மற்றும் சஜ்ஜட் – பரம்பரா தந்திருக்கும் ஐந்து பாடல்களும் திரையில் படம் ஓடும் நேரத்தை அதிகப்படுத்தியிருக்கின்றன.

இவற்றில் ‘சிவோகம்’ பாடலுக்குத் திரைக்கதையில் பெரிதாக வேலையில்லை.

கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவில் ராமனும் சீதையும் பளிச்சென்று தெரிகின்றனர்.

பல இடங்களில் க்ரீன்மேட்டை பயன்படுத்தி இருப்பதால், காட்சிகளின் பின்புலத்தை அறிந்தே ஒவ்வொரு பிரேமையும் அவர் செதுக்கியிருக்கிறார். அந்த வகையில் ராவணனைக் காட்டுமிடங்கள் அற்புதமாக உள்ளன.

அபூர்வா மோதிவாலா, ஆசிஷ் மாத்ரே இணையின் படத்தொகுப்பு நம் பொறுமையை ரொம்பவே சோதித்திருக்கிறது.

சில காட்சிகள் ரொம்பவே நீண்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். குறிப்பாக, பின்பாதியில் பத்து பதினைந்து நிமிடங்கள் வரை குறைத்திருக்கலாம்.

பெரும்பாலான இடங்களில் விஎஃப்எக்ஸ் பங்கிருப்பதால், அதற்காக க்ரீன்மேட்டை தயார் செய்யும் முன்னேற்பாடுகளே கலை இயக்குனர் சாகர் மாலிக் குழுவினரின் பணி நேரத்தைக் கபளீகரம் செய்திருக்கும்.

தான் பார்த்த ஹாலிவுட் படங்கள், கிராபிக் நாவல்களின் தாக்கத்தில் திரையில் ராமாயணத்தைச் சொன்னால் என்னவென்று யோசித்திருக்கிறார் இயக்குனர் ஓம் ரவுத்.

ஆனால், ஒரு படத்தைப் பார்க்க விஎஃப்எக்ஸ் உருவாக்கும் பிரமாண்டம் மட்டுமே போதாது என்று அவருக்குத் தெரியவில்லை.

மிக முக்கியமாக, இதுநாள்வரை ராமாயணக் கதைகளைத் திரையில் பார்ப்பதில் ஆர்வம் காட்டும் பெரியோர்களுக்குத் தனது முடிவு உவப்பைத் தருமா என்று அவர் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. ஒரு இயக்குனராக அவர் சரிவைச் சந்திக்கும் இடம் அதுவே.

உருட்டுக்கட்டை உடல்வாகு!

பப்களில் இருக்கும் பவுன்சர்கள் போல திரையை ஆக்கிரமித்து நிற்கிறார் பிரபாஸ்.

ராமன் என்றால் அழகு, நளினம் மட்டுமல்லாமல் மென்மை மிளிரும் ஆண்மையும் கூட என்று இதுவரை உருவாக்கி வைத்திருந்த கற்பிதத்தைச் சுக்குநூறாக உடைத்திருக்கிறார்.

திரையில் தான் வந்து நிற்பதே பிரமாண்டமாக இருக்க வேண்டுமென்பதில் மட்டும் மெனக்கெட்டிருக்கிறார். விளைவு, உருட்டுக்கட்டை உடல்வாகுடன் திரையில் தோன்றியிருக்கிறார்.

அதைப் பார்த்தபின்னர் ‘பிரபாஸுக்கு வயசாகிவிட்டதோ’ என்ற சந்தேகம் மட்டுமே மண்டையில் நிறைகிறது.

ஒரு அழகரசியாகத் தெரிய தன்னால் இயன்றதைச் செய்திருக்கிறார் கீர்த்தி சனோன். திரையில் அதற்குப் பலனும் கிடைத்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் காட்சிகளுக்கேற்ப சிறப்பாக நடிக்கவும் செய்திருக்கிறார்.

இறுகிப் போன பாறையாக உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் சையீப் அலிகானை இதில் மேலும் முரட்டுத்தனம் மிக்கவராகக் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

அவரும் கேமிராவை நோக்கி ஆக்ரோஷத்தை கக்கிக் கொடுத்த காசுக்கு நடித்திருக்கிறார்.

லட்சுமணனாக வரும் சன்னி சிங், அனுமனாக வரும் தேவ்தத்தா நாகே இருவருமே பிரபாஸின் திரை பிம்பத்திற்கு முன் அடக்கி வாசிக்கப் பணிக்கப்பட்டிருக்கின்றனர்.

மண்டோதரியாக வரும் சோனால் சவுகானை விட சூர்ப்பனகையாக வரும் தேஜஸ்வினியும் விபீஷணன் மனைவியாக வரும் திருப்தி தோரட்மாலும் அதிக நேரம் திரையில் தோன்றியிருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் கவர்ச்சியாக உலா வந்திருக்கின்றனர்.

தமிழில் ராமன், சீதை, லட்சுமணன், ராவணன் என்றே ராமாயணப் பாத்திரங்களை நாம் கேட்டறிந்திருக்கிறோம்.

அவற்றின் இதர பெயர்களைக் கதாகாலட்சேபங்களிலோ, நூல்களிலோ, கட்டுரைகளிலோ நாம் எதிர்கொண்டிருப்போம்.

மாறாக, ‘ஆதிபுருஷ்’ படத்தில் அப்பெயர்கள் ராகவா, ஷேஷ், ஜானகி, லங்கேஷ் என்றே குறிப்பிடப்படுகின்றன.

ராமனை ராகவன், ராகவர் என்று சொல்வது போதாதென்று சில காட்சிகளில் ’ராகவ்’ என்று சுருக்கமாகக் குறிப்பிடுகின்றனர்.

அதைப் பார்க்கும்போது, இளைய தலைமுறையைக் கவர வேண்டுமென்ற உங்க அட்ராசிட்டிக்கு ஒரு எல்லையே கிடையாதா என்று கேள்வி கேட்கத் தோன்றுகிறது. இவ்வளவு ஏன், அனுமன் கூட பஜ்ரங் என்றே குறிப்பிடப்படுகிறார்.

படம் தெலுங்கிலும் இந்தியிலும் மட்டுமே ஆக்கப்பட்டுள்ளது. தமிழில் வெறுமனே டப் செய்யப்பட்டுள்ளது.

அதற்காக, ‘ரோலிங் டைட்டிலில்’ இல்லாவிட்டாலும், வசனங்களில் கூடவா இவற்றையெல்லாம் மாற்றியிருக்கக் கூடாது.

இந்தக் கேள்வியே இந்தப் படத்திற்கான பார்வையாளர்கள் யார் என்ற கேள்வியை எழுப்புகிறது.

காட்சிகளின் ஊடே ஆங்காங்கே ஒலிக்கும் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கம் அதற்கான பதிலாக இருக்கலாம்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இன்றைய தலைமுறைக்காக மீண்டும் ராமாயணத்தைத் திரையில் காட்டியிருக்கிறது ‘ஆதிபுருஷ்’.

ஆனால், இதுவரை அக்கதையைப் பெருந்திரையில் பார்க்க ஆர்வம் காட்டியவர்களை டீலில் விட்டிருக்கிறது.

– உதய் பாடகலிங்கம்

ஆதிபுருஷ்இயக்குனர் ஓம் ரவுத்மகாபாரதம்ராமாயணம்ராவணன்
Comments (0)
Add Comment