அரிசிக் கொம்பனுக்கு அப்படியென்ன ஈர்ப்பு அரிசி மீது?

யானைகளுக்கு 3 விதமான பருவங்கள் இருக்கின்றன. முதல் பத்தாண்டு பாலப்பருவம்.

பத்து வயது வரையுள்ள, குழந்தைப் பருவத்து குட்டி யானைகளுக்குத் தாய்ப்பால் மிகவும் அவசியம். பத்து வயதைத் தாண்டியபிறகும் தாய் யானையிடம் பால் குடிக்கும், குட்டி யானைகளும் உள்ளன.

பத்து வயதுக்குக் குறைவான ஒரு குட்டியானை, பாலியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் முதிர்ச்சியடையாத ஒன்று.

பத்து வயது முதல் 20 வயதுள்ள குட்டி யானை, பாலியல் ரீதியாக முதிர்ச்சி அடைந்த, ஆனால், சமூக ரீதியாக முதிர்ச்சி பெறாத ஒன்று. 20 வயதுக்கு மேற்பட்ட யானைகளே வளர்ந்த, பெரிய, முதிர்ந்த யானைகள்.

யானைகளுக்கு, குறிப்பாக ஆண் யானைகளுக்கு, அவை வளரும் காலத்தில் புரொட்டீன், கால்சியம், சோடியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகம் தேவை.

காட்டுயானைகள் நெல்லிக்காய்கள், மரப்பட்டைகளில் இருந்து கால்சியம் என்ற சுண்ணாம்புச் சத்தைப் பெறுகின்றன.

புளி, விளாம்பழங்களில் இருந்து யானைகளுக்குப் புளிப்புச் சத்து கிடைக்கிறது.

சோடியம், கனிமச்சத்துகளுக்காக உப்புமண்ணை வாயில் அதக்கிக் கொண்டு யானை அந்த சத்துக்களைப் பெற்றுவிடும். நார்ச்சத்துக்கு மூங்கில், காட்டு வாழை போன்றவை இருக்கின்றன.

இருந்தாலும், வளரும் ஆண் யானைகளுக்கு இவை போதாது. காட்டில் வளரும் புற்களைவிட மனிதர்கள் பயிரிடும், நெல், வரகு, சாமை, தினையில் புரொட்டீன், கால்சியம், சோடியம் போன்றவை அதிகம்.

அதனால்தான், வளரும் யானைகளும், ஏன்? சிலவேளைகளில் வளர்ந்த யானைகளும் கூட பயிர்களை மேய்கின்றன.

‘இரவுப்புனம் மேய்ந்த உரவுச்சின வேழம்’ ஆகின்றன.

பயிரிடாப் பயிரினத்தை விட்டுவிட்டு, பயிரிடப்பட்ட பயிரினத்தின் மீது யானைகள் பார்வையைத் திருப்புகின்றன.

ரிசிக்கொம்பன், 1987ஆம் ஆண்டு மூணாறு பகுதியில் பிறந்திருக்கிறான். இப்போது அவனுக்கு வயது 36. வாழ்வின் மூன்றாவது கட்டத்தில் அரிசிக்கொம்பன் இருக்கிறான்.

இருந்தும், இளம் வயது புரொட்டீன், கால்சியம், சோடியம், பொட்டாசியம் ஆசை அவனை விட்டுப்போகவில்லை போலிருக்கிறது. அரிசியின் மீது அவனுக்கு அலாதி பிரியம் இருப்பதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்.

இத்தனைக்கும் 100 கிராம் அரிசியில் 35 விழுக்காடு பொட்டாசியம் உள்ளது. மற்ற சத்துக்கள் அதைவிட குறைவுதான்.

மனித நாக்குகளில் சுவை மொட்டுகள் உள்ளன. சின்ன வயதில் நமது அன்னை என்னென்ன உணவுகளை வழங்கி நம்மைப் பழக்குகிறாரோ, அந்தந்த உணவுகளின் ருசி, நமது நாக்கில் ஒட்டிக் கொள்ளும். அதுவே நமது பிற்கால உணவுப்பழக்கத்தை முடிவு செய்யும்.

அரிசிக் கொம்பனுக்கும் அதேப்போல அரிசியின் சுவை ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும்.

‘ஏண்டா? இந்த வயசில் இன்னுமாடா குச்சி மிட்டாய், குருவி ரொட்டி எல்லாம் திங்கிறே?’ன்னு ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு கேட்பார் இல்லையா? அதுபோல, அரிசிக் கொம்பனிடம் கேட்டால், ‘என்ன பண்ணுறது அண்ணே? பழகிருச்சு. இந்த அரிசி திங்கிற பழக்கத்தை விட முடியலை’ன்னு அரிசிக்கொம்பன் ஒருவேளை சொல்லலாம்.

யானைகள் மிகநுண்ணிய உணர்வுள்ள காட்டுயிர்கள். அரிசிக்கொம்பன் சிறுவயதிலேயே தாயை இழந்தவன். ஆகவே, மறைந்த அன்னையின் நினைவாகக்கூட இந்த அரிசிப்பழக்கம் ஒருவேளை அவனிடம் ஒட்டிக் கொண்டிருக்கலாம்.

அதை அவனால் விட முடியாமல் இருக்கலாம். யானைகள் மிக அறிவுள்ள விலங்குகள். நோயுற்றால் என்ன வகை உணவை உண்ண வேண்டும் என்பது யானைக்குத் தெரியும்.

வாழைத்தண்டை நோயுள்ள யானைகள் தேடி உண்ணும். வாழைத்தண்டால் யானையின் மதம் நீங்கும் என்று சங்க காலப் பாடல் ஒன்று சொல்கிறது. இது யானைப் பாகர்களுக்கு மட்டுமல்ல, யானைகளுக்கும் கூட தெரிந்திருக்கலாம்.

அதேவேளையில், சிந்திக்கத் தெரிந்த மனிதகுலம் கூட, சிலவேளைகளில் மூடத்தனமாக நடந்து கொள்வதைப் போல, காட்டில் தவறுதலாக நச்சு தழைகளை மேய்ந்துவிட்டு இறந்து போகும் யானைகளும் உள்ளன.

அரிசிக்கொம்பன் அரிசியைத் தேடி ஊருக்குள் உலா வருவது கூட இது போன்ற செயல்தான்.

இப்போது அரிசிக்கொம்பனைப் பிடித்து, அவனுக்கு முன்பின் பழக்கமே இல்லாத புதிய காட்டுப் பகுதியில் அவனை விடுவித்திருக்கிறார்கள். காட்டுயிர்களை இப்படி முன்பின் தெரியாத காடுகளில் விட்டுவிடுவது சரியானதல்ல.

யானை, தான் ஏற்கெனவே வாழ்ந்த காடுகளில் உள்ள வலசைப் பாதைகள், நீர்நிலைகள், உணவு கிடைக்கும் இடங்களைத் தெரிந்து வைத்திருக்கும். புதிய காட்டுப்பகுதி ஒன்றில் விட்டால் அது என்ன செய்யும்?

என்றாலும்கூட, அரிசிக்கொம்பன், கோதையாறு மேலணை, களக்காடு முண்டன்துறை பகுதிகளில், இயற்கையோடு இயைந்து, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவான் என்று நம்புவோம். வேறு என்ன செய்வது? நம்பிக்கைத்தானே வாழ்க்கை?

– நன்றி : மோகன ரூபன் முகநூல் பதிவு

Comments (0)
Add Comment