– முனைவர் துரை. ரவிக்குமார். எம்.பி
நான் சிறுவனாக இருந்தபோது அப்பா புகையிலைப் பயிரிட்டு அதைப் பாடம் செய்து சந்தைக்குக் கொண்டுசென்று விற்றுவருவார். புகையிலையை வாங்கி விற்கும் சிறு வியாபாரியாகவும் இருந்தார்.
காளை மாடுகள் பூட்டிய வண்டியில் புகையிலையை ஏற்றிக்கொண்டு தொலைதூர சந்தைகளுக்கு இரவுகளில் பயணம் போவார். ஏழெட்டு வண்டிகள் ஒன்றாகச் சேர்ந்து போவார்களாம்.
அப்போது வழியில் மறித்த பேய்களைப் பற்றியும் அவற்றை ஏமாற்றி பயணத்தைத் தொடர்ந்ததையும் அவர் சொல்லும்போது அபாரமான ஒரு கதைசொல்லி அவருள் இருப்பது தெரியும்.
ஒன்றாம் வகுப்பு படிக்கும்போதே கடவுள் மறுப்பாளனாக மாற்றப்பட்டுவிட்ட எனக்கு அப்பா சொல்வதை நம்புவதா இல்லையா என்று குழப்பமாக இருக்கும்.
அப்பாவின் பேய்கள் பெரும்பாலும் பெண்கள்தான். சிவப்பு சேலை உடுத்தித் தலைவிரிகோலமாக சாலையை வழிமறித்து நெருப்பு கேட்கும். அப்போது பூ வாசம் திணறடிக்கும்.
முதல் வண்டியில் இருப்பவர் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவராக இருந்தால் ஒரு சுருட்டைப் பற்றவைத்துப் புகைக்க வேண்டும், அல்லது கையில் அரிவாளை இறுக்கிப் பிடித்துக்கொள்ளவேண்டும். அவரிடம் பேய் நெருங்காது.
சில சமயம் முதல் வண்டியில் இருப்பவரிடம் தீப்பெட்டி இருக்காது. பின்னால் இருக்கும் வண்டிகளில் ஏதோ ஒன்றில் இருக்கும் தீப்பெட்டியை வாங்கிக்கொண்டு முதல் வண்டிக்குக் கொண்டுபோகவேண்டும்.
தரையில் மட்டும் காலை வைத்துவிடக்கூடாது. வைத்தால் ஆள் காலி. புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாத அப்பா தீப்பெட்டியை வாங்கிக்கொண்டு வரிசையாக நிற்கும் வண்டிகளின்மீதே நடந்து முதல்வண்டிக்குப் போகும் வேலையை லாவகமாகச் செய்வாராம்.
துவக்கப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சிறுவனான எனக்கு அந்தக் கதைகளைக் கேட்பது சுவாரசியமாக இருந்தாலும் பேய் இருக்குமோ என்ற சந்தேகம் ஓரத்தில் பயமுறுத்திக்கொண்டே இருந்தது.
கடவுள் இருக்க நியாயமில்லை. ஆனால் செத்தவர்கள்தானே பேய்களாக அலைகிறார்கள் எனச் சொல்கிறார்கள். அது நிஜமாக இருக்குமோ என்று குழம்பியிருக்கிறேன்.
பேயை நம்பினால் கடவுளையும் நம்பித்தான் ஆகவேண்டும் என்பது பிறகுதான் புரிந்தது.
அப்பா பொறுப்பானவர், நேர்மையானவர், கண்டிப்பானவர், கடுமையான உழைப்பாளி. சாப்பிடும்போது திண்ணையில் யார் உட்கார்ந்திருந்தாலும் அவருக்கும் சாப்பாடு கொடுக்கவேண்டும். சாப்பாடு போதாவிட்டால் தனது தட்டில் போட்டதைப் பகிர்ந்து தரச்சொல்வார்.
சமத்துவத்துக்கான போராட்டங்களில் உறுதியாக இருந்தவர். சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு அவர் நடத்திய போராட்டத்தால்தான் இப்போது கொள்ளிடம் கடைவீதி வழியாக எங்கள் கிராமத்தின் சவத்தை எடுத்துச் செல்ல முடிகிறது.
எனது முதல் ஆதர்சம் என் அப்பாதான். இப்படி என் பிள்ளைகள் சொல்வார்களா எனத் தெரியவில்லை.