வெளிவராத எம்.ஜி.ஆர். படங்கள்!

கமல்ஹாசன், ராதா, ரேவதி நடிக்க பாரதிராஜா இயக்கிய படம் ‘ஒரு கைதியின் டைரி’.

இளையராஜா இசையில் உருவான “பொன்மானே சோகம் ஏனோ’’ எனும் தேன் சொட்டும் பாடல் ஊட்டியில் படமாக்கப்பட்டது. அப்போது முதலமைச்சராக இருந்த புரட்சித்தலைவர் ஊட்டியில் தங்கி இருந்தார்.

தமிழகம் கார்டனில் ஷுட்டிங் நடந்தது. தகவல் அறிந்து ஷுட்டிங் பார்க்க எம்.ஜி.ஆர். வந்து விட்டார். அன்றைய தினம் படக்குழுவினருக்கு மதிய விருந்தளித்து அசத்திவிட்டார் எம்.ஜி.ஆர்.

கிட்டத்தட்ட 100 பேருக்கு தடபுடல் விருந்து.

பாடல் காட்சியை பாரதிராஜா படம் பிடித்த ஸ்டெய்ல் மக்கள் திலகத்துக்கு மிகவும் பிடித்துப்போனது. அவர் வைக்கும் ஒவ்வொரு ஷாட்டையும் எம்.ஜி.ஆர் ரசித்தார்.

தனது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தில் பாரதிராஜாவை வைத்து படம் எடுக்க தீர்மானித்தார்.

சாப்பாடு முடிந்ததும் பாரதிராஜாவை அழைத்தார்.

“எனது எம்.ஜிஆர். பிக்சர்ஸில் ஒரு படம் பண்ணுங்க.. கமல் ஹீரோவாக நடிக்கட்டும், நான் முதலமைச்சராக இருப்பதால் முழு கவனம் செலுத்த இயலாது.

இது குறித்து மெட்ராஸ் வந்ததும் விரிவாக பேசலாம். ஷுட்டிங் முடிந்து மெட்ராஸ் வந்ததும் என்னை பாருங்க’’ என சொன்னார்.

பாரதிராஜாவுக்கு அளவில்லா மகிழ்ச்சி.

அதன்பின் எம்.ஜி.ஆருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அமெரிக்கா சென்றதால் அந்த புராஜெக்ட், பேச்சுவார்த்தையோடு நின்று போனது.

மறுபிறவி

எம்.ஜி.ஆரை வைத்து நிறைய வெற்றிப்படங்கள் கொடுத்தவர் சாண்டோ சின்னப்பத்தேவர்.

துப்பாக்கியால் சுடப்பட்டு எம்.ஜி.ஆர். மீண்டும் நடிக்க தொடங்கி இருந்த காலக்கட்டம்.

எம்.ஜி.ஆர் நடிக்க ‘மறுபிறவி’ எனும் பெயரில் படம் தயாரித்தார் தேவர். தேவரின் தம்பி திருமுகம் இயக்கினார்.

எம்.ஜி.ஆர். ஜெயலலிதா பங்கேற்ற பாடல் காட்சியுடன் வாகினி ஸ்டூடியோவில் படப்பிடிப்பு ஆரம்பமானது.

பிரபல நடன இயக்குநர் ஹீராலால் அந்த டூயட் பாடலுக்கு நடனம் அமைத்தார். அந்த படம், சில காரணங்களால் நின்று போனது.

பரமபிதா

அந்தக் காலத்தில் பிரபல தயாரிப்பாளராக விளங்கியவர் ஜி.என்.வேலுமணி. இவர் எம்.ஜி.ஆர். நடிக்க ‘பரமபிதா’ எனும் படத்தை ஆரம்பித்தார்.

சத்யா ஸ்டூடியோவில் முதல்நாள் ஷுட்டிங்.

இயேசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர். நடிக்கும் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியது.

அந்த ஸ்டில் அப்போது ரொம்பவும் பிரசித்தம். ஆனால் படம் பாதியிலேயே நின்று விட்டது.

உலகம் சுற்றும் வாலிபன் படத்தையடுத்து அவர் டைரக்ட் செய்வதாக இருந்த படம் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு. மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட  படம்.

சத்யா ஸ்டூடியோவில் எம்.ஜி.ஆரும், லதாவும் நீக்ரோ கெட்டப்பில் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது பக்கத்து தளத்தில் என்.டி.ராமராவ் ‘பல்லாண்டு வாழ்க’ தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

எம்.ஜி.ஆர். நடிக்கும்  தகவல் அறிந்து, அங்கு வந்த என்.டி.ஆர். நீக்ரோ கெட்டப்பில் இருந்த எம்.ஜி.ஆர். மற்றும் லதாவுடன் போட்டோ எடுத்துச் சென்றுள்ளார்.

தனிக்கட்சி ஆரம்பித்து எம்.ஜி.ஆர். தீவிர அரசியலில் இறங்கி விட்டதால் படம் ‘டிராப்’. இரண்டு நாட்கள் மட்டுமே இதன் ஷுட்டிங் நடந்துள்ளது.

இளையராஜா இசையில் எம்.ஜி.ஆர். நடிப்பதாக இருந்த படம் ‘உன்னை விட மாட்டேன்’.  பட பூஜையும் சிறப்பாக நடந்தது.

அப்போது எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தார். அவருக்கு இருந்த பணிச்சுமையால் அந்த படத்தை தொடர முடியவில்லை.

‘அடிமைப்பெண்’ படத்தில் எம்.ஜி.ஆருடன் முதலில் ஜெயலலிதா, சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா, வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோர் நடிப்பதாக இருந்தது.

3 ஆயிரம் அடி வரை படம் எடுக்கப்பட்ட  நிலையில், ஷுட்டிங்கை நிறுத்தி விட்டார் எம்.ஜி.ஆர்.

பிறகு கதையை மாற்றி ஜெயலலிதா மட்டும் கதாநாயகியாக  நடிக்க மீண்டும், ஷுட்டிங் நடந்தது. படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

– பி.எம்.எம்.

Comments (0)
Add Comment