இரு கழகங்களுக்கும் வந்த அதிரடி சோதனை!

தற்போது அரசியலில் புதிய திருப்பமாக ஒரே சமயத்தில் இரண்டு திராவிட இயக்கங்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து சில நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது பாஜக தலைமை.

முன்பு ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதே தமிழகத்திற்கு அப்போது வந்திருந்த பாஜக பிரமுகரான அமித்ஷா, “இந்தியாவிலேயே அதிக அளவில் ஊழல் நடந்த மாநிலமாக தமிழகம் தான் இருக்கிறது” என்று கூறியிருந்தார். அன்றைய செய்தித்தாள்களில் அது பெரிய அளவில் தலைப்புச் செய்திகளாக இடம் பெற்றன.

ஆனால், அப்படி வெளிப்படையான ஒரு ஊழல் குற்றச்சாட்டை அதிமுக மீது சுமத்திய பிறகும் அதே அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டது பாஜக.  இதற்கு முன்பு இது போன்ற பல நிகழ்வுகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்திருக்கின்றன.

தலைமைச் செயலகத்தில் ராம் மோகன் ராவ் அறையில் சோதனை நடந்தபோது பகிரங்கமாக அது சம்பந்தமான எதிர்ப்பு குரல் அதிமுக தரப்பில் இருந்து எழவில்லை. திமுக தான் அந்த சோதனைக்கு அப்போது எதிர்ப்பு தெரிவித்த கட்சியாக இருந்தது.

இப்படிப்பட்ட சூழலில் சமீபத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிரான ஒரு ஊழல் குற்றச்சாட்டுகள் அவருடைய வாட்ச் துவங்கி அவருடைய அன்றாட செலவுகள் வரையிலான ஒரு விவரங்கள் சர்ச்சைக்கு உள்ளாகி சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறி இருந்தது.

இதையடுத்து இதற்கு முன்பு சில திமுக அமைச்சர்கள் மீது சந்தேகத்தின் பேரில் அமலாக்கத்துறை சோதனைகளை நடத்தி இருந்தாலும் இதுவரை அந்த சோதனைகளின் விளைவாக கண்டெடுக்கப்பட்டவை எவை? எவ்வளவு மதிப்பிலான சொத்துக்கள் கைப்பற்றப்பட்டன என்பது பற்றி எல்லாம் எந்த விவரத்தையும் அமலாக்கத்துறையும் வெளியிடவில்லை, மத்திய அரசும் வெளியிடவில்லை.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாகவே கரூரிலும் கரூரைச் சுற்றியுள்ள பல கிராமங்களிலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வேண்டியவர்களின் வீடுகளில் அமலாக்க சோதனைகள் நடந்தன.

அப்போது சோதனையிட வந்த அதிகாரிகளை செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் தாக்கியதும் தாக்கப்பட்ட தாக்குதலுக்கு ஆளான அதிகாரிகள் காவல்துறையில் புகார் செய்ததும் அதையொட்டி சிலர் கைது செய்யப்பட்டதும் நடந்தது.

ஆனால் அதற்குப் பிறகு செந்தில் பாலாஜி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அண்மையில் மத்திய அமைச்சரான அமித்ஷா சென்னைக்கு வருவதற்கு முன்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கொடுத்த பேட்டி தற்போது புயலைக் கிளப்பி இருக்கிறது.

அந்த பேட்டியில் மறைந்த அதிமுக முதல்வரான ஜெயலலிதா மீது பகிரங்கமான ஒரு ஊழல் குற்றச்சாட்டை  உறுதிப்படுத்தி இருந்தார் அண்ணாமலை. இதையடுத்து இன்று அதிமுக தரப்பில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன.

அண்ணாமலை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்கின்ற கூக்குரல்கள் எழுந்தன. எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும் பாஜக தலைவரான அண்ணாமலையை கண்டிப்பதில் ஒன்றுபட்டார்கள். சசிகலாவும் தினகரனும் கூட ஒன்றுபட்டு கண்டித்தார்கள்.

ஆனாலும் அவர்கள் பாஜக தலைவரான அண்ணாமலைக்கு எதிரான எந்த போராட்டத்தையும் அறிவிக்கவில்லை.

இந்த சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கும்போதே மறுபடியும் செந்தில் பாலாஜியின் சென்னை வீட்டிலும்  தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் அமலாக்கத்துறை மறுபடியும் சோதனை நடத்தி இருக்கிறது

இதற்கு முன்பு தலைமைச் செயலகத்தில் சோதனை நடந்த போது அனுமதி வாங்காததைப் போலவே தற்போதைய சோதனையின்போதும் அமலாக்கத்துறை அனுமதி வாங்கவில்லை என்று புகார்கள் கூறியிருக்கிறது திமுக.

வழக்கம்போல ஆர்.எஸ்.பாரதி போன்றவர்கள் இதை பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை என்று உடனடியாக தொலைக்காட்சிகளில் கொந்தளித்தார்கள். திமுகவினரும் படு ஆவேசப்பட்டு பேசியிருக்கிறார்கள்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அமைச்சரான செந்தில் பாலாஜி, “நான் இதை சட்டப்படி எதிர்கொள்வேன்” என்று சொல்லி இருக்கிறார்.

அதன் பிறகு அவருடைய அவரை அமலாக்கத்துறை கைது செய்வதாக அறிவித்தது. இதை தொடர்ந்து நடந்த சில சம்பவங்கள் தான் வினோதமாக இருக்கின்றன.

திமுக தலைவரான கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்தபோது அவர்  முதுமையான நிலையில் இருந்தபோதும் கூட, உடலில் பல நோய்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தும் கூட அவர் தன்னை ஒரு நோயாளியாக காட்டிக் கொள்ளவில்லை. அதை எதிர்கொண்டார், சிறைக்கும் சென்றார். இது திமுகவின் தற்போதைய எதிர்வினை.

ஆனால் தற்போது திராவிட மாடல் என்று சொல்லப்படுகின்ற ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்கின்ற நிலையில், அதை தனக்கு எதிரான நடவடிக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று பகிரங்கமாக அறிவித்த செந்தில் பாலாஜி மறுநாள் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

அவரை பார்த்துவிட்டு வந்த அமைச்சர்கள் அவர் சுயநினைவு இன்றி இருப்பதாக பேட்டி கொடுக்கிறார்கள். அமைச்சர் உதயநிதியும் அதுபோன்று பேட்டி கொடுத்திருக்கிறார்.

அப்படி கொடுக்கப்பட்ட பேட்டிகள் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது அப்போதைய முன்னாள் அமைச்சர்கள் சொன்னதை நினைவுபடுத்தும் விதத்தில் இருக்கின்றன.

தற்போது அவருக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், ஆஞ்சியோ செய்யப்படுவதாகவும் அடுத்தடுத்து தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில் முன்ஜாமீனுக்கான ஒரு மனுவை நீதிமன்றத்தில்  போட்டிருக்கிறார் செந்தில் பாலாஜியின் மனைவி.

இந்தநிலையில் தலைமைச் செயலகத்தில் கூடிய அமைச்சரவை குழுவின் ஆலோசனை முடிவின்படி வருகின்ற 16-ம் தேதி கோயம்புத்தூரில் பாஜகவின் நடவடிக்கை எதிர்த்து ஒரு கண்டனக் கூட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

Comments (0)
Add Comment