மனம் கவர்ந்தவரின் சுயத்தை அழிப்பது!

காதல் என்பதைப் பற்றிக் கவிஞர் கண்ணதாசன் 60 வருடங்களுக்கு முன்பே மிக அழகாக, எளிமையாகத் திரைப்படப் பாடல் ஒன்றின் மூலம் சொல்லியிருக்கிறார்.

காதல் என்பது எதுவரை
கல்யாண காலம் வரும் வரை
கல்யாணம் என்பது எதுவரை
கழுத்தில் தாலி விழும் வரை
கண்ணுக்கு இனிமை எது வரை
கையில் கிடைக்கும் நாள் வரை
பொதுவாகப் பார்த்தால், அடிப்படையில் இனக் கவர்ச்சி, அதனால் ஏற்படும் ஈர்ப்பு. “தன்னை ஈர்த்த அந்த நபர் தன்னுடனே இருந்தால் வாழ்க்கையே மலருமே” என்ற நினைப்பு. இத்தகைய அனுபவங்களையும் உணர்வுகளையும் காதல் என்று அழைக்கிறோம்.

தன்னை ஈர்த்ததை அடைவதற்கு எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நினைப்பு மனிதனுக்கு ஆதி காலத்திலிருந்தே இருந்துவருகிறது.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உள்ளது. ‘காதலிலும், போரிலும் வெற்றி பெறுவதற்காகச் செய்யும் எதுவும் நியாயம்தான்’

பண்டைய காலத்தில் போர் செய்வதற்கென்று தனிச் சட்ட திட்டங்கள் இருந்தன. அதே சமயம், போர்த் தந்திரம் என்று தனிப் பாடங்களும் இருந்தன. தந்திரம் என்றாலே, சாமர்த்தியமாக எதிரியை ஏமாற்றுவதுதானே? அதுவேதான் காதலிலும் நடக்கிறது.

அவளுக்கு / அவனுக்குப் பிடிக்காது என்பதற்காக எத்தனை சுய விருப்பங்களை, பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டியதிருக்கிறது என்பதைக் காதலிப்பவர்களை, காதலித்தவர்களைக் கேட்டுப் பார்த்தால் தெரியும்.

இந்தப் போக்குதான் திருமணத்திற்குப் பிறகு காதல் இல்லாமல் செய்துவிடுகிறது.
முதலிலேயே சிறு எச்சரிக்கை.

இது காதல் என்பது கூடாது என்பதற்கான வாதம் அல்ல. எதிலெல்லாம் பிரச்சினை வரும் என்பதைத் தெரிந்துகொள்ளத்தான்.

காதலர்கள் இருபாலருமே காதலுக்காகச் சில மாற்றங்களைத் தெரிந்தே ஏற்றுக்கொள்கிறார்கள். பின்னால் பிரச்சினைக்குரிய விஷயங்களாக மாறுவதும் இவைதான்.

காதல் என்ற பெயரில் மாற்றிக் கொள்ளும் விஷயங்கள் அனைத்துமே சுயம் என்கிற அடையாளத்தைச் சார்ந்தவை. இவை ஒருவருடன் வெகு காலம் இருந்துவருபவை.

அதில் ஒரு பழக்கப்பட்ட, ஆகிவந்த, தனக்கான உகந்த நிலை இருக்கிறது. இதை ஆங்கிலத்தில் Comfort zone என்பார்கள். இது உடைகள், அவற்றின் வண்ணங்கள், உணவுத் தேர்வுகள் என விரியும்.

ஆனால், காதலை ஒட்டி வரும் கோரிக்கைகளும் இவற்றைத்தான் குறி வைக்கும்.
உதாரணமாக, நவீன உடைக்குப் பழக்கமான பெண்ணிடம், ‘உனக்கு புடவைதான் அம்சமா இருக்கு’ என்று மெதுவாகத் துவங்கும்.

அதேபோல, ஆணிடம், உனக்கு இந்த கலர் சட்டை, முடி அலங்காரம், பழக்கம், நட்பு வட்டம் சரியில்ல’ என்று ஆரம்பிக்கும்.

இதெல்லாமே, தனக்கு பிடித்தவர் எப்படி இருந்தால் தனக்கு ஏற்றுக் கொள்ளும்படியாக இருக்குமென்பதன் அடிப்படையில் ஆரம்பிக்கும் முயற்சி.

இப்படித்தான் காதல் என்ற பெயரில், ‘மனம் கவர்ந்தவரின் சுயத்தை அழிப்பது’ அல்லது தனக்குப் பிடித்தாற்போல மாற்றுவது நடக்கிறது.

காதலிக்கும்போது இதெல்லாம், ‘காதலுக்காகச் செய்தேன்’ என்ற ‘கர்வம்’ வேறு இருக்கும். அதற்கான முயற்சிகள் உன்னதமானவை போல தோன்றும். ஆனால் நமக்கான சுயத்தை நாமே இழக்கப் பயிற்சி செய்து இழக்கிறோம் என்று யாருமே நினைப்பதில்லை.

இது ‘கட்டுப்படுத்தும் செயல்’ என்பது, கட்டுப்படுத்துபவருக்கும் தெரியாது. இசைவோடு கட்டுப்படுபவருக்கும் தெரியாது.

அதெப்படித் தெரியாமல்போகும் என்றால், அதை ‘மனமுவந்து’ செய்வதால்தான். இதற்கு என்ன காரணம்?

‘எனக்கு, அவனை / அவளைப் பிடித்திருக்கிறது. அது நிறைவேற வேண்டுமானால் சிலவற்றை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற நினைப்புடனே அனைத்து மாற்றங்களையும் நிகழ்த்திக் கொள்கிறோம்.

இது சட்டைக்கு ஏற்றாவாறு உடம்பு என்பதைப் போன்றதுதான் என்பதை யாரும் உணர்வதில்லை. சட்டை ஒரே அளவில்தான் எப்போதும் இருக்கும்.

அதற்கேற்றவாறு உடம்பை ஒரு சமயத்தில், குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். ஆனால், மாறுவது உடம்பு, மாறாதது சட்டை, அதாவது எதிர்பார்ப்புகள்.

இதில் பாதிப்புகள் அதிகம். நமக்கான விருப்பத் தேவைகள் நம்மாலேயே ஒதுக்கி வைக்கப்படுதல், ‘வேற என்ன செய்யறது, அவனுக்கு / அவளுக்கு அதுதான் புடிச்சிருக்கு’ என்ற பொருமலும், அதிருப்தியும் இருந்துகொண்டே இருக்கும்.

ஆனாலும், விருப்பம் நிறைவேற, சிரித்துக்கொண்டே ஏற்றுக் கொள்கிறோம். இதில் இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது.

நாம் மாறுவது போல நமக்குத் தோதான மாற்றங்களை மெதுவாக சொல்லிப் புரிய வைக்கலாம் என நினைத்து முதலில் மாறிக் காண்பிப்பார்கள். இது பெரும்பாலும் ஆணாகத்தான் இருக்கும்.

பிறகு, ‘சரி இப்ப நீ’ என்று சொல்ல முடியாது. எப்படிச் சொன்னால், நாம் விரும்பினாற்போல மாற்றம் கொண்டு வரமுடியும் என்று நினைத்துச் செயல்பட வேண்டியிருக்கும். 

இதுவே மனதில் எரிச்சலை, அதிருப்தியை ஏற்படுத்தும். இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது.

ஆண் / பெண் குறிப்பிட்ட நபரைத் தேர்வு செய்து, விருப்பத்தை வெளிப்படுத்தி ஏற்றுக்கொள்ள செய்ததும், என்ன ஆகிறது? இருவரிடத்திலும் மற்றவர் மேல் ஒரு வித ‘உரிமை’ உருவாகிவிடுகிறது.

அது வரையில் மற்றவருக்கு இருந்துவந்த நட்புகள், பழக்கங்கள் அனைத்துமே, தன்னை மீறிச் செய்யப்படுபவையாகப் படுகிறது. பொறாமை வருகிறது. ‘என்னை விட’ அந்த இடம், பழக்கம், நபர் முக்கியமா என்று தோன்றுகிறது.

காதலிக்கும் சமயத்தில் மற்றவருக்குப் பிடிக்காத விஷயங்களைப் பேசுவதற்கு அல்லது உங்களுக்குப் பிடிக்காத அம்சங்களைப் பேசுவதற்கு, ஒரு தனி நடுக்கமே ஏற்படும்.

ஒருவேளை அவனுக்கு / அவளுக்குப் பிடிக்காவிட்டால் என்ன செய்வது? ‘அப்படின்னா, இது நாள் வரை என்னைப் பொறுத்திட்டிருந்த? என்னவெல்லாம் நெனைச்சிருப்ப? என்று எகிறி வர வாய்ப்புகள் என்பதால், சங்கடத்துடனே உறவு தொடரும்.

இப்படியே திருமணத்தில் முடியும் காதல், கொஞ்ச நாளில் எங்கு போய் முடியும் என்று சொல்லத் தேவையில்லை. கவிஞர் சொன்னது போல, காதல் என்பது கல்யாணம் வரைதான்.

அதன்பின் திருமணத்தோடு வரும் பிற பொறுப்புகள், கடமைகள், நடத்தை மாற்றங்களை ஏற்க நேரிடும்.

அப்போது, காதல் இரண்டாம் வரிசைக்குப் போகும். அதாவது, காதலிக்கும்போது நடந்துகொண்ட முறையிலிருந்து மாற்றங்கள் தானாக வெளிப்பட ஆரம்பிக்கும். இதுதான் நிதர்சனம்.

சரிப்பா, இதெல்லாம் சரிதான்; இதற்கு என்ன செய்வது எனக் கேட்கலாம். முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய பரஸ்பர உணர்வுகள் நிறைய இருக்கின்றன.
ஆணுக்கான குணாம்சங்கள், பெண்களுக்கானது, பொதுவானது என்ற புரிதல் முக்கியம்.

இது வாழ்க்கை முழுமைக்குமானது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். 
***

-தனஞ்செயன், மனநல ஆலோசகர்

Comments (0)
Add Comment