பறவையின் மனம் கொண்ட குழந்தைகள்!

குழந்தையின் செயல்பாடுகளில் நிரம்பியிருக்கும் பரிசுத்தமான அன்பு, பார்ப்பவரைக் கூட தொற்றிக் கொள்ளும். அதனால்தான், புதிதாக எந்த குழந்தையைப் பார்த்தாலும் அதனைக் கொஞ்சும் இயல்பு மனிதர்களிடம் உள்ளது.

விதிவிலக்காக முகம்சுளிக்கும் ஒரு சிலர் கூட, தங்களது தனிப்பட்ட வாழ்வின் சோகங்களையும் தோல்விகளையும் சுமந்து கொண்டிருக்கும் அனுபவத்தில் மட்டுமே தங்களது கவனத்தைத் திருப்பாமல் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களையும் நெகிழ வைத்துவிடும் சம்பவமொன்று சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்துள்ளது.

அங்குள்ள பிர்மிங்ஹாம் நகரைச் சேர்ந்தவர் அனுபர்பா சஹா. 7 வயது சிறுமியான இவர் சமீபத்தில் தன் பள்ளித் தோழர்களையும் தோழிகளையும் சந்திக்கச் சென்றார்.

அவர்களைப் பார்த்ததும், அவர் அணிந்திருந்த கண்ணாடியை மீறி கண்ணீர் வெளியே தெரிந்தது.

அந்த அளவுக்கு ஆனந்தம் அவரில் நிரம்பியிருந்தது. அந்த மகிழ்ச்சி அவரது சகாக்களையும் தொற்றிக்கொண்டது.

இதற்குக் காரணம் இருக்கிறது. பிறப்பின்போதே அனுபர்பாவுக்கு வலது கால் கிடையாது. இதனால், அவரை மிகக் கவனமாகக் கவனித்துக் கொண்டனர் அவரது பெற்றோர்.

சுமார் 13 மாதங்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனு வைக்கப்பட்டிருந்தார் என்கிறார் அவரது தந்தை அனிர்பன். 3 வயதில் அவருக்குச் செயற்கைக்கால் பொருத்தப்பட்டது.

ஆனால் அது எதுவும் அவரது இயல்பை வெளிக்கொண்டரவில்லை. மரத்தால் ஆன கால்களோ, ஊன்றுகோல்களோ அவரை மற்றவரிடமிருந்து வித்தியாசப்படுத்தியது.

எந்தக் குழந்தைக்கும் தான் மற்றவரைப் போல இல்லையே என்ற எண்ணம் வந்துவிடக் கூடாது.

குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கு அப்படியொரு சிந்தனை வரக் கூடாது என்பதற்காகச் சமூக ஆர்வலர்கள் பல முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதில் ஒன்று, உலோகத்தில் ஆன செயற்கைக்கால்களை மாற்றுத்திறனாளிகளுக்கு அளிப்பது.

சமீபத்தில் பாரா ஒலிம்பிக்ஸ் நடத்திய பிரிட்டன், இந்த வசதியை இளம் குழந்தைகளுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறது. அந்த வகையில், அனுபர்பாவுக்கும் செயற்கைக்கால் பொருத்தப்பட்டது.

இதனைத் தினமும் கழற்றி மாட்டிக்கொள்ளலாம். அது மட்டுமல்ல, அனுபர்பாவுக்குப் பிடித்த பிங்க் நிறத்திலேயே இந்த கால்கள் உள்ளன.

ஆனால் எனக்கு வயலட் கலரும் பிடிக்கும் குழந்தைத்தனத்துடன் பதிலளிக்கிறார் இந்த சிறுமி.

தற்போது விரைவாக ஓட முடிகிறது என்றும், நடனமாட முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார் அனு.

இந்த எண்ணம் தான், அவரைப் பார்த்ததும் தோழிகள் மகிழ்ச்சியில் திளைத்ததற்குக் காரணம்.

அதனால் தனது தோழியின் மகிழ்வைத் தங்களுடையதாக்கிப் பலமடங்காகப் பெருக்கினர்.

இந்த வீடியோ உலகம் முழுவதும் வைரலானது. இப்போதும் கூட பல சமூகவலைதளப் பக்கங்களில் இதனைக் காணலாம்.

இந்த வீடியோவினால் பாக்ஸ், டெய்லி மெயில், நியூயார்க் டைம்ஸ் உட்பட சர்வதேச ஊடகங்களில் இடம்பிடித்தார் அனு.

கால்கள் பொருத்தப்பட்ட பொழுதில் இருந்ததைவிட, பள்ளியில் நுழைந்ததும் தனது தோழிகளோடு ஓடிப் பிடித்து விளையாடியபோது பெரிதும் மகிழ்ந்திருப்பார் அனு.

அந்த வீடியோவைப் பார்க்கும் எல்லோருக்கும் இது புரிவதால்தான், அந்த நெகிழ்வு ஒவ்வொருவரையும் தொற்றுகிறது.

கெட்ட எண்ணங்கள் வேகமாகப் பரவினாலும், நல்ல எண்ணங்கள் மட்டுமே நிலைத்திருக்கும். மனதின் ஆழத்தில் அப்படியொரு நெகிழ்வைப் புதைக்கக் கொடுத்திருக்கிறது அனுபர்பாவின் மகிழ்ச்சி.

-பார்வதிநாதன்

Comments (0)
Add Comment