தஞ்சாவூர் சந்துகளின் சரித்திரம்!

நூல் அறிமுகம்:

சோழர்கள் கால தஞ்சாவூர் பேசப்படுகின்ற அளவிற்கு, நாயக்கர், மராட்டிய மன்னர்கள் கால தஞ்சை கோட்டைப் பகுதிகள் ஆய்வு செய்யப்படவில்லை.

குறிப்பாக தஞ்சை கோட்டையின் உள்ளும், புறமும் உள்ள ராஜவீதிகளும், சாமான்யர்கள் வாழ்விடமான தெருக்களும் குறுகலான சந்துகளும் ஆய்வாளர்கள் கவனத்தைப் பெறவில்லை.

தஞ்சாவூர் சந்துகளில் சென்றால் பச்சைக் குதிரைத் தாண்டித்தான் ஒருவரை ஒருவர் கடந்து செல்லமுடியும்.

தஞ்சாவூர் கவிராயர், இளமையில் தஞ்சை கோட்டை சந்துகளின் கனவுகளையும் கற்பனைகளையும் சுமந்து வாழ்ந்தவர்.

தஞ்சை சந்துகளின் வண்ணக் கலவை வாசனையை தன் எண்ணங்களில் சுமந்துகொண்டு இருந்தவர்.

தஞ்சை மண்ணிற்கு, தான் ஆற்றவேண்டிய ஒரு பெரும் கடமையாக எண்ணி, நெஞ்சக் கூட்டில் அடைந்து கிடந்த தஞ்சை சந்துகளுக்கு தன் எழுத்து வடிவில், புது வடிவமும் வரலாறும் வழங்கியிருக்கிறார்.

தஞ்சை மண்ணின் மைந்தர்களுக்கே மறந்துபோன, மனதில் இருந்து மறைந்து போன சந்துகளின் கதைகளை சுவைபட ஒரு சாமான்யன் ஒரு சாமான்யனுக்கு சொல்வதுபோல் எளிமையாகப் பதிவு செய்திருக்கிறார்.

தஞ்சாவூர் சின்னஞ்சிறு சந்துகளில் தவிழ்ந்து வளர்ந்து வானந்தொட்ட பன்முகத்திறன் கொண்ட ஆளுமைகளை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர் ஒன்றின் தெருக்கள், குளங்கள், சந்துகள் பற்றிய முதல் ஆய்வு என்ற பெருமையை கவிராயரின் கைவண்ணம் பெறுகிறது.

****

தஞ்சாவூர் சந்துகளின் சரித்திரம்: தஞ்சாவூர்க் கவிராயர்
வெளியீடு: சந்தியா பதிப்பகம்,
77, 53வது தெரு, அசோக் நகர்,
சென்னை – 600 083

தொடர்புக்கு: 044-24897969,
விலை ரூ. 175

Comments (0)
Add Comment